Tuesday, August 4, 2015

மதுமகிழ் ராஜ்ஜியத்தின் மாஸ்மாக் மதுக்கடைகள்…


த்துப் பதினஞ்சு வருசமாக் குடிச்சிட்டிருந்த ராஜ்ஜியம் தான் அது… இப்ப கொஞ்சம் பேரு மதுக்கடைகளை மூடுங்கனு வந்து நிக்கறாங்க.

தேசத்தின் பெயரே மதுமகிழ் தேசம்னா பாத்துக்கங்களேன்.

ராஜா மதுவாணன் -மக்களிடம் வேலை வாங்கிக் கொடுத்த சம்பளத்தை, மந்திரி பெயரில் ஊரெல்லாம் மாஸ்மாக் என்று மதுக்கடைகளைத் திறந்து வைத்து திரும்பக் கஜானாவுக்கே கொண்டு வந்துவிடும் மதியூகி.

இல்லாவிட்டால்… ராஜா சொகுசாய் வாழ்வது எப்படி.?

இந்தத் திட்டத்தின் முக்கிய மூளையே மதுமகிழ் தேசத்தின் மகா மந்திரிதான்.

அதிலும் கள்ளு, சாராயம் போன்றவற்றால் கிடைத்த வருமானம் போதாது என்று சமீபமாய் விஸ்கி, பிராந்தி, ஜின், ரம் என ஃபாரின் சரக்குகளும் கலந்து கட்டி வியாபாரம் படுஜோராய் போய்க் கொண்டிருந்த காலத்தில்... கடையை மூடச் சொல்லி வந்து இத்தனை பேர் நிற்கிறார்கள்.

ராஜா இதில் தன் பெயர் கெடக்கூடாது என்று, மகா மந்திரிதான் இப்போது இந்தப் பிரச்னையைக் கையாள வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

கடைகளை மூடிவிட்டால் நஷ்டம் ராஜாவுக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் என்பதை உணர்ந்த மகா மந்திரி… மாஸ்மாக் மதுக்கடைகளை மூடச் சொல்லி வந்திருப்பவர்களைப் பார்த்தார்.

சமூக சேவகர்கள், ஊர்ப் பெரியவர்கள், அகிம்சாவாதிகள், குருகுல மாணவர்கள் மற்றும் கூடவே கொஞ்சம் பெண்கள்.

தனக்கு சப்போர்ட்டாய் இருக்கும் குடிகாரர்கள் ஒருத்தரையும் கூட்டத்தில் காணோம்.

மகா மந்திரி இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தபடி சொன்னார்.

“எல்லோரும் அரசவைக்கு வந்துடுங்க. நாம இதை சபைல வச்சு முடிச்சிடுவோம்.!”.

அரைமணியில் அரசவை கூடியதும்… இதுதான் அன்றைய முதல் பிரச்னையாக ஆரம்பித்தது.

மகா மந்திரி மாஸ்மாக் எதிர்ப்பாளர்களை சபை நடுவே வரச் சொன்னார்.

அவர்கள் எல்லோரும் கூடியதும் மகாமந்திரி சபையை பார்த்து பேச ஆரம்பித்தார்.

“சபையோர்களே… ராஜ்ஜியத்தின் அநேக வளர்ச்சிப் பணிகள் இந்த மாஸ்மாக் வருமானத்தின் மூலமாகவே நடக்கிறது என்பது தெரியும். ஆனால், குடியால் ஏற்படும் பாதிப்பு குறித்து இங்கே வந்திருக்கும் நம் குடிமக்கள் சொல்வதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். ஆகவே மிக எளிதான ஒரு போட்டி வைக்க முடிவு செய்திருக்கிறேன். அதில் இவர்கள் ஜெயித்தால் நாளையிலிருந்தே நாட்டில் மதுவிலக்கு. இதில் தோற்றாலோ இவர்கள் இனி எக்காலமும் மதுவிலக்கு பற்றியே பேசக்கூடாது. ஒப்புக் கொள்கிறீர்களா.?”.

வந்திருந்தவர்களோ, ”முதலில் போட்டியைச் சொல்லுங்க மந்திரியாரே. பிறகு முடிவு செய்யலாம்.!” என்று உஷாராய்ச் சொல்ல, மகாமந்திரி போட்டி விதிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

“எல்லோரும் தயாரா இருக்கணும். விதூஷகன் மூணு எண்ணுவான். மூணு முடிஞ்சதும் மணி அடிக்கும். மணி அடிச்சதும் நான் ஒரு பழத்தோட பேரையோ, இல்லைனா ஒரு கலரையோ சொல்லுவேன். நான் பழத்தோட  பேரை சொன்னா எல்லோரும் வலது பக்கம் இருக்கற ரூமுக்குள்ள போயிடணும். கலரோட பேரச் சொன்னா எல்லோரும் இடது பக்கம் இருக்கற ரூமுக்குள்ள போயிடணும். அதுக்கப்பறம் ரெண்டு ரூமுக்குள்ள போயிருக்கறவங்க எண்ணிக்கைய வச்சு மதுவிலக்கை முடிவு செய்வோம். எங்கயும் போகாம சபைலயே நிக்கறவங்கள நாம கணக்கில எடுத்துக்க வேண்டாம். சரிதானே.!!”.

வந்திருந்தவர்கள் யோசிக்கவே தேவையில்லாத அளவுக்கு போட்டி சுலபமாய் இருந்ததும், வந்தவர்கள் எல்லோருமே மதுவிலக்குக்கு ஆதரவானவர்கள் என்பதாலும் ’ஜெயிக்கப் போவது நாம்தானே...’ என உடனே போட்டிக்கு ஒப்புக் கொண்டார்கள்.

போட்டி அப்போதே ஆரம்பமானது.

சபையில் எல்லோரும் ஆவலுடன் போட்டியைக் காணத் தயாராக, சபை நடுவே இருந்தவர்கள் போட்டிக்குத் தயாராய் அலெர்ட்டாய் நிற்க, விதூஷகன் எண்ணத் துவங்கினான்.

“ஒன்.!”

“ட்டூ.!!”

“த்ரீ.!!!”

எண்ணி முடித்ததும், “டொய்ங்.!!!” என்று பெரிய சத்தத்துடன் மணி அடித்தது.

அடுத்து எல்லோரும் மகாமந்திரியின் வார்த்தைக்காக, எந்தப் பக்கம் பாய்வது என்ற ஆர்வத்துடன் அவர் வாயையே பார்த்துக் கொண்டிருக்க…

மதுமகிழ் தேசத்து மகா மந்திரியின் குரல் ஓங்கி ஒலித்தது.


“ஆரஞ்ச்.!!!!!!!”
.
.
.