Saturday, August 17, 2013

பிரார்த்தனை



சுற்றுலா வந்து வழி தவறிப் பாலைவனத்தில் மாட்டிக் கொண்ட இரு நண்பர்களுக்கும் எப்படித் தப்பிப்பதென்றே தெரியவில்லை.

ரெண்டு மூன்று நாட்களாக வெயிலிலும் இரவிலும் சோறு தண்ணியில்லாமல் நடந்து திரிந்தும் சாப்பிட குடிக்க ஒன்றும் கிடைக்காமல் ஓய்ந்து போனார்கள்.

மூன்றாம் நாள் மதியம் கிட்டத்தட்ட இருவரும் ஓய்ந்துபோன சமயம், 

தாகத்துக்கான தண்ணீருக்காய் தவித்து கடைசி முயற்சியாய் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய அமர்ந்தார்கள்.

முதல் நண்பன் மனமுருகி கிட்டத்தட்ட அரைமணி நேரம் பிரார்த்தனை செய்திருப்பான்.

இரண்டாவது நண்பன் ரெண்டு நிமிடம் கூட பிரார்த்தனை செய்திருக்க மாட்டான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்கள் சோலையுடன் கூடிய ஒரு நீரூற்றைக் கண்டார்கள்.

நல்ல அமிர்தம் போன்ற நீரைக் குடித்து ஓய்வெடுத்ததும் அடுத்து உணவுக்காக பிரார்த்தனையை துவங்கினார்கள்.

வழக்கம் போல முதலாமவன் அரைமணி பிரார்த்தனை செய்ய, இரண்டாமவன் அரை நிமிடம்கூட பிரார்த்திருக்க மாட்டான்.

அடுத்த நிமிடம், அவர்கள் கண்முன்னே ஒரு அற்புத உணவுத் தட்டுடன் கூடிய டேபிள் தோன்ற அதையும் சாப்பிட்டு முடித்தார்கள்.

வயிறு நிறைந்ததும் முதலாமவனுக்கு இப்போது இரண்டாமவனைப் பார்த்து வெறுப்புத் தோன்ற ஆரம்பித்தது.

நாம் அரை மணி செய்யும் பிரார்த்தனையின் பலனை இவன் அரை நிமிடம்கூட செய்யாமல் அனுபவிக்கிறானே என கடுப்பு அதிகரித்தது.
கொஞ்ச நேரம் கழிந்தது.

இருவரும் வீட்டுக்குத் திரும்ப வழி கேட்டு இறைவனை நோக்கி பிரார்த்தித்தார்கள்.

வழக்கம்போலவே முதலாமவன் அரைமணிக்கு குறையாமல் பிராத்தித்து எழ, இரண்டாமவன் அரை நிமிடத்தில் தனது பிராத்தனையை முடித்துக் கொண்டான்.

பத்தே நிமிடத்தில் அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல தேவதூதர்கள் வாகனத்துடன் வந்து நின்றார்கள்.

வாகனத்தைப் பார்த்ததும் பரவசத்துடன் முன்னால் ஓடிய முதலாமவன், வாகன ஓட்டியிடம் சொன்னான்.

“நான் கஷ்டப்பட்டு செய்த பிரார்த்தனையின் பலனை என் நண்பனும் அனுபவிக்கிறான். இந்தமுறை என் பிரார்த்தனையின் பலனாய் வந்த இந்த வண்டியில் அவனை நம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாம்.!”.

சொன்ன முதலாமவனைப் பார்த்து அந்த வாகன் ஓட்டி சிரித்தார்.

“இந்த வண்டி உண்மையில் உன் பிரார்த்தனையின் பலனாக வரவில்லை. உன் நண்பனின் பிரார்த்தனைக்காகவே வந்திருக்கிறது.!”.

கேட்ட முதலாமவன் அதிர்ந்து அந்த வாகன ஓட்டியைப் பார்த்து சந்தேகத்துடன் கேட்டான்.

“அது எப்படி… நான் அரைமணி பிரார்த்தனை செய்யும் போது அவன் அரை நிமிடம் கூட பிரார்த்திக்கவில்லையே.!”.

அவன் கேட்டதும் வாகன ஓட்டி சிரித்தபடியே சொன்னான்.

“ஆமாம். உன்னுடைய பிரார்த்தனைகள் எல்லாம் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றே இருந்தது. அதனால் நீளமாய் இருந்தது. ஆனால், உன் நண்பன் கடவுளிடம் என்ன கேட்டான் தெரியுமா.? ’எனக்கு எதுவும் செய்யும் முன்னர் என் நண்பனின் பிரார்த்தனையை நிறைவேற்று இறைவா.!’ என்பதே. அதனால் அவன் பிரார்த்தனை எப்போதும் சிறிதாகவே இருந்தது. கடவுள்  எப்போதும் ஒருவன் தனக்காக பிரார்த்திப்பதை விட அடுத்தவருக்காக பிரார்த்திப்பதையே உடனடியாய் நிறைவேற்றுவார். இப்போது புரிகிறதா.?”..

வாகன ஓட்டி கேட்க கேட்க முதலாமவன் தலை  வெட்கிக் கவிழ்ந்தது.
.
.
.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல கதை...

Unknown said...

"கடவுள் எப்போதும் ஒருவன் தனக்காக பிரார்த்திப்பதை விட அடுத்தவருக்காக பிரார்த்திப்பதையே உடனடியாய் நிறைவேற்றுவார்".

சரியாகச் சொலலி இருக்கிறீர்கள்

TG said...

"கடவுள் எப்போதும் ஒருவன் தனக்காக பிரார்த்திப்பதை விட அடுத்தவருக்காக பிரார்த்திப்பதையே உடனடியாய் நிறைவேற்றுவார்". இப்படியான நல்ல மனிதர்கள் மிகவும் அருகிவிட்ட நேரத்தில் இதனை போன்ற நல்ல கருத்துக்களை தெரிவிக்கும் உங்களுக்கு என் நன்றி.

Post a Comment