Thursday, June 6, 2013

சர்க்கஸ்



நான் என்னுடைய பத்தாவது படிக்கும்போது நடந்தது இது.

அன்று என் அப்பா என்னை சர்க்கஸ் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்.

எங்க வீட்டிலிருந்து  சர்க்கஸ் நடக்கும் இடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரமும், என்னை சைக்கிளில் டபிள்ஸ் வைத்து மிதித்து சென்றிருந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்க்கஸுக்கு நல்ல கூட்டம் இருந்தது.

நானும் என் அப்பாவும் க்யூவில் நின்று மெல்ல மெல்ல நகர்ந்து போன போதுதான் கவனித்தேன்.

எங்களுக்கு முன்னால் நின்றிருந்த குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பமாய் இருந்தது.

அப்பா, அம்மா மற்றும் பதினைந்து வயதுக்குடபட்ட ஆறு குழந்தைகள் என இருந்தது அந்தக் குடும்பம்.

கிராமத்தை சேர்ந்தவர்கள் போலவும் இல்லை அவர்கள்.

பார்க்கவும் அவ்வளவு வசதியாய் தெரியாவிட்டாலும்... குழந்தைகள் ஆறும் சுத்தமான உடை உடுத்தி வரிசையாய் இரண்டிரண்டு குழந்தைகளாய் கையைக் கோர்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தன.

அந்த அப்பாவும் அம்மாவும் கூட படித்தவர்கள் போலத் தெரியவில்லை என்றாலும், அவர்களும் தங்கள் குழந்தைகள் போலவே கைகளைக் கோர்த்துக் கொண்டு நின்றிருந்தது, அவர்கள் எவ்வளவு அன்பான தம்பதிகள் என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

அவைகளின் பேச்சில் அந்த சர்க்கஸை சுற்றி கட்டியிருந்த பேனர்களும், அன்று பார்க்கப் போகும் மிருகங்களும், அவைகளின் சாகசங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளும் தெறித்துக் கொண்டிருந்தன.

அந்த அப்பா அம்மா முகங்களிலும் தமது குழந்தைகளுக்கு ஒரு சந்தோஷத்தைத் தரப்போகும் ஒளியாய் மகிழ்வு தெரிந்து கொண்டிருந்தது.

வரிசை மெல்ல நகர்ந்து, இப்போது எங்களுக்கும் டிக்கெட் கவுன்டருக்கும் இடையே அந்தக் குடும்பம் மட்டுமே இருந்தது.

டிக்கெட் கவுன்டர் அருகே சென்றதும் அந்தக் குழந்தைகளின் அப்பா மெல்லக் குனிந்து, "ஆறு குழந்தைகள் ரெண்டு பெரியவங்க.." என்று சொன்னதும், கவுன்டரில் இருந்தவர் டிக்கெட்டை கிழித்தவாறே தொகையைச் சொன்னார்.

தொகையைச் சொன்னதுதான் தாமதம்... அந்த அப்பாவின் முகம் அப்படியே கறுத்துப் போனது.

மனைவியை பிடித்திருந்த கைகள் தன் பிடியை விட்டு பாக்கெட்டைத் தொட்டது.

சந்தோஷம் எல்லாம் வடிந்துபோக, கம்மிய குரலில் டிக்கெட் கவுன்டரில் இருந்தவரிடம் மறுபடி கேட்டார்.

"சார்... எவ்ளோ சொன்னீங்க.!".

அவர் மறுபடி தொகையைச் சொல்ல, அந்தக் குழந்தைகளின் அப்பாவின் முகம் கிட்டத்தட்ட செத்தே விட்டது.

அவரிடம் கையில் அவ்வளவு தொகை இல்லை போலும்.

அந்தக் குழந்தைகளோ இவை எதையும் கவனிக்காமல் சர்க்கஸ் போஸ்டரில் விலங்குகள் செய்யும் குறும்பு ஃபோட்டோக்களை பற்றி தங்களுக்குள் ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தன.

அவர் என்ன செய்யப் போகிறார் என்று நானும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவர் தன் குழந்தைகளிடம் விஷயத்தைச் சொல்ல திரும்பும் அந்த விநாடியில்... என் அப்பா ஒரு காரியம் செய்தார்.

தன் பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாயை எடுத்துக் கீழே போட்டு, அதை எடுப்பதுபோல் எடுத்து அந்தக் குழந்தைகளின் அப்பாவிடம், "சார்... இது உங்க நூறு ரூபாயா பாருங்க... கீழ போட்டுட்டீங்க போல.!" என்று நீட்டினார்.

அவருக்கும் என் அப்பா செய்த காரியம் விளங்கிவிட்டது.

"அண்ணே... என்னண்ணே..." என்றவாறு தயக்கத்துடன் நின்ற அவரின் கைகளைப் பிடித்து என் அப்பா, "புடிங்க சார்... ஒன்னும் யோசிக்காதீங்க. குழந்தைகளை கூட்டிட்டுப் போங்க..!" என்று ரூபாயை அழுத்த..

"ரொம்ப நன்றிங்க அண்ணா.. இதுக்கு நான் என்ன செய்யறதுனே தெரியல..!" என்ற போது அவருடைய கண்கள் கலங்கியே விட்டது.

கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகளுடன் சந்தோஷமாய் சர்க்கஸ் கூடாரத்துக்குள் நுழைவதை பார்க்கும்போது... என் அப்பா எவ்வளவு பெரிய மனிதர் என்று எனக்கு மிகப் பெருமையே தோன்றியது.

ஒன்றை இப்போது நான் மறக்காமல் கூறியே ஆக வேண்டும்.

அன்று என் அப்பாவிடம் இருந்ததே அந்த நூறு ரூபாய் மட்டுமே என்பதால்... அன்று நாங்கள் இருவரும் சர்க்கஸ் பார்க்காமலேதான் வீடு திரும்பினோம்.!.
.
.
.
# எப்போதோ படிச்ச கதை

8 comments:

ddrd said...

super mam

Mariappan said...

அருமை

maithriim said...

இன்றைய சமுதாயத்துக்கு வேண்டிய கருத்து.

amas32

கும்மாச்சி said...

இது மாதிரி ஆட்களும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வாழ்க்கையை எதிர்கொள்ள தைர்யம் அளிக்கிறது.

Anonymous said...

கதை அருமை! :-)

Anonymous said...

மனிதர்கள் வாழ்ந்த காலம்

chinnapiyan said...

so sad :(

இராஜராஜேஸ்வரி said...

மனதை தொட்ட சர்க்கஸ்..!

Post a Comment