Tuesday, December 4, 2012

மனைவியின் காதலன்



தில்லுதுர எப்போதும் தன் மனைவியை மதித்ததே இல்லை.

என்னவோ திருமணமாகிஆறேழு வருடங்கள் ஆகிவிட்டதே தவிர, மனைவியின் அழகின் மேல் அவருக்கு வருத்தம் இருந்து கொண்டேதான் இருந்தது.

கருப்பு நிறம்.

குறைந்த படிப்பு.

குள்ளம்.

நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கிடையாது.

தனக்கு மேட்சாயில்லை என ஆயிரம் குறைகள் அவருக்கு.

இது பற்றி சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் பேச்சில் மனைவியை குத்திக் கொண்டேதான் இருப்பார்.

தன்னைக் காதலித்த பெண்களை, இப்போதும் தன்னை ஆராதிக்கும் அழகிகள்  என்று அவர் தற்பெருமைகள் வேறு.

அவர் மனைவியும் அப்படியொன்றும் அழகு கம்மியில்லை என்றாலும், இல்லாத குறையை கணவர் குத்திக் காட்டும் போது அவருக்கு வருத்தமாய்த்தான் இருக்கும்.

அதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது சொல்லிக் கொள்ளலாம் என்று காத்திருந்த தில்லுதுர மனைவிக்கு, பையனின் காதுகுத்துக்காக மாமனார் வீட்டை அழைக்க தில்லுதுர வந்த போது அந்த சான்ஸ் கிடைத்தது.

தனது கல்லூரிக்காலத்தில் தன்னைக் காதலித்து தோற்று, இன்றும் தேவதாஸாய் சுற்றும் சுந்தரை தூரத்தில் பார்க்க நேர்ந்ததும், அவர் தில்லுதுரயிடம் அவனைக் காட்டினார்.

"ஏங்க... அதோ அந்த ஆளைப் பாத்தீங்களா.?".

தில்லுதுர அசுவாரஸ்யமாய் அவர் காட்டிய அந்த ஆளைப் பார்த்தபடி கேட்டார்.

"எது... அந்த அழுக்கு சட்டையும் தாடியுமாய் குடிச்சுத் தள்ளாடிட்டுப் போறானே... அந்த ஆளா.?"

தில்லுதுரயின் மனைவி இப்போது இன்னும் உற்சாகமாய்ச் சொன்னார்.

"அந்த ஆள் ஏன் அப்படி இருக்கார் தெரியுமா.?"

தில்லுதுர குழப்பத்துடன் தலையாட்டினார்... "ம்ஹூம்...தெரியலையே.!!".

தில்லுதுர மனைவி தன் கணவனிடம் தன் அழகையும் ஒருவன் ஆராதித்த கதையை மிகுந்த சந்தோஷத்துடன்  சொன்னார்.

"பத்து வருஷம் முன்னாடி இந்த சுந்தர் என்னைக் காதலிச்சாரு. ஒருதடவை எனக்கு லவ் லெட்டர் கூட கொடுத்தாரு. நான் அவர் காதலை ஏத்துக்க மறுத்துட்டேன். நான் அவர் காதலை ஏத்துக்க மறுத்த அந்த கணத்துலருந்து இன்னை வரைக்கும் அவர்  இப்படித்தான் இருக்காரு..!".

தில்லுதுர மிகவும் அதிர்ந்துபோய் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

"என்னது அவன் உனக்கு லவ் லெட்டர் குடுத்து நீ மறுத்ததால தான், பத்து வருஷமா இந்த ஆளு இப்படி இருக்கானா.?".

தில்லுதுர மனைவி இப்போது மிகுந்த கர்வத்துடன் 'ஆமாம்...!' என்பதுபோல் தலையை ஆட்ட...

தில்லுதுர அதே ஆச்சர்யத்துடன் தொடர்ந்து சொன்னார்.

"ஆனாலும்...  அதை ஒரு மனுஷன் பத்து வருஷம் செலிபரேட் பண்ணறதெல்லாம் ஓவர் இல்லையா.?".
.
.
.