Thursday, November 29, 2012

வண்டி பஞ்சர்

நல்ல மதியத்தில் தில்லுதுர வண்டி பஞ்சராகி நின்ற தெருவில் கண்ணுக்கு எட்டிய வரையில் ஆள் நடமாட்டமே இல்லை.

தில்லுதுர தனியாய் வந்ததை விடக் கொடுமையான விஷயம், வண்டி பஞ்சரான இடத்துக்கு எதிரே இருந்த மனநலவிடுதிக் காப்பகம்.

உண்மையிலேயே தில்லுதுரக்கு அன்று கெட்ட நேரந்தான் போல.

பயத்துடனே ஸ்டெப்னியை மாட்ட கழட்டிய பஞ்சரான வீலின் நாலு நட்டு-களும் வைத்திருந்த பேப்பரோடு திரும்பி பக்கத்திலிருந்த மேன்ஹோலில் விழுந்து தொலைந்தது.

'என்ன செய்யலாம்.?' என பதட்டத்தோடு யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த மனநல விடுதி உள்ளிருந்து ஒரு ஆள் வெளியே வந்தவர் நேரே தில்லுதுரயைப் பார்த்து வந்தார்.

பக்கம் வந்தவரை பயத்துடன் கவனித்தார் தில்லுதுர.

யூனிஃபார்ம், ஐடி கார்டு, கலைந்த தலை எல்லாம் அவர் அந்த மனநலவிடுதியின் இன்-பேஷன்ட் என்பதை தெளிவாய் சொன்னது.

அவரோ அலட்சியமாய், "என்ன வண்டி பஞ்சரா.? என்ன யோசிச்சிட்டிருக்கீங்க.?" எனக் கேட்டதும் தில்லுதுர பிரச்னையை சொல்லி, "இப்ப என்ன செய்யறதுனு புரியல..!" என்று பயத்துடனேயே சொன்னார்.

வந்தவரோ தோளைக் குலுக்கிக் கொண்டு, "இதுல புரியாத அளவுக்கு என்ன இருக்கு.? தோ... ஒரு மைல் தூரத்துல ஒரு மெக்கானிக் ஷாப் இருக்கு. போய் நாலு நட்டு கடனா வாங்கிட்டு வரலாம். இல்ல மத்த மூணு வீல்லருந்தும் ஒவ்வொரு நட்டை கழட்டி இந்த நல்ல வீலை மாட்டி
மெல்ல ஓட்டிகிட்டு போயி அங்கயே கூட சரி பண்ணிக்கலாம். என்ன.?"

கேட்டுவிட்டு அவர் நகர ஆரம்பிக்க... தில்லுதுர ஆச்சர்யம் கலந்த சந்தேகத்துடன் அவரை கூப்பிட்டார்.

"சார்... அப்ப நீங்க.?"

அவர் புன்னகையுடன் திரும்பிக் கேட்டார்.

"என்ன நான் இவ்வளவு தெளிவா பேசறேனே... பைத்தியமா இல்லையானு தெரியனும். அதானே.?" என்றவர் தொடர்ந்து சொன்னார்.

"நான் சத்தியமா பைத்தியமே தான்.!".
அவர் அப்படிச் சொன்னதும் தில்லுதுர ஆச்சர்யத்துடன் கேட்டார்.

"அப்பறம் எப்படி சார்... இப்படி ஒரு சூப்பர் ஐடியாவை சொன்னீங்க.?".

தில்லுதுர கேட்டதும் அவர் சிரித்தபடியே தில்லுதுரயைப் பார்த்துச் சொன்னார்.

"எப்படின்னா, நான் வெறும் பைத்தியந்தான்... ஆனா, உன்ன மாதிரி மடையன் கிடையாது.!".
.
.
.