Thursday, November 11, 2010

மளிகைக்கடை நாடார்

மருதாசல நாடார் தனது மரணப் படுக்கையில் கிடந்தார்.

மருதாசல நாடாரை எங்க பக்கம் மளிகைக்கடை நாடார் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.

எங்கோ உடன்குடியில் பிறந்தவர், இன்று சென்னையில் இவ்வளவு லட்சத்திற்கு சொத்துக்கள் சேர்த்திருக்கிறார் என்றால்... அதற்கு அவருடைய மளிகைக்கடையும் மாறாத உழைப்பும்தான் காரணம்.

அப்பேர்ப்பட்ட மருதாசலநாடார் தான் இப்போது படுத்த படுக்கையாய் ஆகிவிட்டார்.

ரெண்டு நாளாய் தொடர்ந்து மயக்கத்தில் இருந்தவர், காலை ஒரு பதினோரு மணிப் போல கண்ணைத் திறந்ததும், அருகில் சோகமே வடிவாய் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

"மூத்தவன் எங்கேடி...?"

மனைவி அவரது கைகளை ஆறுதலாய்ப் பற்றிக் கொண்டு பதில் சொன்னார்.

"அதோ பாருங்க... அந்த பெஞ்ச்லதான் உக்காந்திருக்கான். நீங்க நல்லபடி எந்திரிச்சு வரணும்னு சாமி கும்பிட்டுகிட்டு இருக்கான்..."

மருதாசல நாடார் அடுத்துக் கேட்டார்.

"ரெண்டாவது மகன் இருக்கானா..?".

மனைவி பதில் சொன்னாள்.

"அவனும் மூத்தவனுக்குப் பக்கத்திலதான் நிக்கறான் பாருங்க.."

இதைக் கேட்டதும், மருதாசல நாடார் படுக்கையில் தட்டுத்தடுமாறி எழுந்து உட்காரப் பார்த்தார்.

அதைக் கண்டதும் பதறிப் போன மனைவி கேட்டார்.

"என்னங்க... என்ன வேணும் சொல்லுங்க..?".

மருதாசல நாடார் கேட்டார்.

"எ..எ..என் மூணாவது பையன்...?".

கேட்கும்போதே மூச்சு வாங்கியது அவருக்கு.

இதைக்கேட்டதும் அவர் மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.

'இவருக்குத்தான் குடும்பத்தின்மீது எவ்வளவு அன்பு..?' என்று எண்ணியபடியே மூன்றாவது மகன் சொன்னான்.

"அப்பா... நான் இங்கேதான் இருக்கேன்... நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம். நீங்க இந்த நேரத்துல எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க..!".

மரணப் படுக்கையில் இருந்த மருதாசல நாடார் சற்றே கோபமாய் திணறித் திணறிக் கோபமாய்க் கத்தினார்.

"நீங்க எல்லோரும் இங்கே இருந்தா நான் கவலைப்படாம எப்படி இருக்க முடியும்..? என் கவலையே அதுதான்டா ... எல்லோருமே இங்கே இருந்தா அப்ப அங்கே கடையை கவனிக்கறது யாரு..?".
.
.
.

4 comments:

பார்த்திபன் நாகராஜன் said...

அருமை ... ;)

venkat said...

ஏற்கனவே எங்கோயோ படித்த நினைவுகள். அருமை

Unknown said...

கடை வைக்கப் பட்ட கஷ்டம் அவருக்குத் தானே தெரியும்..?

Rajasubramanian S said...

நாடார் சொன்ன கருத்து, நல்ல கருத்து.நான் இங்க கருத்து எழுதிக்கொண்டிருந்தா என் வேலையை யார் பாக்கிறது!
ராஜசுப்ரமணியன் S

Post a Comment