ஆற்றுக்குள் சற்றே இறக்கித் தனது வண்டியைக் கழுவிக் கொண்டிருந்தார் அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவர்.
கொஞ்ச நேரம் கழுவிய பிறகு, இந்தப் பக்கமாய் வந்த போதுதான் ஆற்றங்கரையில் நாயுடனும் பூனையுடனும் நின்றிருந்த அந்தச் சிறுவன் டேனியைக் கவனித்தார்.
அவன் கையில் இழுத்துச் செல்லக்கூடிய அளவில் சற்றே பெரிய வெள்ளை வண்டியை வைத்திருந்தான்.
அது பார்க்க ஒருமாதிரி ஆம்புலன்ஸ் போலவேதான் இருந்தது.
அந்த வண்டியின் உடலில், அவன் ஆம்புலன்ஸைப் பார்த்துப் பார்த்து அதைப் போலவே அலங்காரம் செய்து கொண்டிருந்தான்.
அவர் வண்டியைக் கழுவி முடித்தபோது, டேனியும் தனது வண்டியைக் கிட்டத்தட்ட ஆம்புலன்ஸ் போலவே மாற்றியிருந்தான்.
வண்டியை அவர் துடைக்க ஆரம்பித்த போது அவர் டேனி செய்வதைக் கவனித்து அதிர்ந்து போனார்.
அவன் கையிலிருந்த ஒரு கயிற்றால் அவனுடைய வண்டியை, அந்த நாயின் கழுத்தைச் சுற்றி இழுத்துச் செல்ல வசதியாய் ஒரு பெல்ட்டால் கட்டியிருந்தான்.
கூடவே மற்றொரு கயிற்றால் அந்தப் பூனையின் வயிற்றை அழுத்திப் பிடிக்கும்படி, வண்டி ஓடும்போது வண்டியுடன் இழுத்துச் செல்லும்படி பின்புறமாய் இணைத்துக் கட்டியிருந்தான்.
அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது.
ஏற்கனவே கயிறு இறுக்கிய வலியால் பூனை கதறிக் கொண்டிருக்க, டேனி ஆம்புலன்ஸை ஓட்டுகிறேன் என்று நாயை விரட்டினால் பூனை கதறியே குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகிவிடும்.
எனவே, அவர் அந்தப் பூனையைக் காப்பாற்ற முடிவு செய்து டேனியிடம் சொன்னார்.
"தம்பி... நீ பூனையை முன்னாடி நாய்கூடச் சேர்த்துக் கட்டினேனு வையேன். ரெண்டும் சேர்ந்து இழுக்கும்போது ஆம்புலன்ஸ் இன்னும் ஸ்பீடாப் போகும்ல...?"
ட்ரைவர் சொன்னதும் ஒரு கணம் யோசித்தவன் சொன்னான்.
"ஆமா சார், நீங்க சொல்லற மாதிரி செஞ்சா ஆம்புலன்ஸ் ஸ்பீடாப் போகும்... ஆனா, என் ஆம்புலன்ஸுக்கு சைரென் கிடையாதே.! அதுக்குத்தான் பூனையைக் கத்தற மாதிரிக் கட்டியிருந்தேன்..!".
.
.
.
2 comments:
Nice one
வாவ்! ஃபர்ஸ்ட் டைம் உங்க பக்கம் வரேன். really impressed
Post a Comment