Saturday, September 18, 2010

ட்வென்டி 20

அப்பா,அண்ணன்,கணவர்,குழந்தை என மூன்று தலைமுறை மக்களுடன் வாழ்ந்து கிரிக்கெட் பற்றி நன்றாகத் தெரியும் எனக்கு.

நான் சின்னப் பெண்ணாய் இருக்கும் போதிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.

கோபால் அண்ணனும் அப்பாவும் ரேடியோவில் டெஸ்ட் கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கிரிக்கெட் கமெண்ட்ரி இடையில் வரும் ஹிந்தியைப் புரிந்து கொள்வதற்காகவே அடிப்படை ஹிந்தி கற்றுக் கொண்டவன் அண்ணன்.

இதுபோக, மறுநாள் ஹிண்டு ஸ்போர்ட்ஸ் காலம் பார்த்துவிட்டு வேறு ஆர்க்யூமென்ட் ஒரு மணிநேரம் ஓடும்.

பிறகு அப்பா டெஸ்ட் போட்டிகளிலேயே தங்கிவிட, அண்ணன் ஒன்டே மேட்ச் பார்க்க வந்துவிட்டான்.

ஒரு டீமுக்கு அறுபது ஓவர் என்றும் அப்போது தான் இந்தியா உலகக் கோப்பை ஜெயித்தது என்றும் ஞாபகம்.

அதற்கப்புறம், கிரிக்கெட் பற்றிப் பேசுபவர்கள் கன்னாபின்னாவெண்று அதிகரிக்க ஆரம்பித்தார்கள்.

ஐம்பது ஓவர் மேட்ச் ஆனதும் கிரிக்கெட் பைத்தியங்கள் அதிகமாக ஆரம்பித்தார்கள்.

எங்கள் கல்லூரிப் பெண்கள்கூடக் கிரிக்கெட் பேச ஆரம்பித்தது அப்போதுதான்.

திருமணம் முடிந்து பார்த்தால், கணவரும் லீவ் போட்டுவிட்டு மேட்ச் பார்க்கும் அளவுக்கு கிரிக்கெட் பைத்தியமாகவே இருந்தார்.

மேட்ச் ஃபிக்சிங்' தெரிய ஆரம்பித்த பிறகு அவருடைய கிரிக்கெட் ஆர்வம் குறைந்தது நன்றாகவே தெரிந்தாலும், மேட்ச் நடக்கும்போது வீட்டு டிவியில் கிரிக்கெட்தான் ஓடிக்கொண்டிருக்கும்.

இது தொடரவே, என் மகன் டேனியும் கிரிக்கெட் பைத்தியங்களில் ஒன்றாகவே வளர்ந்து கொண்டிருந்தான்.

இப்போது ட்வென்டி ட்வென்டி எனப் புதிதாய் ஒரு ஐடியாவைப் பிடித்திருக்கிறார்கள் கிரிக்கெட்காரர்கள்.

முதலிலிருந்து கடைசிவரை முரட்டு அடியாய் விளையாடுகிறார்கள் வீரர்கள்.

ஆண்கள் உள்ளே ஆடினால் .. பெண்கள் வெளியே ஆடுகிறார்கள்.

அவசரத்துக்கும் வியாபாரத்துக்கும் ஏற்றபடி விளையாட்டும் மாறிவிட்டது.

இப்போது அப்பாவும் பையனும் ஒன்றாக மேட்ச் பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.

முன்பு, கோபால் அண்ணன் மே மாத ஞாயிறு பகல் பூராவும் வெயிலில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, ஓய்ந்துபோய் வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.

என் கணவரும் அப்பிடித்தான் என்பது அவர் பேசும்போது புரிந்து கொண்டிருக்கிறேன்.

இப்போது என் பையன் டேனியின் முறை.

என்றும்போல், இன்றும் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாட அவன் நண்பர்களுடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.

எப்போதுமே தனது ஆண் நண்பர்களை மட்டுமே கூப்பிடும் அவன் இந்த முறை குடியிருப்பின் பெண் தோழிகளையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

டேனியின் நண்பர்கள் ஊருக்குப் போய்விட்டார்களா... இல்லை, பெண்களும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது விட்டார்களா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் டேனியைக் கூப்பிடும் கேட்டேன்.

"என்னடா ஆர்த்தி,நிஷாவையெல்லாம் கிரிக்கெட் விளையாடக் கூப்பிடுட்டு இருக்க...? பொண்ணுங்க எல்லாமா கிரிக்கெட் விளையாடறாங்க...!".

கேட்டதும் டேனி மிகச் சாதாரணமாய்ப் பதிலளித்தான்.

"இல்லம்மா... அவங்கெல்லாம் 'சியர் லீடர்ஸ்'. கிரிக்கெட் வெளையாடமாட்டாங்க... நாங்க வெளையாடும்போது சிக்ஸர், ஃபோர் அடிச்சா டேன்ஸ் ஆடி எங்களை என்கரேஜ் பண்ணுவாங்க...!".
.
.
.

5 comments:

சென்ஷி said...

:)))

//
"இல்லம்மா... அவங்கெல்லாம் 'சியர் லீடர்ஸ்'. கிரிக்கெட் வெளையாடமாட்டாங்க... நாங்க வெளையாடும்போது சிக்ஸர், ஃபோர் அடிச்சா டேன்ஸ் ஆடி எங்களை என்கரேஜ் பண்ணுவாங்க...!".//

என்னக் கொடுமசார் இது!

உண்மைத்தமிழன் said...

ரொம்பக் கொடுமை..!

Asiya Omar said...

நல்ல நகைச்சுவை.

Riyas said...

SOOOPER...
//இல்லம்மா... அவங்கெல்லாம் 'சியர் லீடர்ஸ்'. கிரிக்கெட் வெளையாடமாட்டாங்க... நாங்க வெளையாடும்போது சிக்ஸர், ஃபோர் அடிச்சா டேன்ஸ் ஆடி எங்களை என்கரேஜ் பண்ணுவாங்க...!".// ha ha ha...

http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html
//

Unknown said...

நான் நினைத்ததை அப்படியே எழுதிவிட்டீர்கள்---வாஹே குரு---துபாய்

Post a Comment