Wednesday, September 8, 2010

இளையராஜாவின் காதல்

மகதநாட்டு இளவரசன் மகேந்திரவர்மன் அம்புலிமாமாவில் வருவதுபோல் அப்படியொன்றும் அழகானவன் அல்ல.

லேசாய்க் கருப்பாய்,ஒடிசலாய்,முன்னால் வழியும் தொப்பையுமாய் பார்க்க ஒரு மாதிரித்தான் இருப்பான்.

உங்களுக்குப் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், அழகில் அவன் ஒரு 24ம் புலிகேசி.

அழகில் மட்டும்தான் அப்படி... மற்றபடி அவன் ஒரு சகலகலாவல்லவன்.

ஆயகலைகள் 64க்கும் அவன் கோனார் நோட்ஸ் போடும் அளவுக்கு வித்தைகள் கற்றவன்.

ஆனால், அது எதுவும் அவனுக்குத் திருமண விஷயத்தில் உதவுவதாய் இல்லை.

இளவரசிகள் எவளும் மகேந்திரவர்மனைக் காதலிப்பதற்கான அறியும் தெரியவில்லை, குறியும் தெரியவில்லை.

சுயம்வரங்களில் எல்லாம் இவன் இருக்கும் வரிசைக்குக்கூட இளவரசிகள் வர மறுத்தார்கள்.

வயது ஏறிக்கொண்டேபோக, மார்க்கெட்டில் விலைபோகாத முற்றின கத்திரிக்காயாகிப் போனான் மகேந்திரவர்மன்.

யாரோ சொன்ன யோசனையைக் கேட்டு 'தமிழ் மேட்ரிமோனி'யில் கூட பதிவு செய்திருந்தான்.

ஆனால், பலனென்னவோ பூஜ்யம்தான்.

ஆச்சு... வயது முப்பதைத் தாண்டி ஓரிரு வருடங்கள் ஓடிவிட்டன.

'இளவரசிகள் வேண்டாம்... ஏதாவது பெண்ணாயிருந்தால் போதும்' என்ற நிலைக்கு வந்துவிட்டான் மகேந்திரவர்மன்.

மனம் நொந்துபோன மகேந்திரவர்மன் மனம்போன, கால்போன வழியில் போகும்போதுதான் கொற்றவையைப் பார்த்தான்.

கொற்றவை அழகின் திரு உருவம்...இளமைப் புயல்.

பார்த்தவுடன் மகேந்திரவர்மனைப் பற்றிக் கொண்டது காதல்.

வாழ்ந்தால் இவளோடுதான் என்று முடிவே செய்துவிட்டான்.

ஆனால், கொற்றவையோ எல்லாப் பெண்களையும்போல் தானே..?

அவள் கனவில் ஆர்யாவும், அல்லு அர்ஜுனும் இருக்க... அவள் இளவரசரின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்.

காரணம்...

முதல்நாள், கலர் கருப்பு என்றாள்.

மறுநாள், உடல் ஒல்லி என்றாள்.

அடுத்தநாள், வயிறு தொப்பை என்றாள்.

காதலைச் சொல்லப் போனபோதெல்லாம் பதிலுக்கு காரணங்களே கிடைத்தது இளவரசனுக்கு.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகேந்திரவர்மன் ஒருநாள் மொத்தமாய் உடைந்துவிட்டான்.

நேராய் கொற்றவையிடம் சென்று, அவள் காலின் அடியில் மண்டியிட்டு தனது கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டு, தலைகுனிந்து சொன்னான்.

"கொற்றவை.. என் காதலுக்கு முன் இந்த ராஜ்ஜியம்கூடத் தூசு. இந்தா... எல்லாவற்றையும் எடுத்துக் கொள். என் காதலை மட்டும் ஏற்றுக்கொள்...!".

தன் முன்னால் மண்டியிட்டு குனிந்திருக்கும் ராஜகுமாரனைப் பார்த்துச் சொன்னாள் கொற்றவை.

"கிரீடத்தைக் கழற்றியதும் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது... உன் உச்சந்தலையில் முடியே இல்லை.... லேசாய்ச் சொட்டை தெரிகிறது. எனவே...உன் காதலை ஏற்றுக் கொள்ளமுடியாது. யூ ஆர் ரிஜெக்டட்...!".
.
.

2 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... எல்லாம் சரி... இதுல இளையராஜா எங்கிங்க வந்தார்... சூப்பர் போஸ்ட்

பத்மினி said...

இளையராஜா... இளவரசன்.

Post a Comment