Tuesday, November 30, 2010

டேனியும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கும்

நான் ஒரு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்.

மொழியை மோசமாய்க் கையாளும் யாரைக் கண்டாலும் கோபமாய் வரும் எனக்கு.

என் மகன் டேனியோ, அவனது தந்தையின் விருப்பப்படி கான்வென்டில் படிப்பவன்.

ஆங்கிலம் கலக்காமல் அவனுக்கு ஒரு வாக்கியம் கூடப் பேசவே வராது.

அதனால், அவன் ஆங்கிலம் பேசும்போது அதற்கிணையான தமிழ் வார்த்தைகளைச் சொல்லித் தருவதும் அதை அவனைப் பேச வைப்பதும் என் வழக்கம்.

இது சம்பந்தமாக அடிக்கடி செல்லச் சண்டைகள் நடக்கும் எங்களுக்குள்.

அன்றும் அப்பிடித்தான்...

நான் டேனியுயுடன் கடைவீதியில் வீட்டிற்குத் தேவையான எல்லாம் வாங்கிவிட்டு திரும்பும் போது, டீ சாப்பிடுவதற்காக ஒரு நல்ல அடுமனைக்குள்(பேக்கரி) நுழைந்தோம்.

அடுமனையில் நல்ல நல்ல கேக்குகளைப் பார்த்த டேனி,"அம்மா... ஒரு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்குமா..!"என்றான் கண்கள் நிறைய ஆவலுடன்.

நான் 'சரி' சொல்லவும் சந்தோசமாய் கடைக்காரரை அழைத்து கேக்கை ஆர்டர் செய்துவிட்டு,"ஹை சூப்பர்... ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ரொம்ப அட்டகாசமாய் இருக்கும்..! ஐ ஜஸ்ட் லவ் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்..." என்றான்.

நான் வழக்கம்போல்,"என்ன மொழி பேசற நீ...? சூப்பர்,அட்டகாசம்,ஜஸ்ட் லவ்னு... ஒழுங்கா நல்லாத் தமிழ்ல சொல்லு. இல்லைனா, உனக்கு கேக் கிடையாது...!".

சொல்லிவிட்டு நான் கோபமாய்த் திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.

டேனி என் வருத்தத்தைச் சங்கடத்துடன் கவனித்தவன், "சரிம்மா... நான் தெளிவாத் தமிழ்ல சொல்லறேன்..."என்றவன், கடைக்காரர் கொண்டுவந்து டேபிளில் வைத்த கேக்கை ஆவலுடன் பார்த்தபடியே சொன்னான்.

"ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் மிக நன்றாக இருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்..!".

நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பும்போது அவன் என்னைப் பார்த்துச் சொன்னான்.

"ஆனா அம்மா... இந்த மாதிரிச் சொல்லும்போது எனக்கு என்னவோ ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கைப் பத்திச் சொல்லற மாதிரியே இல்லை. ஏதோ... காய்ச்சலுக்கு வாங்கிட்டுப் போற காய்ஞ்சுபோன ப்ரட்டைப் பத்திச் சொல்லற மாதிரித்தான் இருக்கு...!".
.
.
.

7 comments:

சென்ஷி said...

:))

வரதராஜலு .பூ said...

ஹா ஹா ஹா
:)

ஏங்க பையனை இப்படி கொடுமைபடுத்துறிங்க?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
நல்ல வேளை ப்ளாக் ஃபாரஸ்டையும் அவன் தமிழ்படுத்தல

அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா....

செல்வா said...

ஹா ஹா ஹா ..!!

Unknown said...

ஹா ஹா ஹா ..!!

ராஜி said...

தமிழர்களான நமது பிள்ளைகள் ஆங்கில கலப்பின்றி பேசவும்,படிக்க ,எழுததெரிந்திருப்பது அவசியம். இதை நானும் எனது பிள்ளைகளிடம் வலியுறுத்தி வீட்டில் நடைமுறைப்புடுத்துகிறேன். அதுப்போலவே மெனக்கெடும் உங்களின் எழுத்துக்களை காணும்போது பெருமகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க தமிழ், வளர்க தமிழ், நன்றி

Post a Comment