Thursday, November 25, 2010

நாயே நாயே

நான் கோவையிலிருந்து சென்னைக்கு குடி வந்தபோது நடந்து இது.

என் மகன் டேனியின் செல்ல நாய்குட்டி சீஸரை எங்கே விடுவது என்று ஒரு மஹா குழப்பம் இருந்தது.

கோவையில் நாங்கள் இருந்த வீடு தனி வீடு; அதனால், நாய் வளர்ப்பது பெரிய இடைஞ்சலாய் இல்லை.

ஆனால், நாங்கள் சென்னையில் பார்த்திருப்பதோ ஒரு நெருக்கமான அபார்ட்மென்ட்; அதில், சீஸரை வைத்திருப்பது மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்குமே என்பது எனக்கும் கணவருக்கும் யோசனையாய் இருந்தது.

என்றாலும், டேனி சீஸர் இல்லாமல் ஏங்கிப் போய்விடுவானே என்று நாயையும் எங்களுடனேயே அழைத்து வந்துவிட்டோம்.

சென்னை வந்து ரொம்ப நாள் ஆனபின்னாலும்கூட வீட்டுக்குள்ளேயே இருப்பது, சீஸருக்குப் பிடிக்காத விஷயமாகவே இருந்து வந்தது.

சின்னதாய் கதவைத் திறந்தாலும் வெளியே ஓடிவிடுவது அதன் குணமாய் இருந்தது.

அப்படித்தான் ஒரு சனிக்கிழமை நடந்தது.

டேனி ஸ்கூலுக்குப் போயிருந்தான்.

நான் கேஸ் வந்திருக்கிறது என்று சமயலறையின் உள்ளே சிலிண்டரை மாற்றிக் கொண்டிருந்தபோது, கதவு திறந்திருக்க அதன் வழியே சீஸர் வெளியே ஓடிவிட்டது.

கேஸ்காரர் வெளியே போய் சற்று நேரத்துக்கு அப்புறம்தான், சீஸர் வீட்டுக்குள் இல்லை என்பதே எங்களுக்கு உறைத்தது.

வெளியே இறங்கி அபார்ட்மென்ட் முழுவதும் தேடியாகிவிட்டது.

அக்கம்பக்கம், அபார்ட்மென்ட் வாட்ச்மேன் யாரும் சீஸரை கவனிக்கவில்லை என்பதால், காரை எடுத்துக் கொண்டு தெரு, மெயின் ரோடு எல்லாம் தேடியும் கிடைக்காமல்... ஒவ்வொரு தெருவாய் பதைபதைப்புடன் தேடிக் கொண்டே வந்தோம்.

சுத்தமாய் ஒரு ரவுண்ட் அடித்து முடித்துவிட்டோம்... சீஸர் கிடைக்கவில்லை.

டேனி வந்ததும் சீஸர் இல்லை என்றால் அழுவானே என்பது ஒருபுறம் இருக்க, அதற்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற பயம் அதிகமாக... என் கணவரும் காரை நிறுத்தி எதிரில் வந்த ஒரு சிறுவனிடம் கேட்டார்.

"தம்பி... இந்தப் பக்கமா ஒரு ப்ரவுன் கலர் நாய் எதையாவதைப் பார்த்தியா.? எங்க நாயைக் காணோம்..!".

என் கணவர் கேட்டு முடித்ததும் அந்தச் சிறுவன் பதிலுக்குச் சிரித்தபடியே அவரிடம் கேட்டான்.

"எந்த நாய் அங்கிள்... ரொம்ப நேரமா உங்க கார் பின்னாடியே ஓடி வந்திட்டிருக்கே, அந்த நாயவா தேடறீங்க..?".
.
.
.

9 comments:

வித்யா said...

:-D....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா..ஹா///

வரதராஜலு .பூ said...

ஹா ஹா ஹா

Unknown said...

super.... :)

VELU.G said...

ஆஹா அருமையான ட்விஸ்ட்

எப்படிஇருந்திருக்கும்?!!!!!!

Ramesh said...

ஹ ஹ ஹ.. அருமையான அனுபவம்.. பயங்கரமா தக்காளி ஆயிருப்பீங்களே நீங்க ரெண்டு பேரும்...

vedanthaangal said...

Pavam sissar

ஸனு செல்லம் said...

சென்னையில் நாய் வளர்பது பெரிய விசயம்!!உங்கள் சம்பவம் அருமை.....

cheena (சீனா) said...

அன்பின் பத்மினி

அருமையான - இரசிக்கும் படியான - சடாரென்ற திருப்பத்துடன் - எழுதப்பட்ட சிறுகதை - அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment