அது நாங்கள் புதிதாய் வீடு வாங்கிக் குடியேறியிருந்த நேரம்.
வீட்டில் எல்லா மரச் சாமான்களும் புதிதாய் வாங்கியிருந்தோம்.
என் கணவர் அன்று வீட்டுக்கு வரும்போது, என் மகன் டேனிக்குப் ரொம்ப நாளாய் அவன் கேட்டுக் கொண்டிருந்த, விளம்பரங்களில் வரும் நாயின் குட்டி ஒன்றை விலை கொடுத்து வாங்கி வந்திருந்தார்.
மொபைல் விளம்பரங்களில் ஒரு பையன் பின்னால் ஓடிக் கொண்டிருக்குமே அந்த நாய்... அதைப்போலவே அவன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தது.
நாய்க்குட்டி பார்ப்பதற்கு உண்மையிலேயே மிக அழகாயிருந்தாலும், அதனிடம் ஒரு கெட்ட பழக்கம் எனக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாய் இருந்தது.
நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எதுவுமில்லாமல் அதற்கு தோன்றும் போதெல்லாம், அப்போதுதான் புதிதாய் வாங்கியிருந்த ஷோஃபாவை பின்புறம் 'க்ரீச்.. க்ரீச்..' எனப் பிராண்டுவது அதற்கு பிடித்தமான பழக்கமாய் இருந்தது.
ஷோஃபா நாசமாவது தாங்காமல் ஒருநாள், ஒரு குச்சியைத் தூக்கிக் கொண்டு அந்த நாயை அடிக்கப் போகையில், எங்கிருந்தோ ஓடி வந்த டேனி அதைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு என்னைப் பார்த்து பரிதாபமாய் சொன்னான்.
"அம்மா அடிக்காதம்மா... நான் இந்த நாயை எப்படி ட்ரெயின் பண்ணறேன் பாரேன்..!" என்றவன் நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.
அதற்கப்புறம், நிறைய நாட்கள் டேனி அந்த நாய்க்குட்டியை பொறுமையாய்ப் பழக்குவதை நான் பார்த்திருக்கிறேன்.
எப்போதெல்லாம் அந்த நாய், என் ஷோஃபாவைப் பிராண்டுகிறதோ அப்போதெல்லாம் என் மகன் எனக்குத் தொந்தரவில்லாமல் நாயை டிரெயின் பண்ண பொறுப்புடன் வெளியே தூக்கிச் செல்லுவதைப் பற்றி பெருமையுடன் என் கணவரிடம் சொல்லியிருக்கிறேன்.
அந்த நாயும், வெகு சீக்கிரமே பழகி விட்டதென்றே நினைக்கிறேன்.
அதற்கப்புறம், அது எப்போதெல்லாம் வெளியே போக ஆசைப்பட்டதோ... அப்போதெல்லாம் அது ஷோஃபாவைப் பிராண்டக் கற்றுக் கொண்டு விட்டது.
.
.
.
6 comments:
ரசித்தேன்...அதென்ன லேபல்..ரயில்வண்டி நீளத்திற்கு இருக்கிறது.
enna koduma saravanan...
good training...keep it up...
:)
புத்திசாலி செல்ல பிராணி.
கெட்ட நாய் போங்க...!
ஜானுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க கணக்கு மாத்திரம் தெரிந்திருந்தால் போதாது,ஜானைப்பற்றியும் தெரிஞ்சிருக்கணும்! ஆமாம், அது என்ன ஷோஃபா? அதுக்கு ஸோஃபா ந்னு தானே சொல்லணும்?
Post a Comment