Saturday, October 30, 2010

என்ன ருசி...என்ன ருசி...?

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் தன நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மிகவும் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலைச் சந்திக்க வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார்.

அண்ணலைப் பார்த்து தான் கொண்டு வந்திருந்த திராட்சைப் பழத்தை அவரிடம் கொடுத்தார் அந்தப் பெண்மணி.

சிரித்துக் கொண்டே அதில் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்ட அண்ணல் அவர்கள், பிறகு யாருக்கும் கொடுக்காமல் அந்தப் பெண்மணியின் கண் முன்னாலேயே அவர் கொடுத்த பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.

அந்தப் பெண்மணியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டார்.

அவர் சென்றபின் நண்பர்கள் அண்ணலிடம் கேட்டனர்.

''அண்ணலே... இது என்ன புதுப் பழக்கம்?. வழக்கமாக யார், எது கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் கொடுத்துத்தானே சாப்பிடுவீர்கள்... ஆனால், இன்று பழம் முழுவதையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே, பழம் மிக ருசியாய் இருந்ததோ..?''

புன்னகையுடன் அண்ணல் சொன்னார்.

''அந்தப் பெண்மணி கொடுத்த பழத்தில் ஒன்றை வாயில் போட்டேன். அது மிகவும் புளிப்பாக இருந்தது. உங்களிடம் கொடுத்தால் புளிப்பாயிருக்கிறது என்று யாராவது இயல்பாய் சொல்லியிருப்பீர்கள். அதைக்கேட்டு அந்த பெண்ணின் மனம் மிகவும் வருத்தமாகி இருக்கும். அதனால்தான் சிரித்துக் கொண்டே, நானே முழுவதையும் சாப்பிட்டு விட்டேன். அந்த பெண்ணின்  முகத்தில் எவ்வளவு சந்தோசம் பார்த்தீர்களா..?.
.
.

Friday, October 29, 2010

கேள்வியே இல்லாத நிலை

மனோதத்துவ நிபுணர் ஒருவர் ஸென் ஞானி ஒருவரைச் சந்தித்தபோது நிகழ்ந்தது இது.

அவருக்கு தீராத சந்தேகம் ஒன்று இருப்பதாக ஸென் துறவியைப் பார்த்துக் கேட்டார்.

"எந்த விதத்தில் மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்..?.

அதற்கு ஸென் ஞானி அந்த மனோதத்துவ நிபுணரிடம் சொன்னார்.

"அவர்களால் மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாத நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றுவிடுவேன்....!".
.
.

Thursday, October 28, 2010

பொறியாளர்

மதுரை மாநாட்டில் அம்மா சொன்ன குட்டிக் கதை இது.


ஒரு புகழ்பெற்ற பொறியாளர் ஒருவர் இருந்தார்.

அவர் மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரு பாலத்தைக் கட்டினார்.

அந்தப் பாலத்தின் தன்மை மற்றும் உறுதி பற்றிக் கூறும்போது அவர் சொன்னார்.

"இந்தப் பாலம் முப்பது டன் எடை வரை தாங்கக்கூடியது. ஆனால், அதற்குமேல் ஒரு குண்டூசி வெயிட் அதிகமானால்கூட பாலம் உடைந்து நொறுங்கிவிடும்...!" என்றாராம்.

அதையும் செக் செய்துவிடலாம் என்று, மொத்த எடையுடன் தனது எடையும் சேர்த்து சரியாய் முப்பது டன் எடையுடன் ஒரு லாரி பாலத்தின் மீது அனுப்பப்பட்டது.

லாரி கிளம்பி கிட்டத்தட்ட நடுப்பாலம் வரை வந்துவிட்டது.

அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது.

எங்கிருந்தோ பறந்து வந்த நான்கு புறாக்கள் லாரியின் மீது சாவகாசமாய் வந்து அமர்ந்தன.

எல்லோரும், பாலம் எப்போது உடையுமோ என்று திக் திக்கென்று பார்த்துக் கொண்டிருக்க, பாலத்திற்கு எந்த ஒரு சேதமும் இல்லாமல்... லாரி பாலத்தின் மறுபக்கம் வந்து சேர்ந்தது.

எல்லோரும் அந்த பொறியாளரைப் பார்த்து,"என்ன உங்க கணக்கு தப்பாகிவிட்டதே..?" என்று கேட்க, அந்த பொறியாளர் சொன்னார்.

"என் கணக்கு எப்போதும் தப்பாகாது. லாரி பாலத்தின் இந்த முனையிலிருந்து கிளம்பி நடுவே வருவதற்கு ஒன்றரை கிலோமீட்டர் தூரம். அவ்வளவு தூரம் வருவதற்கு செலவான டீசலின் எடையைவிட புறாக்களின் எடை குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான், பாலம் உடையவில்லை..!" என்று விளக்கம் கொடுத்துவிட்டு தனது மாணவர்களுடன் நடந்து போனாராம்.
.
.
.

ஸென் குட்டிக் கதை

இது ஒரு ஸென் பள்ளியில் நடந்த சுவையான நிகழ்ச்சி.


மாணவன் : "எதற்காக நாங்கள் தியான வகுப்பு முடிந்ததும், தலை வணங்க வேண்டும்...?"


ஆசிரியர் : "ஒரு வழியாக முடிந்ததே, என்று கடவுளுக்கு நன்றி கூறுவதற்காக..!" என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
.
.

Wednesday, October 27, 2010

அழகுக் குறிப்பு

அன்று விடுமுறையாதலால் வீட்டிலேயே இயற்கை முறையில் ஃபேஷியல் செய்வதாக முடிவு செய்தேன்.

வீட்டில் அவரும் இல்லாதது, இன்னும் வசதியாய்ப் போனது.

சமீபத்தில், ஒரு புத்தகத்தில் அதற்கான வழிமுறைகளை வேறு படித்திருந்தது என்னை இன்னுமே தைரியமாய் இந்த முடிவை எடுக்க வைத்திருந்தது.

புத்தகத்தில் சொன்னபடி ஒரு தக்காளி, ஒரு சின்ன வெள்ளரிப் பிஞ்சு, நாலைந்து கறிவேப்பிலை எல்லாம் எடுத்து மிக்ஸியில் அடிப்பதையும், பிறகு எலுமிச்சை ஒரு மூடி அதில் பிழிவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என் நான்கு வயது மகன் டேனி.

இதையெல்லாம் ஏதோ புதிய சமையல் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், அந்தக் க்ரீமை எடுத்து என் முகத்தில் பூசத் துவங்கியதும் குழப்பத்துடன் கேட்டான்.

"என்னம்மா பண்ணறே..?".

நான் அவனுக்கும் புரியட்டுமே என்று விளக்கமாய்ச் சொன்னேன்.

"இதுக்குப் பேருதான் ஃபேஷியல்..!".

அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"இதை எதுக்கு செய்யணும்..?".

"இப்படி செஞ்சா அம்மா இன்னும் அழகாயிடுவேன்..!".

சொல்லிக் கொண்டே நான் இன்னும் க்ரீமைப் பூசிக் கொண்டிருக்க, என் முகம் முழுவதும் அது கவர் ஆகி அவனுக்கு விநோதமாய்த் தெரிய, அவன் பேசுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

புத்தகத்தில் சொன்னபடி பத்து நிமிடங்களில், காய்ந்துபோன அந்தக் கிரீமை மெல்ல இழுக்க அது தோல் போல உரிந்துவர ஆரம்பித்தது.

அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டேனி, அப்போது தன் மழலை மாறாமல் கேட்டான்.

"ஏம்மா... வேணாம்னு விட்டுட்டியா...?".
.
.
.

Tuesday, October 26, 2010

விமலாவும் வேதிகாவும் பின்னெ ஒரு முதலாளியும்

விமலாவும் வேதிகாவும் அந்தக் கம்பெனியில் ஒரே நாளில்தான் இன்டர்வியூவுக்கு வந்தார்கள்.

இருவருமே நல்ல அழகிகள்.

அந்தக் கம்பெனியில் சேர்வதற்கு அழகும் ஒரு முக்கியமான விஷயமாய் இருந்ததால், வந்திருந்த எத்தனையோ பேர்களில் அவர்கள் இருவர் மட்டுமே, அந்தக் கம்பெனியின் இளைய முதலாளியால் அங்கே வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

விமலா கடின உழைப்பாளி. அவள் கடினமாக உழைத்தாள். வேலையில் மிகுந்த கவனம் செலுத்தினாள். எந்த வேலையைத் தொட்டாலும் வெற்றிகரமாய் முடித்தாள். வெகு சீக்கிரமாய், அவள் வேலை செய்த பிரிவின் தலைவியாகப் பதவி உயர்வு பெற்றாள்.

ஆனால் வேதிகாவோ... வேலையே செய்யவில்லை. தான் அழகாய் இருப்பதிலேயே கவனம் செலுத்தினாள். பியூட்டி பார்லரே கதி என்று கிடந்தாள். உடலைக் கட்டுக்கோப்பாய் வைத்துக் கொள்வதும், உடைகளை விலையுயர்ந்ததாய் உடுத்துவதுமே அவள் குறியாய் இருந்தது.

அவள், வெகுவிரைவில் அந்தக் கம்பெனி இளைய முதலாளியை கல்யாணம் செய்து கொண்டு முதலாளியம்மா ஆகிவிட்டாள்.
.
.
.

Monday, October 25, 2010

சாவே போ

முத்துசாமி ஒரு தீவிர கடவுள் பக்தன்.

எல்லாம் கடவுளால் மட்டுமே நடக்கிறது என்று கண்ணை மூடிக்கொண்டு நம்புவான் முத்துசாமி.

சின்ன வயதில் ஊருக்கு வந்த ஒரு சாமியாரை சந்தித்த பின்னால்தான், அவனுக்கு அவன் வாழ்வில் மாற்றங்கள் வர ஆரம்பித்தது.

"சிவனைக் கும்பிடு.. சிவனைக் கும்பிடு.. வாழ்க்கை மேல போகும்..!" என்று போகிற போக்கில் அந்த சாமியார் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

முத்துசாமி அதை நம்பினான் என்று சொல்லக்கூடாது.

அப்படியே பைத்தியமாய் சிவனைக் கும்பிட ஆரம்பித்தான்.

வாழ்க்கை மாற ஆரம்பித்தது.

பூஜ்யமாய் இருந்த அவன் வாழ்வில், இன்று இந்தச் சின்ன வயதிலேயே கோடிக் கோடியான பணத்தில் புரள்வதற்குக் காரணம் சிவன் தான் என்பது அவனுக்குத் தெரியும்.

சம்பாதிப்பதில் பாதியை அவன் சிவாலயங்களுக்கும் சிவனடியார்களுக்குமே செலவழித்து வந்தான் அவன்.

பணம் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், அவனுடைய பக்தியும் தாறுமாறாகப் போய்க் கொண்டிருந்தது.

சாமியார், சிவனடியார் என்று சுற்றிக் கொண்டிருந்தவன்.. இப்போது, சித்தர்கள் என சுற்ற ஆரம்பித்தான்.

திருவண்ணாமலை, கொல்லிமலை, சதுரகிரி என அவன் சித்தர்களை பல இடங்களில், மலைகளில், குகைகளில், இன்னும் பல ரகசிய இடங்களில் அவன் சித்தர்களை சந்தித்து பல நம்பமுடியாத சக்திகளைப் பெற்றுவிட்டான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

கடைசியில் முத்துசாமி வந்து நின்ற இடம் சாவே இல்லாத வாழ்க்கை... மரணமற்ற பெரு வாழ்வு.

அவன், தான் கற்றுக் கொண்ட சித்துக்களை வைத்து ஒரு பெருந்தவம் செய்ய ஆரம்பித்தான்.

தவம்னா இப்படி அப்படி சாதாரண தவம் அல்ல... மிரண்டு போய் அந்த சிவனே முத்துசாமியின் முன்னால் வந்து நிற்கும் அளவுக்கு கடுந்தவம்.

முன்னால் வந்து நின்ற சிவன் சொன்னார்.

"பக்தா... உன் கடுந்தவம் என்னை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. என்ன வரம் வேண்டும் உனக்கு..? கேள், தருகிறேன்..!".

முத்துசாமி கேட்டான்.

"கடவுளே.. நான் கேட்பது ஒரே ஒரு வரம்தான். அதற்காகத்தான் இவ்வளவு நாள் தவம் இருந்தேன். எனக்கு இந்த வாழ்க்கையில் சாவே வரக்கூடாது..! அதுமட்டும் போதும்..".

'சாவே வராத வாழ்வு மனிதனுக்கு கொடுக்கக் கூடதே, அது இயற்கைக்கு எதிராயிற்றே..' என்று யோசித்த சிவன், முத்துசாமியின் கடும் தவத்தையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

"அப்படியே வரம் தந்தேன் முத்துசாமி. இனி உனக்கு சாவே வராது...!".

வரம் தந்த சிவன் மறைந்ததும், மகிழ்ச்சியுடன் தூங்கப் போனான் முத்துசாமி.

மறுநாள், காலையில் கண் விழித்து, வாக்கிங் முடித்து பேப்பர் எல்லாம் பார்த்து முடித்துவிட்டு கம்பெனி மேனேஜருக்குப் போன் செய்தான்.

"ஹலோ... நான் முத்துமி பேசறேன்..!" என்றவன் ஒருகணம் யோசித்தான்.

'என்ன இது.. தன் பெயரையே சொல்ல வரவில்லையே..!'

முத்துசாமி என்று தன் பெயரைப் பலதடவை சொல்லிப் பார்த்தான்... முத்துமி, முத்துமி என்றே வந்தது.

முத்துசாமியில் 'சா' வரவில்லை.

முத்துசாமியில் மட்டுமல்ல...எந்த வார்த்தையிலும் அவனுக்கு 'சா' வரவில்லை.

சாகும் வரை முத்துசாமிக்கு 'சா'வே வரவில்லை.
.
.
.

Saturday, October 23, 2010

99 நாட் அவுட்...

பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த கிராமத்தின் பெயரைக் கேட்டால் நீங்கள் சிரித்து விடுவீர்கள்.

'மரம்புடுங்கிக் கவுண்டனூர்'.

அந்த ஊரில் ஒரு வயதானவரை ஃபோட்டோ எடுக்க என்னை வரச் சொல்லி இருந்தார்கள்.

அவருடைய வயது காரணமாக, அவரை பொள்ளாச்சியில் உள்ள எனது ஸ்டுடியோவுக்கு அழைத்துவர முடியவில்லை என்றும் வந்து போவதற்கான செலவையும் தந்துவிடுவதாக அவருடைய மகன்கள் சொன்னதால் நான் ஒப்புக்கொண்டேன்.

போய்ப் பார்த்தால், அவர் அவருடைய மகன்கள் சொன்னதைவிட உண்மையிலேயே அதிக வயதானவர்தான்.

'என்ன வயது?' என்று விசாரித்தபோது அவருடைய ஒரு மகன் சொன்னார்.

"இன்னிக்கு எங்க அப்பாவோட 99வது பொறந்த நாளுங்க. இன்னிக்கு இங்க விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கோமுங்க. அதுக்காகத்தான் உங்களை ஃபோட்டோ எடுக்க உங்களை வரச் சொன்னது பாத்துக்கங்க...!"

அவர் சொல்லிவிட்டுப் போனதும் அந்தப் பெர்யவரைப் பார்த்து எனக்கு மிக ஆச்சர்யமாய் ஆகிவிட்டது.

99 வயது என்றாலும் நல்ல ஆரோக்கியமாய்த்தான் இருந்தார்.

பிறந்தநாள் விசேஷம் தடபுடலாய் இருந்தாலும், மகன்கள் தான் உற்சாகமாய் இருந்தார்களேயொழிய மருமகள்களுக்கு ஒன்றும் அதில் அவ்வளவு ஈடுபாட்டைக் காணோம்.

அவர்கள் எல்லோரும்,"இந்த வயசுல இதுக்குப் பொறந்த நாளு ஒரு கேடு.. போகமாட்டேங்குதே..!" என்றெல்லாம் காதுபடப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கு கொஞ்சம் வருத்தம்கூடத்தான்.

அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல், ஃபோட்டோவுக்காக அவரை மேக்கப் பண்ணி உட்கார வைக்கும் போது, அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வரும் விதமாய்ச் சொன்னேன்.

"அய்யா.. உங்களோட நூறாவது பிறந்தநாள் அன்னிக்கும் நானே ஃபோட்டோ எடுப்பேன்னு நம்பறேன்..!".

நான் அப்படிச் சொன்னதும் பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி அந்தப் பெரியவர் சொன்னார்.

"ஏன்... உனக்கு என்ன நல்லாத்தான இருக்க..? அடுத்த வருசத்துக்குள்ள நீ ஒண்ணும் செத்துப் போயிற மாட்ட.. வா வா, வந்து நல்லா ஃபோட்டோ எடு...!"என்றார்.
.
.
.

Friday, October 22, 2010

24 புல்லட்ஸ்

சமீபத்தில் ஏதோ விளையாட்டு விழா முடிவு நாள் நிகழ்ச்சி நடந்திருக்கிறது நம் ஊரில்.

அதற்கு, நமது அண்டை நாட்டு அதிபர் வந்திருக்கிறார்.

நம் மக்களை கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்ததில் பெயர் போனவர் அந்த அதிபர்.

ஆனால், அவர் வந்ததோ நம் நாட்டுடனான நட்பு ரீதியில்.

அவருக்கு வரவேற்று மரியாதை செலுத்தும் முறையில் நமது 24 பீரங்கிகள் முழங்கின.

அவற்றின் முழக்கம் ஓய்ந்த பிறகு அந்த சுட்டவர்களில் ஒருவரை நெருங்கிக் காரணம் கேட்டிருக்கிறான் நம்ம காத்தமுத்து.

அந்த வீரன், காத்தமுத்துவிடம் 'இன்னார் வந்திருக்கார்.. அதனால சுட்டோம்'னு காரணம் சொன்னார்.

அதுக்கப்புறம் காத்தமுத்து ரொம்ப ஆர்வமாய் அவரிடம் கேட்டான்.

"இப்ப அவர் எங்கே.. பார்க்கமுடியுமா.?"

அதற்கு அந்த வீரர்,"அவர் இப்பத்தானே காரில் ஏறிப் போனார்..!".

வீரர் சொன்ன பதிலைக் கேட்ட காத்தமுத்து வருத்தத்தோட இப்படிச் சொன்னான்.

"இத்தனை தடவை சுட்டும் உங்க குறி தப்பிடுச்சேப்பா...!".
.
.
.

Thursday, October 21, 2010

தந்திரன்

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.

அன்று மாலை சினிமாப் பார்க்க கணவர், குழந்தையோடு கோவையின் அந்தத் தியேட்டருக்குப் போயிருந்தோம்.

டிவி, ரேடியோக்களின் விடாத விளம்பரங்களும், உடன் பணிபுரிவோரின் விடாத விசாரிப்புகளும் அந்தத் திரைபடத்தைப் பார்க்காததை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே மாற்றியிருந்தன.

நல்ல கூட்டம்... கிராமத்து மக்கள், நகரத்து மக்கள் என மக்கள் கூட்டம் அலைமோதியது.

என் கணவர் ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருந்ததால், நாங்கள் தொந்தரவின்றி தியேட்டருக்குள் நுழைந்துவிட்டோம்.

நடுவே நுழையும் பாதையும், இரண்டு பக்கமும் சீட் நம்பர் தேடி உட்காருவதும் போல சிஸ்டம்.

எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்ததோ, நுழைந்ததும் வலது பக்கம் வழிக்குப் பக்கத்திலேயே முதல் மூன்று சீட்டுகள்.

அதற்கப்புறம், எங்களைப்போலவே ஒரு குடும்பமும் அதையடுத்து ஒரு கிராமத்துக் குடும்பமும் அப்புறம், ஒன்றிரண்டு இளைஞர்களும் என எங்கள் வரிசை நிரம்பியிருந்தது.

அதுவும், அந்த கிராமத்துக் குடும்பம் மொத்தமும் அந்த நடிகரின் தீவிரமான ரசிகர்கள் என அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது.

அவர்கள் தங்கள் நடிகரின் பெருமையை, தங்கள் குழந்தைகளுக்கு மிகப் பெருமையாய் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

படம் ஆரம்பித்ததும் தான் அவர்கள் பேச்சுச் சப்தம் ஓய்ந்தது.

படம் போட்டு ஒரு மணி நேரம் இருக்கும்... இன்டர்வலுக்குச் சற்று முன்பாகவே அவரது ஒரு குழந்தை டாய்லெட் போக அவசரப் படுத்திக் கொண்டிருந்தது.

அவர்கள் கணவன் மனைவி இருவரும், 'கொஞ்சம் பொறுத்துக்க..' என்று சொல்லியபடி உற்சாகமாய்ப் படம் பார்த்துக் கொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை ஓவென்று அழவே ஆரம்பித்து விட்டது.

கடைசியாய், அந்தக் கிராமத்து மனிதர் எரிச்சலுடன், குழந்தையை அந்த அரையிருட்டில் அழைத்துக் கொண்டு, வரிசையில் நடுவிலிருந்து கடுப்புடன் ஒவ்வொருவராகத் தாண்டிக் கொண்டு வந்தார்.

வந்தவர், கடைசியாய் உட்கார்ந்திருந்த என் கணவரைத் தாண்டும்போது, காலை நறுக்கென்று ஒரு மிதி மிதித்துவிட்டு... ஒரு சாரியோ மன்னிப்போ எதுவும் கேட்காமல் வேகவேகமாய் குழந்தையை அழைத்துக்கொண்டு டாய்லெட்டை நோக்கிப் போனார்.

ஏற்கனவே, செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு வெறும் காலில் உட்கார்ந்திருந்த என் கணவர், வலி தாங்காமல் அவரைத் ஏதோ திட்ட வாயெடுத்தார்.

நான் இடைமறித்து,"விடுங்க ஏதோ படம் பாக்கற இன்ட்ரஸ்ட்ல போறாரு..."என்றதும் அமைதியாகி விட்டார்.

ஒரு ஐந்து நிமிடத்தில் குழந்தையை அழைத்துக் கொண்டு திரும்ப வந்து அந்த அரையிருட்டில் கண்கள் பழகும்வரை நின்றவர்... மெல்ல தட்டுத் தடுமாறி வரிசையைத் தேடிக் கொண்டே வந்து, என் கணவர் அருகில் வந்ததும் லேசான யோசனையுடன் கேட்டார்.

"சார்... போகும்போது உங்க காலையா நான் மிதிச்சுட்டேன்..?".

அந்த கிராமத்து ஆள் கேட்டதும் என் கணவரும் ஏதோ சாரி சொல்லப் போகிறானோ என்ற உணர்வில்,"ஆமாம், என் காலைத்தான் மிதிச்சீங்க..!" என்றார்.

கிட்டத்தட்ட அந்த கிராமத்து ஆள் சாரி சொன்னால் 'பரவாயில்லை' என்று சொல்லக்கூட என் கணவர் தயாரான அந்த விநாடியில் தான் அந்த ஆள் தனது குழந்தையைப் பார்த்துச் சொன்னார்.

"டேய் ராசு, இந்த வரிசைதாண்டா... யோசிக்காம உள்ளே போ..!".
.
.

Wednesday, October 20, 2010

வடை போச்சே...!

மூன்று மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள்.

வழியில் சிற்றுண்டி தாயாரிக்கும் பாட்டியிடம் டிபன் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.

ஒருவன் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க, மற்ற இருவரும் கார சாரமாக தாம் படித்ததைப் பற்றி விவாதித்துக் கொண்டே சாப்பிட்டனர்.

சாப்பிட்டுக் கிளம்பும்முன் பாட்டி, "எங்க போய்ட்டிருக்கிங்க தம்பி?" எனக் கேட்டாள்.

மூவரும் பரிட்சை எழுத போவதைப் பற்றிக் கூறினார்கள்.

அதற்கு பாட்டி, "நீங்க ரெண்டு பேரும் ஃபெயில் ஆயிடுவீங்கன்னு நெனைக்கிறேன். ஆனா இந்தத் தம்பி கண்டிப்பா பாஸ் ஆயிடும்..." எனக் கூறினாள்.

பாட்டியை முறைத்துக் கொண்டே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.


அனால், ரிசல்ட் என்னவோ பாட்டி சொன்னபடித்தான் இருந்தது..

இருவரும் அந்த பாட்டியிடம் சென்று "எப்படி பாட்டி ரிஸல்ட்டைக் கரெக்ட்டா சொன்னீங்க..? உங்களுக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா...?" என்று கேட்டதற்கு பாட்டி சொன்னாள்.

"எனக்கு ஜோசியமெல்லாம் தெரியாதப்பா... ஆனால், ஒண்ணு தெரியும். வேகாத வடை சத்தம் போட்டுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் ஓடும்... வெந்த வடையோ அமைதியா ஒரே எடத்துல இருக்கும்...!".
.
.
.

Tuesday, October 19, 2010

சுந்து என்கிற சுந்தரன்

அது ஒரு சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே.

ஒரு சிறுவனைக் குழந்தைகள் உட்காரும் இடத்தில் வைத்து ட்ராலியைத் தள்ளியபடி பொருட்களை எடுத்து வண்டியின் உள்ளே போட்டுக் கொண்டிருந்தார் அவனுடைய அப்பா.

அந்த வண்டி ஒரு ஸ்வீட் ரேக்கின் அருகே வரும் போது அந்தச் சிறுவன்,"அப்பா சாக்லேட்..." என்றான்.

"ம்ஹூம்..!" என்றவாறு அப்பா ட்ராலியைத் தள்ள...

"எனக்கு அந்த சாக்லேட் வேணும்... வேணும்...!" என்று பெருங்குரல் எடுத்துக் கத்த ஆரம்பித்தான் சிறுவன்.

கோபமாய் திரும்பிய அவன் அப்பா, ஒரு விநாடியில் தன்னைக் கன்ட்ரோல் செய்து கொண்டு கனிவாய்ச் சொன்னார்.

"நோ சுந்தர் நோ... இன்னும் ரெண்டு மூணு ரேக்தான்... முடிஞ்சது... வெயிட் பண்ணு..!" என்று சொல்லிக் கொண்டே ட்ராலியை அந்த இடத்தை விட்டு வேகமாய்த் தள்ளிக் கொண்டு அடுத்த வரிசைக்குப் போனார்.

சற்று நேரம்தான்.

ட்ராலி ஐஸ்க்ரீம் இருக்கும் பக்கம் போனதும் பையன் அடுத்த அட்டாக்கை ஆரம்பித்தான்.

"அப்பா ஐஸ்க்ரீம்...!".

அப்பா இப்போதும், "ம்ம்ஹூம்..!" என்றபடி ட்ராலியைத் தள்ள...

"ஐஸ்க்ரீம் வேணும்...!" என்று பையன் பிடிவாதமாய்க் கத்த ஆரம்பித்தான்.

"ஏற்கனவே சளிப் பிடிச்சிருக்கு.. இப்ப ஐஸ்க்ரீம் வேண்டாம்..!"என்றபடி ட்ராலியை அடுத்த வரிசைக்குத் திருப்பினார்.

பையன் இப்போது அதிக சப்தமாய், "எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்...ஐஸ்க்ரீம் வேணும்..." என்று அழுக ஆரம்பித்தான்.

இன்னும் டென்ஷனான அப்பா பல்லைக் கடித்துக் கொண்டு தணிந்த குரலில் சொன்னார்.

"சுந்தர் இன்னும் பத்து நிமிஷம்தான்... இப்ப முடிஞ்சுடும்..!" என்றபடி ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வர வர பையனுடைய அழுகை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பித்தது.

ட்ராலி பில் போடும் வரிசையில் நிற்கும்போது பையன் 'சிக்லெட்' கேட்க ஆரம்பித்திருந்தான்.

அப்போதும் அவனுடைய அப்பா, அந்தச் சிறுவனை ஆறுதல் படுத்தும் தொனியில் மெதுவான குரலில் சொன்னார்.

"நோ சுந்தர்.. இன்னும் ரெண்டு மூணு நிமிஷத்தில வெளியே போயிடுவோம். அதுக்கப்புறம் அஞ்சு நிமிஷத்தில வீட்டுக்கு போயிடுவோம். வீட்டுக்குப் போனதும் நல்ல ஒரு டிபன், அப்புறம் சூடா ஒரு கப் காப்பி... எதுவாயிருந்தாலும் அப்புறம்தான்.!".

அப்பா சொல்லிய பிறகும் விடாமல் 'சிக்லெட்' கேட்டுக் கொண்டே இருந்தான் சிறுவன்.

பில் போட்டு முடித்து காரை நெருங்கும்போது இதையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்த ஸ்ரீராம் அந்த அப்பாவை நெருங்கிச் சொன்னார்.

"ஹலோ.. நானும் முழுக்க உங்களை கவனிச்சுட்டே இருந்தேன். இந்தக் குட்டிப் பையன் சுந்தரை அழகா ஹேண்டில் பண்ணினீங்க... நல்ல பொறுமை உங்களுக்கு.. சூப்பர்..!".

கேட்டுக் கொண்டிருந்த அந்த அப்பா சொன்னார்.

"ஹையோ சார்... நீங்க வேற, நாந்தான் சுந்தர். இன்னேரம் நான் என்னைத்தான் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தேன். இதோ என்னை டென்ஷன் பண்ணிட்டே இருக்கானே என் பையன்.. இவன் பேரு டேனி...!".
.
.
.

Friday, October 15, 2010

தியான மண்டப திகில்

பொள்ளாச்சிக்கு அருகில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்தது அந்த தியான மண்டபம்.

அன்று நான் வேலை செய்த கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த இன்பச் சுற்றுலாவில் அந்த மண்டபம் போவதும் ஒரு நிகழ்வாயிருந்தது.

அந்தச் சுற்றுலா சனிக்கிழமை ஏற்பாடானது.

அன்று பள்ளி விடுமுறை என்பதால், என் நான்கு வயது மகன் டேனி என்னுடன் சுற்றுலா வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஆளியாறு அணை, குரங்கு அருவி, பூங்கா எல்லாம் சுற்றிவிட்டு தியான மண்டபம் போவது என முடிவு செய்து அதன்படியே எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

மாணவர்களுடன் ஒன்றாகக் கலந்துவிட்ட என் மகன், அருவியிலும் அணையிலும் ஆடிய ஆட்டங்கள் எனக்கு உற்சாகத்தை அளிப்பதாகவே இருந்தது.

எல்லாம் முடிந்து, கடைசியில் தியான மண்டபம் வந்தபோதுதான்... உண்மையான பிரச்சினை ஆரம்பமானது.

தியான மண்டபத்தில், அதன் வழிகாட்டி மாணவ மாணவியரை தியானத்தில் எவ்வாறு உட்கார வேண்டும், எவ்வாறு தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அமைதியாகத்தான் இருந்தான் டேனி.

ஆனால், எல்லோரும் தியானத்தில் ஆழ்ந்ததும் அந்த அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மெல்ல சப்தம் செய்ய ஆரம்பித்தான்.

யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிய ஆரம்பித்ததும் அவன் சப்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.

நான் அவனைச் சட்டென்று தியான மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வந்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் 'தியானம் என்றால் என்ன' என்பது குறித்து எல்லாம் அவனுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லிவிட்டுக் கேட்டேன்.

"என்ன நான் சொன்னது எல்லாம் புரிஞ்சதா...?".

புரிந்தது என்று தலையாட்டினான் டேனி.

"இப்பச் சொல்லு டேனி... தியான மண்டபத்துக்குள்ளே ஏன் சத்தம் போடக் கூடாது...?".

நான் கேட்டதும் எல்லாம் புரிந்ததுபோல் தலையாட்டிய படிக் கேட்டுக் கொண்டிருந்தவன் சொன்னான்.

"அதுவா... நான் சத்தம் போட்டா அங்கே தூங்கிட்டு இருக்கறவங்களுக்கு டிஸ்டபென்ஸா இருக்கும்...!".
.
.
.

Thursday, October 14, 2010

அப்பிடி இப்பிடி

சிஷ்யன்: சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் உண்டா குருவே..?

குரு: உண்டு.

சிஷ்யன்: இதற்குமுன் நான் போன குரு இல்லை என்கிறாரே..?

குரு: உனக்கு கல்யாணமாகிவிட்டதா..?

சிஷ்யன்: ஆமாம் குருவே... குழந்தைகள் கூட உண்டு.

குரு: முன்னர் நீ போன குருவுக்கு..?

சிஷ்யன்: அவர்தான் துறவி ஆயிற்றே குருவே..! அவருக்குத் திருமணம்
ஆகவில்லை.

குரு: அதனால்தான் அவருக்கு அப்படி உனக்கு இப்படி.
.
.
.

Monday, October 11, 2010

ஹாட் காஃபி

தில்லுதுர அன்று தீபாவளி பர்ச்சேஸ் முடிக்க தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு வந்திருந்தார்.

தீபாவளிப் பர்ச்சேஸை ஆடித் தள்ளுபடியிலேயே முடித்துவிடுவது அவர் ஸ்டைல்.

மனைவியைப் பெரும்பாலும் வெளியே அழைத்து வருவதும் அப்போதுதான்.

மனைவிக்கோ அவருடன் பர்ச்சேஸ் செய்வதென்பது மரண அவஸ்தை.

ப்ளாட்பார்ம் கடைகளில் கிடைக்காததை, அல்லது மனைவி குழந்தைகள் வாங்க மறுத்து வம்பு செய்தால் மட்டுமே கடைக்குள் நுழைவது அவர் பாலிஸி.

அதனால்தான், இன்று குழந்தைகளை ஸ்பெஷல் க்ளாஸ் அனுப்பிவிட்டு மனைவியை மட்டும் அழைத்துக்க் கொண்டு ரங்கனாதன்  தெருவுக்கு வந்திருந்தார்.

காசு கொடுத்து எதையும் வாங்குவதென்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று.

வந்தவர் பர்ச்சேஸ் செய்த கதை சொல்ல கம்பனால்கூட முடியாது என்பதால் கடைசிச் சாப்டரை மட்டும் சொல்கிறேன் நான்.

பர்ச்சேஸ் முடித்துவிட்டு பஸ் ஸ்டான்ட் அருகில் வந்த அவர் மனைவி கேட்டதற்காக, அவளை முறைத்துக்கொண்டே காப்பிக் கடைக்குள் அழைத்துச் சென்றார்.

ரெண்டு காப்பி சொல்லிவிட்டு வந்ததும்...
அந்தக் காப்பியை ஆற்றக்கூட ஆற்றாமல் கொள்ளிவாய்ப் பிசாசு போல  அப்படியே சுடசுடக் குடித்தார்.

அதைப் பார்த்துத் திகைப்படைந்து மனைவி கேட்டார்.

"என்னங்க... இவ்ளோ சூடாக் குடிக்கறீங்க...?".

தில்லுதுர அப்போதும் பதட்டத்துடன் சொன்னார்.

"அடியே... நீயும் சீக்கிரம் அந்தக் காபியை குடிச்சுடுடி. அங்கே போர்ட்ல என்ன போட்டிருக்கான் பாரு.. ஹாட் காஃபி  10 ரூபாய்... கோல்ட் காஃபி 25 ரூபாய் ...!".
.
.

Friday, October 8, 2010

"யேசுவின் ஹேர் ஷ்டைல்"

பீட்டர் கர்த்தரை முழுமையாக விசுவசிக்கும் ஓர் அற்புதமான கிறிஸ்துவர்.

தானும் தனது வாழ்க்கையும் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் இப்படிதான் இருக்கவேண்டும் எனக் கொள்கை வகுத்து, அதன்படி பிடிவாதமாக வாழ்ந்து வருபவர்.

ஆனால், மகன் ஜான்சன் இந்தக்கால முழு இளைஞன்.

அவன் போடும் ஜீன்ஸ்களும் பெரிய பெரிய டிஸைன் சட்டைகளும் பின் கழுத்துக்குக் கீழே தொங்கும் நீண்ட முடியும் நண்பர்களுடன் அவன் அடிக்கும் செல்போன் அரட்டையும் பீட்டருக்குச் சுத்தமாய்ப் பிடிக்காதுதான் என்றாலும்... தனது ஒரே மகன் வருத்தப் படக்கூடாது என்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார்.

பிரச்சினை, ஜான்சன் தனது கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கியதும்தான் ஆரம்பித்தது.

ஜான்சன் தன் அப்பாவிடம் வந்து கேட்டான்.

"அப்பா... நான் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கியாச்சு. நாளைலருந்து நானும் உங்க காரை யூஸ் பண்ணப் போறேன்..!".

பீட்டர் தன் மகனை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு - தன் மகனுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க இதுதான் சரியான நேரம் என்று யோசித்தபடியே - சொன்னார்.

"ஜான்சன்... உனக்கு நம்ம காரை உபயோகப்படுத்த எல்லா உரிமையும் இருக்கு. ஆனால், அதுக்கு முன்னால் எனக்கு நம்பிக்கை வர நீ சில காரியங்கள் செய்யணும்..."

ஜான்சன் கேட்டான்,"என்னப்பா செய்யணும்..?".

"மொதல்ல டெய்லி பைபிள் படிக்கணும். சும்மா படிக்கறது இல்ல... உணர்ந்து படிக்கணும். எல்லார்கிட்டயும் நல்ல பையன்னு பேர் வாங்கற மாதிரி நடந்துக்கணும். அப்பறம், பின்னால தொங்கற அந்த நீளமான முடியைக் கட் பண்ணி ஷார்ட் பண்ணிக்கணும்..!"

"ஒக்கேப்பா... நீங்க சொன்னபடி செஞ்சுட்டு அப்புறம் காரை வாங்கிக்கறேன்...!".

மூன்று மாதங்கள்...ஜான்சன் சொன்னபடி செய்து காட்டினான்.

பொறுப்பான படிப்பு,நல்ல ரேங்க்,பைபிளில் நாட்டம், சர்ச்சுக்கு தவறாமல் செல்லுதல் என பீட்டருக்கேத்த பையன் என்று ஜான்சன் பேர் வாங்க ஆரம்பித்தான்.

எல்லாம் சரியாக இருந்தாலும்... அந்த ஹேர் ஷ்டைல் விஷயத்தில் மட்டும் மாற்றமே இல்லை.

பீட்டர் பொறுமையாய்க் காத்திருந்த அந்த நாள் வந்தது.

ஜான்சன் அப்பாவிடம் திரும்ப வந்தான்.

"அப்பா... நீங்க என்னைப் பத்தி இப்பத் திருப்தி ஆயிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். எனக்கு எப்ப இருந்து கார் தரப் போறீங்க..?".

பீட்டர் கேட்டார்,"ஜான்சன் நாம என்ன பேசினோம்னு மறந்திட்டியா...? மத்ததெல்லாம் சரி, இந்த ஹேர் ஷ்டைல்... அது அப்படியே இருக்கே...?".

ஜான்சன் தன் அப்பாவிடம் தெளிவாய்க் கூறினான்.

"அப்பா... நானும் மொதல்ல முடிய வெட்டிடலாம்னுதான் நெனச்சேன். ஆனா, பைபிள் படிக்க ஆரம்பிச்சதும்தான் அந்த முடிவை மாத்திக்கிட்டேன். பாருங்க, பைபிள்ல போட்டிருக்கு... சாம்சன் நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு, மோசஸ் நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு, நோவா நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு, இன்னும் ஏன்... யேசுவே என்னை மாதிரி நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு...!".

ஜான்சன் சொல்லி முடித்ததும் பீட்டர் சிரித்தபடியே சொன்னார்.

"ஆமாம் மகனே... நீ சொன்ன மாதிரி அவங்க எல்லோரும் நீளமான முடிதான் வச்சிருந்தாங்க. ஆனா, அவங்க வெளியே போகும் போது, அவங்க அப்பாகிட்ட கார் கேக்கல.. நடந்துதான் போனாங்க...!".
.
.
.

Thursday, October 7, 2010

டேனி @ கிரிக்கெட்

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஆடும் ஒன்டே மேட்ச் அது.

முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா ஆட, எல்லாம் முடிந்து கடைசி ஓவரில் கடைசி விக்கெட்டுடன் இந்தியா ஆடிக் கொண்டிருக்கிறது.

கடைசியான இந்த ஓவரில் எடுக்க வேண்டிய ரன்கள் நான்கு.

சுலபமாய் ஜெயிக்க வாய்ப்பு இருந்தாலும், பேட்டிங் சைடில் இருப்பதோ டர்டஜன்சிங்.

மறுமுனையில் நிற்கும் கேப்டன் டேனிக்கு பகீரென்றிருந்தது.

பவுலரான டர்டஜன்சிங் அப்படியொன்றும் பேட்ஸ்மேன் இல்லை என்றாலும், இப்போது எப்படியாவது ஒரு ரன் எடுத்து ஓடி வந்துவிட்டால், மேட்ச்சை ஜெயித்து விடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொண்டு காத்திருந்தான்.

இருப்பது ஆறு பால்... தேவையோ நாலு ரன்.

என்ன செய்யப் போகிறானோ டர்டஜன்சிங்..!

ஓவரின் முதல் பால்.

ஆஸ்திரேலியா பவுலர் பேயாய் ஓடி வந்து பாலைப் போட்டான்.

பவுன்ஸர்.

டர்டஜன்சிங் குனிந்து கொண்டான்.

ரன் இல்லை.

இன்னும் ஐந்து பால்.. நாலு ரன்.

இப்போது பவுலர் போட்டது யார்க்கர்.

கிழே விழ இருந்த டர்டஜன்சிங் ஒருவாறு சமாளித்து நின்றான்.

"அப்பாடா விக்கட் இல்லை..ரன்னும் இல்லை..."

டேனிக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

இன்னும் நாலு பால், நாலு ரன்.

டேனி ஏதோ ஜாடை செய்கிறான்.

டர்டஜன்சிங் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

பவுலர் இப்போது போட்டதோ மகா ஸ்லோ பால்.

தட்டுத் தடுமாறி, டர்டஜன் அந்த பாலைத் தொடுவதற்குள் அது கீப்பர் கைக்குப் போய்விட்டது...ரன் இல்லை.

இன்னும் மூணு பால், நாலு ரன்.

கேப்டன் டேனி, கடுப்புடன் டர்டஜன்சிங்கிடம் சென்று ஏதோ முணுமுணுத்துவிட்டு வந்தான்.

அடுத்த பால்... சற்று வேகமாய் ஸ்டெம்பை நோக்கி சீறிக் கொண்டு வர, டர்டஜன்சிங் சற்றும் யோசிக்காமல் ஸ்டம்ப்பை விட்டு சுத்தமாய் ரெண்டு அடி விலகி நின்றான்.

லட்டுப்போல், பந்து ஸ்டம்ப்பைத் தகர்க்க...

"க்ளீன் போல்ட்...!" ஆஸ்திரேலியர்கள் கத்திக்கொண்டு கொண்டாட்டமாய் ஓட...

இந்தியா தோற்றது.

பெவிலியன் திரும்பும்போது, டேனி பயங்கரக் கோபத்துடன் டர்டஜன்சிங்கைப் பார்த்துக் கேட்டான்.

"ஏண்டா... அப்படிப் பண்ணின...?"

டேனி அப்படிக் கேட்டதும், டர்டஜன்சிங் அப்பாவியாய் டேனியைப் பார்த்துக் கேட்டான்.

"என்னடா இப்படிக் கேக்கற..? நீதானடா சொன்ன - 'பயபடாம வெளயாடு, பீ போல்டுன்னு...' - அதான் போல்டாயிட்டேன்..!".
.
.

Wednesday, October 6, 2010

த்ரீ ஸ்டேஜஸ்

குரு தனது சிஷ்யர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

"ஞானம் அடைவதற்கு மனிதன் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது..!".

ஆர்வத்துடன் ஒரு சிஷ்யன் கேட்டார்.

"அவை என்னென்ன நிலைகள் என்று கூற முடியுமா குருவே..?".

குரு புன்னகைத்த படியே சொன்னார்.

"அவை பாமர நிலை, ஆன்மிக நிலை மற்றும் தெய்வீக நிலை..."

சிஷ்யர் தொடர்ந்து கேட்டார்.

"குருவே பாமர நிலை என்பது என்ன..?".

குரு சொன்னார்.

"அது மிக எளிமையானது. அந்த நிலையில் ஒருவனுக்கு மரங்கள் மரங்களாகவும் மலைகள் மலைகளாகவும் தெரிகிறது..!".

சிஷ்யர் அடுத்துக் கேட்டார்.

"சரி குருவே... ஆன்மிக நிலை என்பது என்ன..?"

குரு தொடர்ந்தார்.

"அது சற்று நுண்மையானது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் நிலை அது. இந்நிலையில் அவன் பொருட்களின் உள்ளார்ந்து பார்க்கும்போது மரங்கள் நீண்ட நேரம் மரங்களாக இருப்பதில்லை... மலைகளும் நீண்ட நேரம் மலைகளாக இருப்பதில்லை..!".

சிஷ்யர் விடுவதாயில்லை... அவர் கேட்டார்.

"அப்போ தெய்வீக நிலை என்பது என்ன குருவே..?".

குரு தனது புன்முறுவல் மாறாமல் தொடர்ந்து சொன்னார்.

"அதுதான் முழுவதும் உணர்ந்த ஞான நிலை. இப்போது மரங்கள் மீண்டும் மரங்களாகவும் மலைகள் மீண்டும் மலைகளாகவும் அவனுக்குத் தெரிய ஆரம்பிக்கும்...!".

Tuesday, October 5, 2010

முத்தம்

அன்று என் வீட்டில் ஒரு கெட்-டுகெதர் அரேன்ஞ்மென்ட் ஏற்பாடு செய்திருந்தேன்.

அதன் பொருட்டு வீட்டிற்கு உடன் பணிபுரியும் தோழிகள் சிலரை வரச் சொல்லியிருந்தேன்.

நானும் என் கணவரும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க, பார்ட்டிக்கு சற்று நேரத்திற்கு முன்பு... கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு அப்படியே அழுக்காய் வந்து நின்றான் என் நான்கு வயது மகன் டேனி.

நான் அவனைப் பார்த்து,"டேனிக்குட்டி ஓடு... ஓடிபோய் முகத்தைப் பளிச்சுனு கழுவிட்டு வந்து நில்லு பார்ப்போம்...!".

டேனி உடனே மறுப்பாய்த் தலையை ஆட்டினான்.

"முடியாது... முகத்தைக் கழுவ மாட்டேன் போ...!".

சிலசமயங்களில், அவன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால்.. அவனை தாஜா செய்ய ஆரம்பித்தேன்.

"டேனி குட் பாய்தானே...? யாராவது டேனியப் பார்த்து 'அழுக்குப் பையன்'னு சொல்லலாமா...? இப்ப நீ போட்டிருக்கற ட்ரஸ் சூப்பரா இருக்கு. போய் முகத்தை மட்டும் நல்லா சோப்புப் போட்டு கழுவிட்டு வருவியாம். அப்பத்தான் பார்ட்டிக்கு வர்ற அம்மாவோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் 'யாரிந்த அழகான குட்டிப் பையன்'னு தூக்கி கன்னத்துல முத்தம் கொடுப்பாங்களாம்...?".

நான் செல்லமாய் அவனிடம் பேசப் பேச... லேசாய் மனம் மாறியவன் முகம் கழுவ ஒத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போனான்.

பார்ட்டிக்கான டேபிளை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருக்கும்போது திருத்தமாய் ட்ரஸ் பண்ணிக்கொண்டு வேகவேகமாய் ஹாலுக்கு திரும்ப ஓடி வந்தவன், சிரித்தபடியே என்னிடம் சொன்னான்.

"அம்மா... அப்பாவும் முகம் கழுவிக்கிட்டு இருக்காங்க...!".
.
.
.

மஞ்சுஸ்ரீ

மஞ்சுஸ்ரீ என்னும் சீடருக்கு ஞானம் வந்துவிட்டதை உணர்ந்த புத்தர் அவரை அழைத்தார்.

"மஞ்சு... நீ உலக மக்களுக்கு ஞானத்தை வழங்கும் நேரம் வந்துவிட்டது. விழிப்புணர்வு பெற்றுவிட்டாய்! நீ போகலாம்..." என்று வாழ்த்தி அனுப்பினார்.

குருவின் ஆணையை மீற முடியாத மஞ்சு, புத்தரைப் பிரிய மனமின்றி அழுது புரண்டார்.

அதைப் பார்த்த புத்தர்,"ஏன் அழுகிறாய்? உனக்கு ஞானம் வந்த பிறகும் ஏன் இந்த மயக்கம். இன்னும் என்னிடம் இருந்து உனக்கு என்ன நடக்கப் போகிறது..?" என்று கேட்டார்.

"ஐயனே! இதைவிட பாக்கியம் வேறு என்ன இருக்கப் போகிறது. உங்களை அன்றாடம் பார்த்துப் பரவசம் கொள்வது ஒன்றே எனக்குப் போதுமானது" என்று வருந்தினார் மஞ்சு.

புத்தர் மஞ்சுவை மிகப் பரிவாய் அருகில் அழைத்தார்.

"நீ எங்கிருந்தாலும் என் அன்பும் ஆசியும் உண்டு.. சென்று வா...!" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

இதைக் கண்ட மற்ற சீடர்கள் புத்தரிடம் கேட்டார்கள்.

"ஞானம் கைவரப் பெற்ற மஞ்சு ஏன் இப்படிச் செய்கிறார்?".

அதற்கு புத்தர் சொன்னார்.

"அடக்கம் உள்ள இடத்தில் அகந்தை என்றும் தலைகாட்டுவதில்லை...!".
.
.
.

வாய் கொஞ்சம் நீளம்

ஒரு காகமும் தவளையும் பேசிக் கொண்டிருந்தன.

காகம் தவளையிடம் சொன்னது.

"தவளையே... உனக்குத் தெரியுமா? சொர்க்கத்தில் ஒரு மிகப் பெரிய விருந்து நடக்கப் போகிறது...!".

தவளை உடனே தன் வாயைப் பிளந்தது.

"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".

காகம் தொடர்ந்தது.

"அங்கே, நீ இப்பூவுலகில் பார்த்த எல்லாவற்றையும்விட மிகச் சுவையான உணவுகளும் அமிர்த பானங்களும் பரிமாறப்படப் போகிறது..!".

தவளை மறுபடியும் தன் வாயைப் பிளந்தது.

"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".

காகம் தொடர்ந்தது.

"நாம் விளையாட உலகின் மிக அழகிய ஜோடியும் சின்ன சொர்க்கம் போன்ற வீடும் அங்கே கொடுப்பார்கள்..!"

தவளை தன் வாயை மேலும் அதிகமாகப் பிளந்தது.

"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".

காகம் தொடர்ந்து சொன்னது.

"ஆனால் ஒரு பிரச்சினை. அங்கே பெரிய வாயுடைய யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்களாம்...!"

தவளை உடனே தனது வாயை இறுக மூடிக்கொண்டு முணுமுணுத்தது.

"பாவம் முதலை... ஏமாந்துவிடும்..!".
.
.
.

Monday, October 4, 2010

தலையில் நின்ற செருப்பு

செனகா என்பவர் பித்தாகரசின் சீடர்.

அவர் தனது செருப்புகள் தேய்ந்து போனதால், செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் ஒரு ஜோடி செருப்புக்காக அளவு கொடுத்திருந்தார்.

செனகா அதைப் பெற்றுக்கொள்ளச் சென்ற அன்று, கையில் பணம் இல்லாததால்... அடுத்த வாரம் கூலிப்பணம் தருவதாகச் சொல்லி, கடனாக அந்த ஜோடிச் செருப்பைப் பெற்றுக் சென்றார்.

ஒரு வாரம் கழிந்தது.

செனகா அந்தப் பாக்கிப் பணத்தைக் கொடுக்கச் சென்றபோது, அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி இறந்து போயிருந்தார்.

தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டே சப்தமில்லாமல் திரும்பிவிட்டார் செனகா.

அடுத்த ஒரு வாரமும் நத்தையாய் நகர்ந்தது.

ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வில், உள்ளுக்குள்ளேயே குறுகிக் கொண்டிருந்தார் செனகா.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர்...

ஒருநாள் பொறுக்க முடியாமல், அந்த செருப்புக் கடைக்குப் போய், ஆவேசமாகப் பணத்தை வீசிவிட்டுக் கத்தினார்.

"தொலைந்து போ! ஊருக்கெல்லாம் செத்துப் போன நீ, எனக்கு மட்டும் ஒரு வாரமாய் உயிரோடிருந்தாய்...!".
.
.
.

Friday, October 1, 2010

அப்பிரதட்சணம்

டேனி அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது..

வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடப் போய் இருக்கிறான்.

சாமி கும்பிட்டு விட்டு, அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான்.

கொஞ்ச நேரம் கழித்து, அவனைப் பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி.

வலமிருந்து இடமாக பிரதட்சணம் சுத்தாமல். பையன் அப்பிரதட்சணமாக இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான்.

இவனது கோக்குமாக்கை அந்த அர்ச்சகர், அவனை தடுத்து நிறுத்தி.. "ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க...?"ன்னு கேட்டிருக்கார்.

அவனோ, ”என்னோட அம்மா அனுமாரை தினம் பதினோரு சுத்து சுத்தச்சொன்னாங்க... நான் ஏதோ நியாபகத்துல அதிகமா சுத்திட்டேன். அதனால.. கூடுதலா சுத்துனதை இப்போ எடுத்துகிட்டு இருக்கேன்...”னு சொல்லி இருக்கான்.
.
.
.
நன்றி:  யெஸ்.பாலபாரதி