Wednesday, September 18, 2013

நாளைக்கு மழ வருமுங் ஸாமீயோவ்…


டைரக்டர் முனிரத்தினத்தின் புதிய பட ஷூட்டிங் அந்த அடர்ந்த கானகத்தின் உள்ளே நடந்து கொண்டிருந்தது.

படத்தின் ஒரு காட்சிக்காக குடிசைகள் போட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஒரு ஆதிவாசி,"குடிசை போடாதீங்க ஸாமீ... நாளைக்குப் புயல் வருமுங்க..!" என்று சொல்லிவிட்டுப் போனார்.

எதற்கும் பார்ப்போமே என்று முனிரத்னம் வேலையை நிறுத்திவிட்டுப் பார்க்க…

சொன்னது போலவே, மறுநாள்  கடும்புயல் அடித்து... அது போட்டிருந்த ஒன்றிரண்டு குடிசையையும் அடித்து துவம்சம் செய்துவிட்டுப் போனது.

இன்னும் சில நாட்கள் போயிருக்கும்.

ஆற்றங்கரையோரம் கோயில் ஒன்று செட் போட்டுக் கொண்டிருக்கும்போது அந்தப்பக்கமாய் வந்த அதே ஆதிவாசி,"நாளைக்கு பெருமழை இருக்கு ஸாமீயோவ்...! ஆத்துல வெள்ளம் வந்தாலும் வருமுங்க.." என்று சொல்லிவிட்டுப் போனார்.

சொன்னதுபோல், மறுநாள் மழை கொளுத்த ஆரம்பித்தது.

 மூன்று நாளும் விடாது பெய்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
'ஆதிவாசிகள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் என்பது தெரியும். அதற்காக இப்படியா..?' டைரக்டர் முனிரத்தினம் மிரண்டு விட்டார்.

அவர் தன்னுடைய உதவியாளர்களை கூப்பிட்டு "இந்த மனுசனை புடிச்சு வச்சிக்கங்கப்பா. நம்ம ஷூட்டிங் முடியற வரைக்கும் நமக்கு யூஸ்ஃபுல்லா இருப்பான்...!".

டைரக்டர் சொன்னபடி, அந்த ஆதிவாசியும் மிகச்சரியாக காலநிலைகளைக் கணித்துச் சொல்ல… இவர்கள் அந்த ஆதிவாசி சொன்னதற்கேற்ப ப்ளான் செய்து ஷூட்டிங்கை விறுவிறுவென நடந்து கொண்டிருந்தார்கள்.

அன்று மேக்சிமம் ஸ்டாரின் கால்ஷீட். காட்சியோ உச்சபட்ச வெயில் வேண்டிய காட்சி. நாளைய சீதோஷ்ணம் எப்படியிருக்கும் எனத் தெரிந்துகொள்ள, டைரக்டர் அந்த ஆதிவாசியை அழைத்துக் கேட்டார்.

"நாளைக்கு கிளைமேட் எப்படியிருக்கும்..?".

டைரக்டர் கேட்டதும் அந்த ஆதிவாசி தன் தோள்களைக் குலுக்கியவாறே சொன்னார்.

"தெரியாதுங் ஸாமீ..!".

ஆதிவாசியின் பதிலால் ஆச்சர்யமாகிப்போன டைரக்டர் முனிரத்தினம் கேட்டார்.

"தெரியாதா... ஏன் தெரியாது..?".

கேட்ட டைரக்டரின் முகத்தைப் பார்த்து அப்பிராணியாய் அந்த ஆதிவாசி சொன்னார்.

"நேத்து ரேடியோப் பொட்டி கீழவிழுந்து ஒடஞ்சுபோச்சுங் ஸாமீயோவ்..!".
.
.
.


Sunday, September 8, 2013

குடி…. குடியைக் கெடுக்கும்.!


தில்லுதுரயின் மருமகன் ஒரு மகா குடிகாரன்.

டாஸ்மாக்கே கோயில் என வாழும் தமிழ்க் குடிமகன்களில் ஒருவன்.

எத்தனையோ முறை மகளும் மனைவியும் புகார் கூறியும் தில்லுதுர அதுகுறித்து தனது மருமகனிடம் பேசியதில்லை.

குடிப்பதினால் ஏற்படும் சங்கடங்களை உணரும்போது அவர் அதை நிறுத்திவிடுவார் என்பது தில்லுதுரயின் எண்ணம்.

ஆனால், தில்லுதுரயின் மனைவியோ இதை விடுவதாயில்லை.

மருமகனை எப்போதும் திட்டுவதும் கேவலமாய்ப் பேசுவதும் எனத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

தில்லுதுர மனைவியிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் எப்போதும் போல், தில்லுதுரயின் பேச்சை மதித்ததேயில்லை.

அன்றும் அப்படித்தான்.

தீபாவளிக்கோ எதற்கோ மகளுடன் வீட்டுக்கு வந்த மருமகன், மாலை வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று ஆரம்பித்த வக்குவாதம்… சண்டையாய் மாறி, கைகலப்பாகி கடைசியில் தில்லுதுரயின் மருமகன் தில்லுதுரயின் மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்றதில் போய் முடிந்துவிட்டது.

நல்லவேளையாய், மருமகன் துப்பாக்கி குறி தவறியதால் மாமியார் உயிர் தப்பிவிட, அவர் மருமகன் மீது போலிசில் புகார் செய்தேயாக வேண்டும் என அலுவலகத்தில் தில்லுதுரயை உடனே வரச் சொன்னார்.

தில்லுதுர வீடு வந்து சேர்வதற்குள் நிலவரம் ஓரளவு தணிந்திருக்க, மனைவியை சமாதானப் படுத்திவிட்டு, மருமகனைக் கூப்பிட்டு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

“இதோ பாருங்க… குடிக்கறது ஒரு மோசமான பழக்கம். அதனால, நீங்க என்னென்ன இழந்திருக்கீங்கனு யோசிச்சுப் பாருங்க. உங்க மனைவியின் அன்பு, குழந்தைகளுடனான விளையாட்டு, உறவுகளுடனான கொண்டாட்டம், உங்க மரியாதை இப்படி எல்லாத்தையும் இழந்திருக்கீங்க..”

மருமகன் தில்லுதுர சொல்வதின் அர்த்தம் ஓரளவு புரிந்து கவலையுடன் பார்க்க… தில்லுதுர தொடர்ந்தார்.

“இதையெல்லாம் தாண்டி இன்னிக்கு பொறுப்பான உங்க கையில் துப்பாக்கி தூக்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனா, நல்லா யோசிச்சுப் பாருங்க. இந்தக் குடியாலதான் இன்னிக்கு உங்க குறியும் தவறிப் போச்சு.! இதை உணர்ந்துகிட்டீங்கனா சரி.!”.
.
.
.



Saturday, September 7, 2013

அமாவாசை பூஜை


பொதுவாய் அமாவாசை தினங்களில் சாமி கும்பிடுவதுடன் இறந்தவர்களுக்கும் படைப்பது எங்க வீட்டுப் பழக்கம்.

அன்றும் அப்படித்தான்.

சமையலை முடித்து பூஜைக்கான ஏற்பாடு செய்வதற்குள் அவரைப் பூக்கடைக்குப் போய் தேவையான பூ மற்றும் மாலைகளை வாங்கி வரச் சொல்லியிருந்தேன்.

வந்தவர் மாலைகளை சாமி படங்களுக்குப் போட ஆரம்பிக்க, டேனி - தனக்கும் மாலை வேண்டும்... நானும் படங்களுக்கு போடுவேன் -  என்று அவரிடம் வம்பு செய்ய ஆரம்பித்தான்.

தொந்தரவு தாங்காமல் டேனியிடமும் மலர்ச் சரங்களைக் கொடுத்து படங்களுக்கு வைக்கச் சொன்னேன்.

அளவாய் நான் வெட்டிக் கொடுக்க முதலில் அவன் கைக்கு எட்டிய சாமி படங்களில் அதை மாலை போல் மாட்டிவிட்டு வந்தான்.

அடுத்துக் கொடுத்த சரத்தை அவருடைய அப்பா படத்துக்கு மாலை போட்டுவிட்டு வந்தவன், அதற்கடுத்ததை அவர் அம்மா படத்துக்கு போடப் போக நான் தடுத்தேன்.

“டேனி… அப்பத்தா படத்துக்கு மாலை போடக்கூடாது.!”.

நான் சொன்னதும் குழப்பத்துடன் திரும்பியவன் கேட்டான்.

“ஏம்மா… அப்பத்தா படத்துக்கு போடக்கூடாது.? தாத்தா படத்துக்கு போட்டோமே.!”.

டேனி கேட்டதும் அவனுக்கு புரியும்படியாய் சொல்ல ஆரம்பித்தேன்.

“ஏன்னா… அப்பத்தா உயிரோட இருக்காங்கதான… அதனால அவங்க படத்துக்கு மாலை போடக்கூடாது. ஆனா… தாத்தா செத்துப் போயிட்டாங்கல்ல… அதனால அவங்க படத்துக்கு மாலை போடலாம்.!”.

சொன்னதும் ஓரளவு புரிந்த பார்வையோடு திரும்பிய டேனி, மறுபடி குழப்பத்தோடு தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“ஏம்மா… இப்ப சாமி படத்துக்கு மாலை போட்டமே… அப்ப சாமியும் செத்துப் போச்சாம்மா.?”.
 .
.
.


Wednesday, September 4, 2013

இறந்த பிறகு என்னவாய் ஆகிறோம்


ஜப்பானிய மன்னன் ஒருவனுக்கு திடீரென ஒரு தீவிர சந்தேகம் கிளம்பியது.

இந்த துறவிகள் ஏன் துறவறம் மேற்கொள்கிறார்கள்.? நாம் இறந்தால் என்ன ஆவோம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆனால் இந்தத் துறவிகள் இறந்த பிறகு ஏதும் அதிசயங்கள் நடக்குமோ.? அதனால்தான் துறவறம் பூணுகிறார்களோ.?

தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அவன் ஒரு சென் துறவி குடோ-வை அணுகினான்.

“தன்னை முழுவதும் உணரும் ஞானஒளி பெற்ற ஒரு ஞானகுரு தான் இறந்த பிறகு என்ன ஆகிறான்.?” என்று கேட்டான்.

துறவியோ எந்த உணர்ச்சியும் இன்றி மன்னனைப் பார்த்துக் கேட்டார்.

“அதை ஏன் மன்னா என்னிடம் கேட்கிறாய்.? அது எப்படி எனக்கு தெரியும்.?”.

மன்னன் இன்னும் அதிக குழப்பத்துடன் குருவிடம் கேட்டான்.

“உங்களுக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும். நீங்கள்தானே ஞானகுரு.?”.

மன்னன் கேட்டதும் குடோ அவனைப் பார்த்து புன்னகைத்தபடி பதில் சொன்னார்.

“ஆமாம்… நான் ஞானகுரு தான். ஆனால் நான் இன்னும் சாகவில்லையே.!”.
.
.
.


Monday, September 2, 2013

டேனி என்றொரு தமிழறிஞன்


டேனியின் வகுப்பில் தமிழ் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்த காலம்.

அன்று டேனி தன் வகுப்புத் தோழர்கள் பெயரை தமிழில் எழுதி விளையாடிக் கொண்டிருந்தான்.

விடுமுறை தினம் என்பதால் நான் சமையலறையில் மும்முரமாய் இருக்க இவன் முன்னறையில் இருந்தான்.

ஒரு பத்து நிமிடம் போயிருக்கும்.

“அம்மா… அம்மா…” என்று கூப்பிட்ட படியே வந்தவன்,”அம்மா… றிவுக்கரசு-க்கு ஸ்பெல்லிங் என்ன.? பெரிய றி-யா சின்ன ரி-யா… எப்படி எழுதணும்.?”.

எனக்கு அவன் வகுப்பில் அறிவுக்கரசு என்றொருவன் படிப்பது தெரியும் என்றாலும், முதலில் அவன் கேட்டதை சொல்லிவிடுவோம் என்று யோசித்தபடியே, “பெரிய றி-தான் போடணும். அப்பறம் வ போட்டு வு. அடுத்து க். அப்பறம் க. அடுத்து ஒரு சின்ன ர. அப்பறம் ச-போட்டு சு.!”.

கவனமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தவன், “ஓக்கேம்மா.!” என்றபடி நகர நான் குறுக்கிட்டு அவனுக்கு புரிவதற்காக மெதுவாய்ச் சொன்னேன்.

“டேனி… ஆனா உன் ஃப்ரண்ட் பேரு றிவுக்கரசு இல்ல… அது அறிவுக்கரசு.. சோ… அறிவுக்கரசுனு எழுத நீ கேட்ட றிவுக்கரசு ஸ்பெல்லிங்குக்கு முன்ன அ போடணும்.!”

சொன்னதும் டேனி முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சொன்னான்.

“அவன் பேர்லயே எனக்கு அ மட்டுந்தாம்மா தெரியும். அத முன்னாடியே நான் பேப்பர்ல எழுதிட்டேன்.!”.

.
.
.