Showing posts with label எடை. Show all posts
Showing posts with label எடை. Show all posts

Thursday, October 28, 2010

பொறியாளர்

மதுரை மாநாட்டில் அம்மா சொன்ன குட்டிக் கதை இது.


ஒரு புகழ்பெற்ற பொறியாளர் ஒருவர் இருந்தார்.

அவர் மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரு பாலத்தைக் கட்டினார்.

அந்தப் பாலத்தின் தன்மை மற்றும் உறுதி பற்றிக் கூறும்போது அவர் சொன்னார்.

"இந்தப் பாலம் முப்பது டன் எடை வரை தாங்கக்கூடியது. ஆனால், அதற்குமேல் ஒரு குண்டூசி வெயிட் அதிகமானால்கூட பாலம் உடைந்து நொறுங்கிவிடும்...!" என்றாராம்.

அதையும் செக் செய்துவிடலாம் என்று, மொத்த எடையுடன் தனது எடையும் சேர்த்து சரியாய் முப்பது டன் எடையுடன் ஒரு லாரி பாலத்தின் மீது அனுப்பப்பட்டது.

லாரி கிளம்பி கிட்டத்தட்ட நடுப்பாலம் வரை வந்துவிட்டது.

அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது.

எங்கிருந்தோ பறந்து வந்த நான்கு புறாக்கள் லாரியின் மீது சாவகாசமாய் வந்து அமர்ந்தன.

எல்லோரும், பாலம் எப்போது உடையுமோ என்று திக் திக்கென்று பார்த்துக் கொண்டிருக்க, பாலத்திற்கு எந்த ஒரு சேதமும் இல்லாமல்... லாரி பாலத்தின் மறுபக்கம் வந்து சேர்ந்தது.

எல்லோரும் அந்த பொறியாளரைப் பார்த்து,"என்ன உங்க கணக்கு தப்பாகிவிட்டதே..?" என்று கேட்க, அந்த பொறியாளர் சொன்னார்.

"என் கணக்கு எப்போதும் தப்பாகாது. லாரி பாலத்தின் இந்த முனையிலிருந்து கிளம்பி நடுவே வருவதற்கு ஒன்றரை கிலோமீட்டர் தூரம். அவ்வளவு தூரம் வருவதற்கு செலவான டீசலின் எடையைவிட புறாக்களின் எடை குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான், பாலம் உடையவில்லை..!" என்று விளக்கம் கொடுத்துவிட்டு தனது மாணவர்களுடன் நடந்து போனாராம்.
.
.
.

Monday, June 28, 2010

டைம் மெஷின்







அன்று நான் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்தேன்.

பாலக்காடு செல்லும் பஸ் வர இன்னும் அரை மணியாகும் என்றதால் கிடைத்த சீட்டில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தேன்.

எதிரே ஒரு வெயிட் பார்க்கும் மெஷினில் சில குழந்தைகள் தங்களது எடையைப் பார்த்து விளையாடிக் கொண்டிருந்தன.

எனக்கும் எனது எடையைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தது.

போய் ஏறி மெஷினில் சக்கரம் எல்லாம் சுற்றி நின்றபின் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டேன்.

டர்ரென்று கார்ட் வந்து விழுத்தது.

நாற்பத்தியெட்டு கிலோ.

அதுபோக, எடை காட்டும் மெஷினில் விழும் கார்டில் எப்போதும் எனக்கு இன்னொரு ஆவல் உண்டு.

அது, பின்னால் சொல்லும் ஜோசியம்.

திருப்பிப் பார்த்தேன். அதில்...

"நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள்..."

'சரியாய்ச் சொல்கிறதே... நான் ஒரு ஆசிரியை என்பதும் கேரளா செல்லப்போகிறேன் என்பதும் மெஷினுக்கு எப்படித் தெரியும்..?'

குழப்பம் அதிகமாக இன்னொரு தடவை சரியாகக் காட்டுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மறுபடி மெஷினில் ஏறினேன்.

இப்போது கார்டைப் பார்க்க அதில், "நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் கணவரைச் சந்திக்கப் போகிறீர்கள்..."

நானாவது... என் கணவரைப் பார்க்கப் போவதாவது...!

'அவர் இப்போது அவருடைய அலுவலகத்தில் இருப்பார்...' என்று எண்ணிக்கொண்டே வந்து உட்கார்ந்திருப்பேன்.

பின்னால் அவர் குரல் கேட்டது.

"ஹேய் பத்மினி... இன்னும் பஸ் கிடைக்கலையா... ஒரு அர்ஜன்ட் வேலை - கோவை போகணும். சாயங்காலம் பாக்கலாம்..." என்றபடி அவர் கோயமுத்தூர் செல்லும் பஸ்சில் ஏறி கைகாடியவாறே சென்றார்.

எனக்கு ஆச்சர்யம் அதிகமாகியது.

'இது எப்படி நடக்கும்...?'.

யோசித்து யோசித்து தலை வலிக்கும் போலிருந்தது.

சரி இன்னொரு தடவை பார்த்து விடலாம்.

மீண்டும் மெஷினில் ஏறி இன்னொரு ஒரு ரூபாயைப் போட்டேன்.

இப்போது, 'நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவரைச் சந்தித்துவிட்டீர்கள்... இப்போது கடவுள் உங்கள் அருகில் வரப் போகிறார்...!'

நான் முடிவே செய்துவிட்டேன்.

'கடவுளாவது பக்கத்தில் வருவதாவது... அதுவும் இத்தனை பேர் இருக்கும் பஸ் ஸ்டாண்டில்...?'

யோசித்து முடித்திருப்பேன். முருகன் வேடம் போட்ட ஒரு சிறுவன், "அக்கா...!" என்று என்னெதிரே கை நீட்டி நின்றான்.

எனக்கோ தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது.

எப்படி.?

எப்படி..?

எப்படி...?

மெஷினையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்... என்னால் நம்பவே முடியவில்லை.

'இது எப்படி நடக்கும்...?'

'சரி... இதெல்லாம் யதேச்சையாய் நடக்கிறதா... இலலை, உண்மையிலேயே மெஷினுக்கு ஏதாவது சக்தி இருக்கிறதா என்று பார்த்துவிடலாம்.'

கடைசியாய் ஒருமுறை மெஷினில் ஏறி ஒரு ரூபாய் நாணயத்தை மறுபடி போட்டேன்.

அதில், ''நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவரைச் சந்தித்துவிட்டீர்கள்... கடவுளைச் சந்தித்துவிட்டீர்கள் ...இப்போது உங்கள் பஸ்ஸைத் தவறவிட்டு விட்டீர்கள்!" என்றிருந்தது.

"அய்யய்யோ...!' என்று நிமிர்கையில்...

அந்தப் பாலக்காடு பஸ் பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறி என் கண்ணை விட்டு மறைந்து கொண்டிருந்தது.
.
.
.