அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.
அன்று மாலை சினிமாப் பார்க்க கணவர், குழந்தையோடு கோவையின் அந்தத் தியேட்டருக்குப் போயிருந்தோம்.
டிவி, ரேடியோக்களின் விடாத விளம்பரங்களும், உடன் பணிபுரிவோரின் விடாத விசாரிப்புகளும் அந்தத் திரைபடத்தைப் பார்க்காததை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே மாற்றியிருந்தன.
நல்ல கூட்டம்... கிராமத்து மக்கள், நகரத்து மக்கள் என மக்கள் கூட்டம் அலைமோதியது.
என் கணவர் ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருந்ததால், நாங்கள் தொந்தரவின்றி தியேட்டருக்குள் நுழைந்துவிட்டோம்.
நடுவே நுழையும் பாதையும், இரண்டு பக்கமும் சீட் நம்பர் தேடி உட்காருவதும் போல சிஸ்டம்.
எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்ததோ, நுழைந்ததும் வலது பக்கம் வழிக்குப் பக்கத்திலேயே முதல் மூன்று சீட்டுகள்.
அதற்கப்புறம், எங்களைப்போலவே ஒரு குடும்பமும் அதையடுத்து ஒரு கிராமத்துக் குடும்பமும் அப்புறம், ஒன்றிரண்டு இளைஞர்களும் என எங்கள் வரிசை நிரம்பியிருந்தது.
அதுவும், அந்த கிராமத்துக் குடும்பம் மொத்தமும் அந்த நடிகரின் தீவிரமான ரசிகர்கள் என அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது.
அவர்கள் தங்கள் நடிகரின் பெருமையை, தங்கள் குழந்தைகளுக்கு மிகப் பெருமையாய் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
படம் ஆரம்பித்ததும் தான் அவர்கள் பேச்சுச் சப்தம் ஓய்ந்தது.
படம் போட்டு ஒரு மணி நேரம் இருக்கும்... இன்டர்வலுக்குச் சற்று முன்பாகவே அவரது ஒரு குழந்தை டாய்லெட் போக அவசரப் படுத்திக் கொண்டிருந்தது.
அவர்கள் கணவன் மனைவி இருவரும், 'கொஞ்சம் பொறுத்துக்க..' என்று சொல்லியபடி உற்சாகமாய்ப் படம் பார்த்துக் கொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை ஓவென்று அழவே ஆரம்பித்து விட்டது.
கடைசியாய், அந்தக் கிராமத்து மனிதர் எரிச்சலுடன், குழந்தையை அந்த அரையிருட்டில் அழைத்துக் கொண்டு, வரிசையில் நடுவிலிருந்து கடுப்புடன் ஒவ்வொருவராகத் தாண்டிக் கொண்டு வந்தார்.
வந்தவர், கடைசியாய் உட்கார்ந்திருந்த என் கணவரைத் தாண்டும்போது, காலை நறுக்கென்று ஒரு மிதி மிதித்துவிட்டு... ஒரு சாரியோ மன்னிப்போ எதுவும் கேட்காமல் வேகவேகமாய் குழந்தையை அழைத்துக்கொண்டு டாய்லெட்டை நோக்கிப் போனார்.
ஏற்கனவே, செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு வெறும் காலில் உட்கார்ந்திருந்த என் கணவர், வலி தாங்காமல் அவரைத் ஏதோ திட்ட வாயெடுத்தார்.
நான் இடைமறித்து,"விடுங்க ஏதோ படம் பாக்கற இன்ட்ரஸ்ட்ல போறாரு..."என்றதும் அமைதியாகி விட்டார்.
ஒரு ஐந்து நிமிடத்தில் குழந்தையை அழைத்துக் கொண்டு திரும்ப வந்து அந்த அரையிருட்டில் கண்கள் பழகும்வரை நின்றவர்... மெல்ல தட்டுத் தடுமாறி வரிசையைத் தேடிக் கொண்டே வந்து, என் கணவர் அருகில் வந்ததும் லேசான யோசனையுடன் கேட்டார்.
"சார்... போகும்போது உங்க காலையா நான் மிதிச்சுட்டேன்..?".
அந்த கிராமத்து ஆள் கேட்டதும் என் கணவரும் ஏதோ சாரி சொல்லப் போகிறானோ என்ற உணர்வில்,"ஆமாம், என் காலைத்தான் மிதிச்சீங்க..!" என்றார்.
கிட்டத்தட்ட அந்த கிராமத்து ஆள் சாரி சொன்னால் 'பரவாயில்லை' என்று சொல்லக்கூட என் கணவர் தயாரான அந்த விநாடியில் தான் அந்த ஆள் தனது குழந்தையைப் பார்த்துச் சொன்னார்.
"டேய் ராசு, இந்த வரிசைதாண்டா... யோசிக்காம உள்ளே போ..!".
.
.