Thursday, September 30, 2010

பனிக்கரடியின் குழப்பம்

உலகின் உச்சியில் துருவத்தின் ஒரு ஓரத்தில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தன ஒரு அப்பாப் பனிக்கரடியும் குட்டிப் பனிக்கரடியும்.

துள்ளிகுதித்து விளையாடிக் கொண்டே ஓடிய குட்டிப் பனிக்கரடி திடீரென நின்று தன் அப்பாவைப் பார்த்துக் குழப்பத்துடன் கேட்டது.

"அப்பா... நான் உண்மையிலேயே பனிக்கரடிதானாப்பா..?"

அப்பாப் பனிக்கரடி குட்டியைப் பார்த்துச் சொன்னது.

"ஆமாடா செல்லம். அதுல என்ன சந்தேகம்..?"

குட்டி தனது அடுத்த கேள்வியைக் கேட்டது.

"அப்ப நீ..?"

"ஆமா, நானும் பனிக்கரடிதான்...!".

"அம்மா...?"

அப்பாப் பனிக்கரடி தன் மகனின் தலையை வாஞ்சையாய்த் தடவியவாறே சொன்னது.

"நான்,நீ,அம்மா எல்லோருமே பனிக்கரடிதான். ஏன் கேட்கிற...?".

குட்டி தன் குழப்பம் நீங்கவே சந்தோசமாய்,"ஒண்ணுமில்லப்பா, சும்மாத்தான் கேட்டேன்.." என்றபடி மறுபடி விளையாட ஓடியது.

கொஞ்ச நேரம்தான்...குட்டிப் பனிக்கரடி மீண்டும் குழப்பத்துடன் அப்பாவிடம் வந்தது.

"அப்பா.. நாமெல்லாம் உண்மையிலேயே பனிக்கரடிதானா..?"

அப்பா ஆச்சர்யத்துடன் திரும்பக் கேட்டது.

"ஆமாடா... ஏன் கேக்கற...?"

"சும்மாத்தாம்பா... நாம பனிக்கரடிங்கறது சரி. உன் அம்மா அப்பா..?"

"அவங்களும் பனிக்கரடிதான்...!".

"அம்மாவோட அம்மா அப்பா..?"

"அவங்களும் பனிக்கரடிதான். ஏன் கேக்கற?"

குட்டிப் பனிக்கரடி,"இல்லப்பா, கேட்டேன்..!" என்று சொல்லிவிட்டு மறுபடி குஷியாய் ஓடியது.

சில நிமிடம்தான் இருக்கும்.

குட்டி திரும்பவும் தன் அப்பாவிடம் ஓடி வந்தது.

"அப்பா... நாம உண்மையிலேயே பனிக்கரடிதானா..?".

அப்பாப் பனிக்கரடி இப்போது கோபத்தின் உச்சிக்கே போய்விட்டது.

"இங்க பாரு... நாம பனிக்கரடிதான். எங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். அவங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். நம்ம பரம்பரையே பனிக்கரடிதான். இப்பச் சொல்லு நீ ஏன் அதைக் கேக்கற...?"

அப்பாப் பனிக்கரடி கோபத்துடன் கேட்டதும், குட்டிப் பனிக்கரடி தன் குழப்பம் சற்றும் விலகாமல் சொன்னது.

"இல்லப்பா... எனக்கு லேசாய்க் குளிருது...!".

Tuesday, September 28, 2010

க‌ண்ணாமூச்சி

மரத்தின் பின் நின்று 1, 2, 3 எண்ணிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.

"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"

"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."

"அப்ப‌டியா? யாரிட‌மிருந்து?"

"என்னிட‌மிருந்தே."

"ஓ! எப்ப‌டி உன்னைக் க‌ண்டுபிடிப்பாய்?"

"100 எண்ணி முடித்த‌தும் லேசாக‌ எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வ‌ந்து விடுவேன்"

"நான் உன் கூட‌ விளையாட‌ வ‌ர‌வா?"

"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாக‌மாக‌க் கூறினாள் சிறுமி.
.
.
.
நன்றி: தீபா ஜோஸப்
 

Monday, September 27, 2010

பேசு பேசாமலிரு

புத்தர் வாழ்ந்த காலத்தில் சாரிபுத்தர் என்ற துறவி இருந்தார்.

ஒருமுறை புத்தரைக் காண வந்த சாரிபுத்தர்,"உங்களைப்போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவர் வேறொருவர் உலகில் இல்லை." என்று புகழ்ந்தார்.

புத்தரும் அவரிடம்,"அருமையாகச் சொன்னீர்கள். இதற்கு முன்வாழ்ந்த புத்தர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்..!" என்று கேட்டார்.

மறுமொழி ஏதும்பேச முடியாமல் சாரிபுத்தர் தயங்கி நின்றார்.

"அது சரி.. பரவாயில்லை.! என்னைப் பற்றியாவது சொல்லுங்களேன். நான் எப்படி வாழ்கிறேன் என்றாவது சொல்லுங்கள்...!" என்றார்.

அதற்கும் சாரிபுத்தர் அமைதி காத்தார்.

அப்போது புத்தர்,"அதுதான் சரி. தெரிந்ததைப்பற்றிப் பேசுவதும் தெரியாததைப் பற்றி மௌனம் காப்பதும்தான் சாலச்சிறந்தது...!" என்றார்.

அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவரான சாரிபுத்தரும் புத்தரின் அறிவுரையை ஒரு நண்பரைப்போல ஏற்றார்.
.
.

Saturday, September 25, 2010

டேனியின் ஆம்புலன்ஸ்

ஆற்றுக்குள் சற்றே இறக்கித் தனது வண்டியைக் கழுவிக் கொண்டிருந்தார் அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவர்.

கொஞ்ச நேரம் கழுவிய பிறகு, இந்தப் பக்கமாய் வந்த போதுதான் ஆற்றங்கரையில் நாயுடனும் பூனையுடனும் நின்றிருந்த அந்தச் சிறுவன் டேனியைக் கவனித்தார்.

அவன் கையில் இழுத்துச் செல்லக்கூடிய அளவில் சற்றே பெரிய வெள்ளை வண்டியை வைத்திருந்தான்.

அது பார்க்க ஒருமாதிரி ஆம்புலன்ஸ் போலவேதான் இருந்தது.

அந்த வண்டியின் உடலில், அவன் ஆம்புலன்ஸைப் பார்த்துப் பார்த்து அதைப் போலவே அலங்காரம் செய்து கொண்டிருந்தான்.

அவர் வண்டியைக் கழுவி முடித்தபோது, டேனியும் தனது வண்டியைக் கிட்டத்தட்ட ஆம்புலன்ஸ் போலவே மாற்றியிருந்தான்.

வண்டியை அவர் துடைக்க ஆரம்பித்த போது அவர் டேனி செய்வதைக் கவனித்து அதிர்ந்து போனார்.

அவன் கையிலிருந்த ஒரு கயிற்றால் அவனுடைய வண்டியை, அந்த நாயின் கழுத்தைச் சுற்றி இழுத்துச் செல்ல வசதியாய் ஒரு பெல்ட்டால் கட்டியிருந்தான்.

கூடவே மற்றொரு கயிற்றால் அந்தப் பூனையின் வயிற்றை அழுத்திப் பிடிக்கும்படி, வண்டி ஓடும்போது வண்டியுடன் இழுத்துச் செல்லும்படி பின்புறமாய் இணைத்துக் கட்டியிருந்தான்.

அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது.

ஏற்கனவே கயிறு இறுக்கிய வலியால் பூனை கதறிக் கொண்டிருக்க, டேனி ஆம்புலன்ஸை ஓட்டுகிறேன் என்று நாயை விரட்டினால் பூனை கதறியே குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகிவிடும்.

எனவே, அவர் அந்தப் பூனையைக் காப்பாற்ற முடிவு செய்து டேனியிடம் சொன்னார்.

"தம்பி... நீ பூனையை முன்னாடி நாய்கூடச் சேர்த்துக் கட்டினேனு வையேன். ரெண்டும் சேர்ந்து இழுக்கும்போது ஆம்புலன்ஸ் இன்னும் ஸ்பீடாப் போகும்ல...?"

ட்ரைவர் சொன்னதும் ஒரு கணம் யோசித்தவன் சொன்னான்.

"ஆமா சார், நீங்க சொல்லற மாதிரி செஞ்சா ஆம்புலன்ஸ் ஸ்பீடாப் போகும்... ஆனா, என் ஆம்புலன்ஸுக்கு சைரென் கிடையாதே.! அதுக்குத்தான் பூனையைக் கத்தற மாதிரிக் கட்டியிருந்தேன்..!".
.
.
.

Friday, September 24, 2010

ஸ்தோத்திரம் ஃபாதர்

தில்லுதுரயும் அவர் நண்பரும் நடந்து போகும் வழியில், ஒரு ஆர்.சி. சர்ச் வாசலில் அந்த நபரைப் பார்த்தார்கள்.

நீண்ட வெள்ளை மழைக்கோட்டை மாட்டி, இடுப்பில் நழுவாமல் இருக்க ஒரு கயிற்றாலும் கட்டியிருந்த அவரைப் பார்க்க ஒரு கிறிஸ்தவ பாதிரியாரைப் போலவே இருக்க அவரிடம்,"ஸ்தோத்திரம் ஃபாதர்..." என்றார் தில்லுதுரயின் நண்பர்.

அவரும் பதிலுக்கு கிண்டலாகச் சிரித்தபடியே, "ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்..." என்று சொல்லிவிட்டுப் போனார்.

நண்பர் தொடர்ந்து அவரிடம்,"ஃபாதர்..." என்று ஏதோ தொடரப் போக...

இடைநுழைந்த தில்லுதுர, "டேய் நிறுத்து, அவரை எனக்குத் தெரியும்..." என்றவர் தொடர்ந்து சொன்னார்.

"அவர் ஃபாதரே கிடையாது. ஏன்னா, அவருக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகூட இருக்கு..!".
.
.
.

Saturday, September 18, 2010

ட்வென்டி 20

அப்பா,அண்ணன்,கணவர்,குழந்தை என மூன்று தலைமுறை மக்களுடன் வாழ்ந்து கிரிக்கெட் பற்றி நன்றாகத் தெரியும் எனக்கு.

நான் சின்னப் பெண்ணாய் இருக்கும் போதிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.

கோபால் அண்ணனும் அப்பாவும் ரேடியோவில் டெஸ்ட் கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கிரிக்கெட் கமெண்ட்ரி இடையில் வரும் ஹிந்தியைப் புரிந்து கொள்வதற்காகவே அடிப்படை ஹிந்தி கற்றுக் கொண்டவன் அண்ணன்.

இதுபோக, மறுநாள் ஹிண்டு ஸ்போர்ட்ஸ் காலம் பார்த்துவிட்டு வேறு ஆர்க்யூமென்ட் ஒரு மணிநேரம் ஓடும்.

பிறகு அப்பா டெஸ்ட் போட்டிகளிலேயே தங்கிவிட, அண்ணன் ஒன்டே மேட்ச் பார்க்க வந்துவிட்டான்.

ஒரு டீமுக்கு அறுபது ஓவர் என்றும் அப்போது தான் இந்தியா உலகக் கோப்பை ஜெயித்தது என்றும் ஞாபகம்.

அதற்கப்புறம், கிரிக்கெட் பற்றிப் பேசுபவர்கள் கன்னாபின்னாவெண்று அதிகரிக்க ஆரம்பித்தார்கள்.

ஐம்பது ஓவர் மேட்ச் ஆனதும் கிரிக்கெட் பைத்தியங்கள் அதிகமாக ஆரம்பித்தார்கள்.

எங்கள் கல்லூரிப் பெண்கள்கூடக் கிரிக்கெட் பேச ஆரம்பித்தது அப்போதுதான்.

திருமணம் முடிந்து பார்த்தால், கணவரும் லீவ் போட்டுவிட்டு மேட்ச் பார்க்கும் அளவுக்கு கிரிக்கெட் பைத்தியமாகவே இருந்தார்.

மேட்ச் ஃபிக்சிங்' தெரிய ஆரம்பித்த பிறகு அவருடைய கிரிக்கெட் ஆர்வம் குறைந்தது நன்றாகவே தெரிந்தாலும், மேட்ச் நடக்கும்போது வீட்டு டிவியில் கிரிக்கெட்தான் ஓடிக்கொண்டிருக்கும்.

இது தொடரவே, என் மகன் டேனியும் கிரிக்கெட் பைத்தியங்களில் ஒன்றாகவே வளர்ந்து கொண்டிருந்தான்.

இப்போது ட்வென்டி ட்வென்டி எனப் புதிதாய் ஒரு ஐடியாவைப் பிடித்திருக்கிறார்கள் கிரிக்கெட்காரர்கள்.

முதலிலிருந்து கடைசிவரை முரட்டு அடியாய் விளையாடுகிறார்கள் வீரர்கள்.

ஆண்கள் உள்ளே ஆடினால் .. பெண்கள் வெளியே ஆடுகிறார்கள்.

அவசரத்துக்கும் வியாபாரத்துக்கும் ஏற்றபடி விளையாட்டும் மாறிவிட்டது.

இப்போது அப்பாவும் பையனும் ஒன்றாக மேட்ச் பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.

முன்பு, கோபால் அண்ணன் மே மாத ஞாயிறு பகல் பூராவும் வெயிலில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, ஓய்ந்துபோய் வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.

என் கணவரும் அப்பிடித்தான் என்பது அவர் பேசும்போது புரிந்து கொண்டிருக்கிறேன்.

இப்போது என் பையன் டேனியின் முறை.

என்றும்போல், இன்றும் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாட அவன் நண்பர்களுடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.

எப்போதுமே தனது ஆண் நண்பர்களை மட்டுமே கூப்பிடும் அவன் இந்த முறை குடியிருப்பின் பெண் தோழிகளையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

டேனியின் நண்பர்கள் ஊருக்குப் போய்விட்டார்களா... இல்லை, பெண்களும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது விட்டார்களா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் டேனியைக் கூப்பிடும் கேட்டேன்.

"என்னடா ஆர்த்தி,நிஷாவையெல்லாம் கிரிக்கெட் விளையாடக் கூப்பிடுட்டு இருக்க...? பொண்ணுங்க எல்லாமா கிரிக்கெட் விளையாடறாங்க...!".

கேட்டதும் டேனி மிகச் சாதாரணமாய்ப் பதிலளித்தான்.

"இல்லம்மா... அவங்கெல்லாம் 'சியர் லீடர்ஸ்'. கிரிக்கெட் வெளையாடமாட்டாங்க... நாங்க வெளையாடும்போது சிக்ஸர், ஃபோர் அடிச்சா டேன்ஸ் ஆடி எங்களை என்கரேஜ் பண்ணுவாங்க...!".
.
.
.

Tuesday, September 14, 2010

நெக்ஸ்ட் டைம் டார்லிங்

.
பேசிக்கலாய் தில்லுதுர பயங்கர சோம்பேறி.

வீட்டு வேலைகள் செய்வதென்றால் எட்டிக்காயாய் கசக்கும் அவருக்கு.

வீட்டுக்கு வந்தால் செய்தித்தாள் புரட்டுவதும் டிவியில் சேனல்கள் வேட்டையாடுவதும்தான் அவரது விருப்ப வேலைகள்.

திருமணம் முடிந்த புதிதில், அவர் மனைவி அவரை ஒரு சின்ன வேலைகூட வாங்க முடியாமல் பட்ட கஷ்டம்... கொஞ்ச நஞ்சமில்லை.

ஆச்சு ரெண்டு வருஷம்.

தில்லுதுர அழகான ஆண் குழந்தைக்கு அப்பாவும் ஆகிவிட்டார்.

குழந்தை பிறந்து ஒன்றிரண்டு மாதங்கள், உடனிருந்த மாமியாரும் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.

அன்று சனிக்கிழமை.

விடுமுறை என்பதால் தில்லுதுர வீட்டில் இருந்தார்.

காலையில் நியூஸ் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும்போது குழந்தை தொட்டிலிலேயே உச்சா போய்விட்டான்.

மனைவி ஏதோ வேலையாய் உள்ளே இருக்க, தில்லுதுர வாத்ஸல்யமாய் குரல் கொடுத்தார்.

"ஹனி... உன் பிள்ளை என்ன காரியம் பண்ணிருக்கான்னு வந்து பாரு...!".

உள்ளேயிருந்து வேகவேகமாய் வந்த மனைவி,"ஏங்க...நான் தான் உள்ளே வேலையாய் இருக்கேனில்ல... நீங்க கொஞ்சம் இவனுக்கு பேம்பர்ஸ் மாத்திவிடக் கூடாதா...?".

தில்லுதுர இன்னும் கொஞ்சலாய் மனைவியிடம் சொன்னார்.

"அடுத்த தடவை கண்டிப்பா மாத்திவிடுறேன் ஸ்வீட்டி...!".

கணவனின் கொஞ்சலில் மயங்கிப் போன அவள், சந்தோசமாய் குழந்தைக்கு பேம்பர்ஸை மாற்றிவிட்டுப் போனாள்.

காலை முடிந்து மதியம்.. இதேபோல் ஒரு சிச்சுவேஷன் வர மனைவி தில்லுதுரயிடம் சொன்னாள்,"ஏங்க காலைல என்ன சொன்னீங்க...? வாங்க... இப்ப இவனுக்கு பேம்பர்ஸை மாத்திவிடுங்க...!".

ஒருகணம் குழப்பத்துடன் மனைவியைப் பார்த்த தில்லுதுர பிறகு தெளிவான குரலில் சொன்னார்.

"டார்லிங்... அடுத்த தடவைனு நான் சொன்னது அடுத்த பேம்பர்ஸுக்கு இல்லை... அடுத்த குழந்தைக்கு...!".
.
.
.

Monday, September 13, 2010

கேளு...கேட்க விடு...!

.
அது ஒரு பௌத்த விஹாரம்.

அதனுள் மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று இருந்தது.

ஒரு வயோதிகத் துறவி அந்த விஹாரத்திற்கு உள்ளே வந்தார்.

அமைதியாக நெடுநேரம் தியானத்தில் லயித்திருந்தார்.

தியானம் முடிந்து அமைதியாக வெளியேறினார்.

இது தினந்தோறும் நிகழ்ந்தது.

விஹாரத்தின் தலைவர் இதனை வியப்புடன் கவனித்து வந்தார்.

அன்றும் வழக்கம்போல் துறவி வந்தார்... தியானத்தில் ஆழ்ந்தார்.

தியானம் முடிந்து கிளம்பும்போது மடத்தின் தலைவர் அவரிடம் கேட்டார்.

"அய்யா... நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சொன்னார்...?"

"அவர் எப்போதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்...!".

அடுத்த கேள்வியைக் கேட்டார் தலைவர்.

"அப்படியா? அதுசரி... அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்...?"

அந்த வயோதிகத் துறவி அமைதியாக பதில் சொன்னார்.

"நானும் எதுவும் சொல்ல மாட்டேன்.அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பேன்...!".
.
.
.

Wednesday, September 8, 2010

இளையராஜாவின் காதல்

மகதநாட்டு இளவரசன் மகேந்திரவர்மன் அம்புலிமாமாவில் வருவதுபோல் அப்படியொன்றும் அழகானவன் அல்ல.

லேசாய்க் கருப்பாய்,ஒடிசலாய்,முன்னால் வழியும் தொப்பையுமாய் பார்க்க ஒரு மாதிரித்தான் இருப்பான்.

உங்களுக்குப் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், அழகில் அவன் ஒரு 24ம் புலிகேசி.

அழகில் மட்டும்தான் அப்படி... மற்றபடி அவன் ஒரு சகலகலாவல்லவன்.

ஆயகலைகள் 64க்கும் அவன் கோனார் நோட்ஸ் போடும் அளவுக்கு வித்தைகள் கற்றவன்.

ஆனால், அது எதுவும் அவனுக்குத் திருமண விஷயத்தில் உதவுவதாய் இல்லை.

இளவரசிகள் எவளும் மகேந்திரவர்மனைக் காதலிப்பதற்கான அறியும் தெரியவில்லை, குறியும் தெரியவில்லை.

சுயம்வரங்களில் எல்லாம் இவன் இருக்கும் வரிசைக்குக்கூட இளவரசிகள் வர மறுத்தார்கள்.

வயது ஏறிக்கொண்டேபோக, மார்க்கெட்டில் விலைபோகாத முற்றின கத்திரிக்காயாகிப் போனான் மகேந்திரவர்மன்.

யாரோ சொன்ன யோசனையைக் கேட்டு 'தமிழ் மேட்ரிமோனி'யில் கூட பதிவு செய்திருந்தான்.

ஆனால், பலனென்னவோ பூஜ்யம்தான்.

ஆச்சு... வயது முப்பதைத் தாண்டி ஓரிரு வருடங்கள் ஓடிவிட்டன.

'இளவரசிகள் வேண்டாம்... ஏதாவது பெண்ணாயிருந்தால் போதும்' என்ற நிலைக்கு வந்துவிட்டான் மகேந்திரவர்மன்.

மனம் நொந்துபோன மகேந்திரவர்மன் மனம்போன, கால்போன வழியில் போகும்போதுதான் கொற்றவையைப் பார்த்தான்.

கொற்றவை அழகின் திரு உருவம்...இளமைப் புயல்.

பார்த்தவுடன் மகேந்திரவர்மனைப் பற்றிக் கொண்டது காதல்.

வாழ்ந்தால் இவளோடுதான் என்று முடிவே செய்துவிட்டான்.

ஆனால், கொற்றவையோ எல்லாப் பெண்களையும்போல் தானே..?

அவள் கனவில் ஆர்யாவும், அல்லு அர்ஜுனும் இருக்க... அவள் இளவரசரின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்.

காரணம்...

முதல்நாள், கலர் கருப்பு என்றாள்.

மறுநாள், உடல் ஒல்லி என்றாள்.

அடுத்தநாள், வயிறு தொப்பை என்றாள்.

காதலைச் சொல்லப் போனபோதெல்லாம் பதிலுக்கு காரணங்களே கிடைத்தது இளவரசனுக்கு.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகேந்திரவர்மன் ஒருநாள் மொத்தமாய் உடைந்துவிட்டான்.

நேராய் கொற்றவையிடம் சென்று, அவள் காலின் அடியில் மண்டியிட்டு தனது கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டு, தலைகுனிந்து சொன்னான்.

"கொற்றவை.. என் காதலுக்கு முன் இந்த ராஜ்ஜியம்கூடத் தூசு. இந்தா... எல்லாவற்றையும் எடுத்துக் கொள். என் காதலை மட்டும் ஏற்றுக்கொள்...!".

தன் முன்னால் மண்டியிட்டு குனிந்திருக்கும் ராஜகுமாரனைப் பார்த்துச் சொன்னாள் கொற்றவை.

"கிரீடத்தைக் கழற்றியதும் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது... உன் உச்சந்தலையில் முடியே இல்லை.... லேசாய்ச் சொட்டை தெரிகிறது. எனவே...உன் காதலை ஏற்றுக் கொள்ளமுடியாது. யூ ஆர் ரிஜெக்டட்...!".
.
.

Monday, September 6, 2010

நொந்தகுமாரன்

நந்தகுமாரன் ஒரு காலத்தில் பயங்கர ஃபைனான்சியர்.

இப்போ எல்லாம் போச்சு.

வாங்கியவன் எல்லாம் காணாமல் போவதும், போய் விசாரித்தால் எல்லோரும் தப்பான அட்ரஸ் கொடுத்திருப்பதும் தொடர்ந்து நடக்க நந்தகுமாரன் வாழ்வில் நொந்தகுமாரனாகிவிட்டான்.

செல்வம் போய், கையில் இருந்த காசுபணம் போய், கார் வீட்டையெல்லாம் பேங்க் ஜப்தி செய்ய நந்தகுமாரன் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.

குடும்பம் இல்லாதவர் என்பதால் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.

என்றாலும் வயிற்றுப்பாட்டுக்கே திண்டாட்டம் ஆகிவிட்டது இப்போது.
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.

பணம் போச்சு, கௌரவம் போச்சு, மரியாதை, மதிப்பு, நண்பர்கள் என எல்லாமே போயாச்சு.

எல்லாம் போனாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே,
அது போகவேயில்லை... விடாமல் நந்தகுமாரனைத் துரத்தியது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நந்தகுமாரன், யாருக்கும் தெரியாமல் பக்கத்து ஊரில் போய் பிச்சை எடுப்பது என முடிவு செய்தார்.

'எங்கே பிச்சை எடுக்கலாம்...' என கடவுள் முன்னால் திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தார்.

கோயில்,கடைத்தெரு,பஸ் ஸ்டான்ட் என ஏகப்பட்ட இடங்கள் எழுதிப் போட்டதில் "கோயில்" என சீட்டு கிடைத்தது.

மறுநாள் காலையிலேயே நந்தகுமாரன் கடவுளின் திருவுள்ளப்படி பக்கத்து ஊர்க் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டார்.

காலையிலிருந்தே பக்தர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்களேயொழிய, நந்தகுமாரன் தட்டில் விழுந்ததோ ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமான சில்லறைகளே.

பொழுது சாயும்வரை காத்திருந்தும் ஒரு இருபது ரூபாய்கூடச் சேரவில்லை.
நொந்துபோன நந்தகுமாரன், 'வேறு எங்கே உட்காரலாம்...' என்று பார்த்த போது... சற்று தூரத்தில் ஒரு வைன் ஷாப் கண்ணுக்குத் தெரிந்தது.

மாலை நேரம் ஆனதால், இப்போது அங்கே கொஞ்சம் நடமாட்டமும் அதிகமாயிருக்க... ஊருக்குக் கிளம்பும் முன் அங்கேயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்கலாம் என முடிவு செய்தார் நந்தகுமாரன்.

உள்ளே போனவர்கள் நல்ல போதையில் வெளியேவர, அவர்கள் கையிலிருந்து நந்தகுமாரன் தட்டில் ஐந்தும் பத்துமாய் ரூபாய் நோட்டுகளாய் விழ ஆரம்பித்தது.

தட்டு நிறைய நோட்டுகள் விழவிழ, நந்தகுமாரன் எதிரே தெரிந்த கோவில் கோபுரத்தைப் பார்த்துச் சொன்னார்.

"பகவானே... என்னிடம் பணம் வாங்கியவர்கள்தான் ஒரு அட்ரஸ் கொடுத்துவிட்டு இன்னொரு அட்ரஸில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நீயுமா...?".
.
.
.

Thursday, September 2, 2010

கடவுளின் படம்

அது பள்ளியின் ட்ராயிங் வகுப்பு.

குழந்தைகளை அவர்கள் மனதுக்குப் பிடித்ததை வரையச் சொல்லிவிட்டு வகுப்பைச் சுற்றி வந்தார் ஆசிரியை.

குழந்தைகள் எல்லோரும் குனிந்து வேகவேகமாய் வரைந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தவர், அந்தச் சிறுவன் வரைவதைப் பார்த்ததும் நின்றார்.

டேனி தன்னருகில் ஆசிரியை நிற்பதும் தெரியாமல் அக்கறையாய் வரைந்து கொண்டிருந்தான்.

அவன் கவனம் எல்லாம் படத்தின் மேலேயே இருந்தது.

டீச்சர் கேட்டார்.

"டேனி என்ன படம் வரைஞ்சுட்டு இருக்க...?".

டேனி கண்களை உயர்த்தாமல் பதில் சொன்னான்.

"கடவுளோட படம் டீச்சர்...!'.

டீச்சர் அவன் ஆர்வத்தைக் கவனித்தபடியே கேட்டார்.

"ஆனா, கடவுள் எப்படி இருப்பாருன்னு யாருக்கும் தெரியாதே...!".

டேனி மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னான்.

"இப்ப நான் வரைஞ்சு முடிச்சதும் தெரிஞ்சுடும் டீச்சர்...!'.
.
.
.

Wednesday, September 1, 2010

டேய் பட்டாபி

பட்டாபி இறந்த பத்தாவது நிமிடத்தில் சித்திரகுப்தன் எதிரில் நின்றான்.

சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார்.

"அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?".

பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான்.

"எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!".

சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?"

பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான்.

"ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!".

சித்திரகுப்தன் தொடர்ந்தார்.

"நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?".

பட்டாபி எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்.

"இல்லை... ஏனக்கு காதல்னாலே அறவே பிடிக்காது..!" .

சித்திரகுப்தன் பேரேடை புரட்டியபடியே அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"உனக்கு மிகப் பிடித்த நண்பர்கள் பெயரைச் சொல்லு...!"
"எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது..!".

சித்திரகுப்தன் வியப்புடன் பட்டாபியை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"வீட்டுல நாய், பூனைனு ஏதாவது வளர்த்திருக்கியா..?"

பட்டாபி அதற்கும் அதேபோல் ஒரு அலட்சிய பாவத்துடனேயே பதில் சொன்னான்.

"எனக்கு மிருகங்கள்னாலே அலர்ஜி... அதனால அப்படி எதுவும் வளர்க்கல..!"

பட்டாபி பதில் சொன்னதும் நெற்றியைச் சுருக்கியவாறே யோசித்த சித்திரகுப்தன் மெல்லச் கேட்டார்.

"தம்பி... நீ இறந்து ரொம்ப நாளாயிருக்கும் போலருக்கே. ஆனா, ரொம்ப லேட்டா வந்திருக்க...?".
.
.
.