Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Wednesday, September 4, 2013

இறந்த பிறகு என்னவாய் ஆகிறோம்


ஜப்பானிய மன்னன் ஒருவனுக்கு திடீரென ஒரு தீவிர சந்தேகம் கிளம்பியது.

இந்த துறவிகள் ஏன் துறவறம் மேற்கொள்கிறார்கள்.? நாம் இறந்தால் என்ன ஆவோம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆனால் இந்தத் துறவிகள் இறந்த பிறகு ஏதும் அதிசயங்கள் நடக்குமோ.? அதனால்தான் துறவறம் பூணுகிறார்களோ.?

தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அவன் ஒரு சென் துறவி குடோ-வை அணுகினான்.

“தன்னை முழுவதும் உணரும் ஞானஒளி பெற்ற ஒரு ஞானகுரு தான் இறந்த பிறகு என்ன ஆகிறான்.?” என்று கேட்டான்.

துறவியோ எந்த உணர்ச்சியும் இன்றி மன்னனைப் பார்த்துக் கேட்டார்.

“அதை ஏன் மன்னா என்னிடம் கேட்கிறாய்.? அது எப்படி எனக்கு தெரியும்.?”.

மன்னன் இன்னும் அதிக குழப்பத்துடன் குருவிடம் கேட்டான்.

“உங்களுக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும். நீங்கள்தானே ஞானகுரு.?”.

மன்னன் கேட்டதும் குடோ அவனைப் பார்த்து புன்னகைத்தபடி பதில் சொன்னார்.

“ஆமாம்… நான் ஞானகுரு தான். ஆனால் நான் இன்னும் சாகவில்லையே.!”.
.
.
.


Wednesday, October 6, 2010

த்ரீ ஸ்டேஜஸ்

குரு தனது சிஷ்யர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

"ஞானம் அடைவதற்கு மனிதன் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது..!".

ஆர்வத்துடன் ஒரு சிஷ்யன் கேட்டார்.

"அவை என்னென்ன நிலைகள் என்று கூற முடியுமா குருவே..?".

குரு புன்னகைத்த படியே சொன்னார்.

"அவை பாமர நிலை, ஆன்மிக நிலை மற்றும் தெய்வீக நிலை..."

சிஷ்யர் தொடர்ந்து கேட்டார்.

"குருவே பாமர நிலை என்பது என்ன..?".

குரு சொன்னார்.

"அது மிக எளிமையானது. அந்த நிலையில் ஒருவனுக்கு மரங்கள் மரங்களாகவும் மலைகள் மலைகளாகவும் தெரிகிறது..!".

சிஷ்யர் அடுத்துக் கேட்டார்.

"சரி குருவே... ஆன்மிக நிலை என்பது என்ன..?"

குரு தொடர்ந்தார்.

"அது சற்று நுண்மையானது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் நிலை அது. இந்நிலையில் அவன் பொருட்களின் உள்ளார்ந்து பார்க்கும்போது மரங்கள் நீண்ட நேரம் மரங்களாக இருப்பதில்லை... மலைகளும் நீண்ட நேரம் மலைகளாக இருப்பதில்லை..!".

சிஷ்யர் விடுவதாயில்லை... அவர் கேட்டார்.

"அப்போ தெய்வீக நிலை என்பது என்ன குருவே..?".

குரு தனது புன்முறுவல் மாறாமல் தொடர்ந்து சொன்னார்.

"அதுதான் முழுவதும் உணர்ந்த ஞான நிலை. இப்போது மரங்கள் மீண்டும் மரங்களாகவும் மலைகள் மீண்டும் மலைகளாகவும் அவனுக்குத் தெரிய ஆரம்பிக்கும்...!".

Tuesday, August 17, 2010

எல்லாமே இலவசம்

துறவி ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுக்கு பொறுமையைப் பற்றிக் கற்றுக் கொடுக்க ஒரு புதுமையான ஏற்பாடு செய்திருந்தார்.

அவருடைய சிஷ்யர்கள் யாரும் ஒரு வருடத்திற்கு ஊரைவிட்டு வெளியே செல்லக் கூடாது.

அது மட்டுமல்ல... அவருடைய சிஷ்யர்களை யாரும் நிந்தித்தாலோ அடித்தாலோ கோபப் படக்கூடாது.

மேலும், நிந்தித்தவர்களுக்கு அந்த சிஷ்யர்கள் பரிசுப் பணமும் தர வெண்டும்.

அதுவும் இந்த ஊரில் மட்டும்தான்.

சிஷ்யர்கள் ஊருக்குள் வரும்போது அந்த குருவுக்காக அவர்களை வணங்குபவர்கள் எப்படி இருந்தார்களோ அதேபோல் திட்டுபவர்களும் இருந்தார்கள்.

சிஷ்யர்கள் எப்படி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்களோ அதேபோல் திட்டுபவர்களையும் பொறுத்துக் கொண்டதோடு அவர்களுக்கு குருவின் சொல்படி பரிசுப் பணமும் கொடுத்து வந்தார்கள்.

இப்படியே இந்த ஊரில் ஒரு வருடம் கழிந்தது.

சிஷ்யர்கள் இப்போது பக்கத்து ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்தார்கள்.

அங்கேயும் இவர்களிடம் வாழ்த்துப் பெற வந்தவர்களும் இருந்தார்கள்... திட்ட வந்தவர்களும் இருந்தார்கள்.

ஆனால், வந்தவர்கள் எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அதைச் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே இருப்பதைப் பார்த்தவர்கள், 'இவர்களுக்குத்தான் எவ்வளவு ஞானம்...?' என்று வியந்து போனார்கள்.

இதை பார்த்துக் கொண்டே இருந்த ஒருவர், ஒருநாள் தாங்க முடியாமல் ஒரு சிஷ்யரிடம் கேட்டார்.

"எப்படி உங்களால் இத்தனை திட்டுக்களையும் கோபம் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிகிறது...?".

அதற்கு அந்த சிஷ்யர், அவரிடம் புன்னகை மாறாமல் சொன்னார்.

"முன்பெல்லாம் நாங்கள் இதற்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தோம்... இப்போதெல்லாம் இது எங்களுக்கு இலவசமாகவே கிடைக்கிறது...."

ஞானம் பெறுவது எவ்வளவு சுலபம் பாருங்கள்...?
.
.
.