Wednesday, January 22, 2014

டேனியின் ஹேர்க்கட்


ஐந்து வயது டேனியை இன்று காலை ஸ்கூலுக்கு ஆயத்தப்படுத்தக் குளிப்பாட்டும் போது நடந்தது இது.

தலைக்கு ஷாம்பூவை அவசர அவசரமாய்ப் போடுகையில் கை விரல்கள் அவன் தலை முடியில் சிக்கிக் கொண்டு வர மறுக்க, கைகளை இழுக்கையில் அவனுக்கு வலியாகி அவன் கத்த... கோபத்துடன் சொன்னேன்.

"மொதல்ல இந்த ஞாயித்துக் கெழம உங்க அப்பாவக் கூட்டிட்டுப் போயி உனக்கு முடி வெட்டச் சொல்லணும்.!".

சொன்னதும் பார்பர் ஷாப்புக்கு போவதே பிடிக்காத டேனி, கோபத்துடன் சொன்னான்.

"போம்மா... சும்மா சும்மா நீ முடி வெட்டச் சொல்லிட்டே இருப்ப.!".

அவன் கோபத்துடன் அழுவதைப் பார்த்ததும், லேசாய் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவனிடம் மேதுவாய்ச் சொன்னேன்.

"பாரு... உனக்குத்தான் சீக்கிரம் சீக்கிரம் முடி வளந்துடுதே.! அதனாலதான முடி வெட்டணும்னு சொல்லறேன்.!".

சொன்னதும் இன்னும் அதிக கோபத்துடன் டேனி சொன்னான்.

"எல்லாம் உன்னாலதாம்மா.. நீ செய்யற வேலைனாலதான முடி வேகவேகமா வளருது.!".

இதென்ன புதுசா சொல்றானே என்ற குழப்பத்துடன் கேட்டேன்.

"உன் தலைல முடி வளர்றதுக்கு நானென்னடா பண்ணா முடியும்.?".

சொன்னதும் இன்னும் கோபமாய் என்னைக் குற்றஞ்சாட்டும் முகத்துடன் டேனி சொன்னான்.

"ஆமா... நீதான் சொல்லச் சொல்லக் கேக்காம குளிக்கும்போது தலைக்கு அதிகமா தண்ணிய ஊத்தறியே. தண்ணிய அதிகமா ஊத்தினா முடி வேகமா வளரத்தான செய்யும்.!".
.
.
.

Monday, January 6, 2014

அசிங்கப்பட்டார் தில்லுதுர



லுவலகத்திலிருந்து தில்லுதுர திரும்பும் போதே, தன் மனைவி பதட்டத்துடன் வாசலில் காத்திருப்பதைப் பார்த்தார்.

தில்லுதுரயை நேரில் பார்த்ததும் தான், அவர் நிம்மதியுடன் நீண்ட ஒரு பெருமூச்சை விட்டபடி சொன்னார்.

"அப்பாடி... உங்களுக்கு ஒண்ணுமில்லியே.! நான்கூட பயந்தே போய்ட்டேன்.!"

மனைவி சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யத்துடன் தில்லுதுர கேட்டார்.

"ஏன்... பயப்படற அளவுக்கு என்ன ஆச்சு.?".

தில்லுதுர கேட்டதும் அவர் மனைவி அதே பதைபதைப்பு மாறாமல் சொன்னார்.

"இல்ல... இப்ப கொஞ்சம் முன்ன இந்த வழிய போன ஒருத்தன் சொன்னான், 'தெரு முனைல கருப்பா, குண்டா, எரும மாடு மாதிரி ஒரு ஆளு அடிபட்டுக் கெடக்கான்னு..'  அதான் நீங்களோனு பயந்திட்டேன்.!" என்றாள்.
.
.
.