Showing posts with label பாட்டி. Show all posts
Showing posts with label பாட்டி. Show all posts

Tuesday, September 25, 2012

தில்லுதுரயும் திடுக் பாட்டியும்


நண்பர் நடத்தும் முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த டூர்  பஸ்ஸுக்கான ட்ரைவருக்கு அன்று ஏனோ வரமுடியவில்லை.

'இல்லத்தின் முதியவர்கள் ஏமாந்துவிடக்கூடாதே..' என்று அந்த நண்பர் அன்று தில்லுதுரயின் உதவியைக் கேட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் தில்லுதுரயும் சந்தோஷமாய் அந்த பஸ் டிரைவர் வேலையை ஒப்புக் கொண்டார்.

காலை ஆறுமணிக்கு பஸ் கிளம்பியதிலிருந்தே எல்லா முதியவர்களும் தங்கள் வயதை மறந்து ஆட்டம் பாட்டம், கேலி, கிண்டல், பாடல்கள் என அட்டாகசம் செய்தபடி குழந்தைகள் போல குதூகலமாய் வந்து கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு நேரம் முடியும்..?

எட்டு மணிக்கு எல்லாம் அடங்கி, ஆளாளுக்கு அவரவர் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை பகிர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.
ஒரு பத்து பதினைந்து நிமிடம் இருக்கும்.

வயதான பாட்டி ஒன்று வந்து பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருந்த தில்லுதுர தோளைத் தட்டியது.

திரும்பிய தில்லுதுரயைப் பார்த்து தனது பொக்கை வாயை காட்டி சிரித்தபடி, "இந்தா தம்பி.... இதைக் கொஞ்சம் சாப்பிடு..!" என்று கொஞ்சம் உடைந்த முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை இருந்த ஒரு காகிதப் பொட்டலத்தை நீட்டியது.

தில்லுதுரயும் சிரித்தபடியே வாங்கி சாப்பிட்டபடி வண்டியை தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தார்.

எல்லாம் காலியாகி இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும்.

அதே பாட்டி அதேபோல் தில்லுதுர தோளைத் தட்டியது.

"இன்னும் கொஞ்சம் சாப்பிடறயா தம்பி..?" என்று அதேபோல் மறுபடி ஒரு பொட்டலத்தை நீட்டியது.

அதே உடைந்த முந்திரி, பாதாம், பிஸ்தா வஸ்துக்கள்.

தில்லுதுர சிரித்தபடி மறுத்தார்.

"போதும் பாட்டி.. நீங்களே சாப்பிடுங்க..!".

பாட்டி புன்னகைத்தபடி பதில் சொன்னது.

"இல்ல தம்பி... எங்க யாருக்கும் பல்லு கிடையாது. அதனால இதை எங்களால சாப்பிட முடியாது.! நீ சாப்பிடலைனா இதை கீழதான் போடணும்..!".

பாட்டி சொன்னதும் ஆச்சர்யத்துடன் திரும்பிய தில்லுதுர கேட்டார்.

"சாப்பிட முடியாதுன்னா... அப்புறம் எதுக்கு இதையெல்லாம் வாங்கினீங்க..?".

தில்லுதுர கேட்டதும் அந்தப் பாட்டி அப்போதும் புன்னகை மாறாமல் பதில் சொன்னது.

"இதை யாரு வாங்கினா.? நாங்க வாங்கின சாக்லெட் பாருக்குள்ள இது இருந்தது. உண்மைல இதைச் சுத்தி இருக்கற சாக்லெட் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அதை நாங்கெல்லாம் சப்பிச் சாப்பிட்டுட்டு இதை வேஸ்ட்டா எறிய வேண்டாமேன்னு உனக்கு குடுத்தேன்...!" என்றார்.
.
.
.

Wednesday, October 20, 2010

வடை போச்சே...!

மூன்று மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள்.

வழியில் சிற்றுண்டி தாயாரிக்கும் பாட்டியிடம் டிபன் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.

ஒருவன் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க, மற்ற இருவரும் கார சாரமாக தாம் படித்ததைப் பற்றி விவாதித்துக் கொண்டே சாப்பிட்டனர்.

சாப்பிட்டுக் கிளம்பும்முன் பாட்டி, "எங்க போய்ட்டிருக்கிங்க தம்பி?" எனக் கேட்டாள்.

மூவரும் பரிட்சை எழுத போவதைப் பற்றிக் கூறினார்கள்.

அதற்கு பாட்டி, "நீங்க ரெண்டு பேரும் ஃபெயில் ஆயிடுவீங்கன்னு நெனைக்கிறேன். ஆனா இந்தத் தம்பி கண்டிப்பா பாஸ் ஆயிடும்..." எனக் கூறினாள்.

பாட்டியை முறைத்துக் கொண்டே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.


அனால், ரிசல்ட் என்னவோ பாட்டி சொன்னபடித்தான் இருந்தது..

இருவரும் அந்த பாட்டியிடம் சென்று "எப்படி பாட்டி ரிஸல்ட்டைக் கரெக்ட்டா சொன்னீங்க..? உங்களுக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா...?" என்று கேட்டதற்கு பாட்டி சொன்னாள்.

"எனக்கு ஜோசியமெல்லாம் தெரியாதப்பா... ஆனால், ஒண்ணு தெரியும். வேகாத வடை சத்தம் போட்டுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் ஓடும்... வெந்த வடையோ அமைதியா ஒரே எடத்துல இருக்கும்...!".
.
.
.

Monday, August 16, 2010

ஆண் என்ன பெண் என்ன...?

நீலிமா என்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு ஆசிரியை.

இன்னும் சொன்னால் எனக்கு மிக நெருங்கிய தோழி.
அவள் மிகச் சமீபமாய் குழந்தைப் பேறு அடைய இருக்கிறாள்.

நாட்கள் நெருங்கி வரவர அது பெண் குழந்தையாய் இருக்குமோவென்று அவளுக்கு பயம் அதிகமாகிக் கொண்டே வந்தது.

பெண் குழந்தை மீது அவளுக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை என்றாலும், அதை வேண்டாம் என்பதற்கு ஒரு ஆச்சர்யமான காரணம் இருந்தது அவளிடம்.

நீலிமாவின் வீட்டில் யாருக்கும் ஆண் குழந்தை பிறந்ததே இல்லை என்பதுதான் அது.

அவளுடன் பிறந்தவர்கள் இருவரும் பெண்கள்.

அவள் அம்மாவுக்கும் உடன் பிறந்த நான்கும் பெண்கள்.

அவள் பாட்டிக்கும் பாட்டியின் அம்மாவிற்கும் உடன் பிறந்தது எல்லாம் பெண்கள் என அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் பெண்களாய்ப் பிறந்து வந்ததுதான் அந்தப் பரம்பரை சோகம்.

இது பழைய கதை என்றால், சமீபமாய்த் திருமணமான நீலிமாவின் அக்கா இருவருக்கும் சொல்லி வைத்தது போல் ஆளுக்கு இரண்டு பெண் குழந்தைகளே.

எனவே... நீலிமா தனக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட ஆரம்பித்தாள்.

முதலில் சாதரண ஆசையாய்த் தெரிந்த இது பின்னர் வளர்ந்து வளர்ந்து வெறியாய் மாற ஆரம்பித்துவிட்டது.

கடைசி கடைசியாய்... பெண் குழந்தை இவள் ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என பயப்படும் அளவுக்கு அவளது ஆண்குழந்தைப் பித்து தலைக்கேறிப்போய்க் கிடந்தது.

அன்றும் அப்படித்தான் நீலிமா வேலைக்கு வந்து கொஞ்ச நேரத்தில் அவளுக்கு பிரசவ வலி வந்துவிட்டது.

ஆம்புலன்ஸ் வந்து கிளம்பும்வரை என் கையைப் பிடித்துக் கொண்டு 'பையனாப் பிறக்கணும்னு கும்பிட்டுக்கடி...!' என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

எனக்கும் என்னவோ... அவளுக்கு பையனே பிறக்க வேண்டும் என்று தோன்றியது.

நீலிமா கிளம்பிப்போன அன்று பூராவும் அவளுக்கு பிரசவம் ஆகவில்லை.

கணவர் வராததால், அவளைப் போய்ப் பார்க்கவும் முடியவில்லை.

மறுநாள், காலையில் சமையல்.. பையனை கிளம்ப வைத்து, அவரை வேலைக்கு அனுப்பி, காலேஜ் உள்ளே நுழைந்ததிலிருந்து விடாமல் க்ளாஸ் என இருந்ததால் நீலிமாவைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மணி... லன்ச் சமயத்தில் ரெஸ்ட் ரூம் வந்து  செல்போனை எடுத்தால், நீலிமாவின் போனில் இருந்து நாலைந்து மிஸ்டு கால் வந்திருந்தது.

ஒரு குற்ற உணர்ச்சியுடனும், அவளுக்கு ஆண் குழந்தையே பிறந்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் நீலிமாவிற்கு போன் செய்தேன்.
மறுமுனையில் அவள்தான் எடுத்தாள்.

காலை மூன்றரை மணிக்கே பிரசவம் ஆகிவிட்டதாம்... சுகப் பிரசவம்.

கொஞ்சம் பயத்துடனே என்ன குழந்தை என்று கேட்டேன்.

"ஏய்டி இவளே... நீ கும்பிட்டது வீண்போகலைடி. எங்க வம்சத்துலயே இல்லாம எனக்கு பையனே பொறந்துட்டாண்டி....! அம்மா அப்பா அக்கா அக்கா வீட்டுக்காரரு எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம்...! எல்லாரும் குழந்தைய கையில தூக்கிட்டே அலையறாங்க. கீழ வைக்கலேன்னா பாத்துக்கோயேன்".

மிகுந்த சந்தோசத்துடன் அவள் பேசப் பேச நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

"ஆமா... பையன் யாரு மாதிரி இருக்கான்..? அப்பா மாதிரியா,  இல்லை உன்னை மாதிரியா...?".

நீலிமா இன்னும் அந்தச் சந்தோசம் மாறாத குரலில் சொன்னாள்.

"தெரியலடி... மூஞ்சியை யாரு பார்த்தா...?".
.
.
.

Wednesday, June 23, 2010

மனநல மருத்துவமனை - பயணக் கட்டுரை




விடுமுறை முடிந்து புதிய வகுப்புக்கு வந்த மாணவர்களை 'விடுமுறைக்கு எங்கே போனீர்கள்...?' என்ற தலைப்பில் ஒரு பயணக் கட்டுரை எழுதச் சொன்னபோது டேனி என்னும் ஒரு சிறுவன் எழுதிய கட்டுரை இது.


"நான் பெரும்பாலும் விடுமுறைக்கு என் தாத்தா பாட்டி வீட்டுக்குத்தான் போவேன்.

செங்கல்லும் ஓடும் உள்ள அந்த கிராமத்து வீடு...

முழுவதும் அன்பால் நிறைந்தது.

ஆனால், இப்போது தாத்தாவும் பாட்டியும் அங்கே இல்லை.

அவர்கள் வயதானதால் சற்று ஞாபகம் குறைந்து அதற்காக கோவையில் உள்ள ஒரு ஹோமுக்குப் போய்விட்டார்கள்.

அந்த ஹோமில், அவர்களைப் போலவே நிறைய மக்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அங்கே சின்னச் சின்ன அறைகளில் வாழ்கிறார்கள்.

அவர்கள் பெரிய மூன்று சக்கர வாகனங்களை உபயோகிக்க அங்கே பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அங்கே அவர்களுடைய பெயரை ஒரு அட்டையில் எழுதி அவர்களுடைய கழுத்தில் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.

இல்லாவிட்டால், அவர்கள் யார் என்பது அவர்களுக்கே ஞாபகம் இருக்காது.

அவர்கள் அங்கே நிறைய கேம்ஸ் விளையாடுகிறார்கள்; எக்ஸர்சைஸ் செய்கிறார்கள்.

ஆனால், அதை அவர்கள் சரியாய்ச் செய்வதில்லை.

அந்த ஹோமில் ஒரு ஸ்விம்மிங் பூல் இருக்கிறது.

அதில், அவர்கள் எல்லோரும் குதித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

எனக்கென்னவோ அவர்கள் நீச்சலையும் மறந்துவிட்டிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

நீங்கள் அந்த ஹோமுக்குப் போனால் அங்கே கேட்டின் முன்னே ஒரு சின்ன கூண்டில் ஒரு பெரியவரைப் பார்க்கலாம்.

அவரைத் தாண்டி இவர்களில் ஒருவர்கூட வெளியே போகவோ வரவோ முடியாது.

அவரும் இங்கே முன்பு இப்படி வந்தவர்தான்.

இப்போது சற்று பரவாயில்லை ஆகி ஹோமிலேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.

என் பாட்டி மிக அற்புதமாய் பாயாசம் வைப்பார்கள்.

அதை அவரும் இப்போது மறந்திருப்பார் நினைக்கிறேன்.

அங்கே யாரும் சமைப்பதில்லை, சாப்பிடுகிறார்கள்... அவ்வளவுதான்.

அவர்கள் எல்லோரும், எல்லா நாளும் ஒரே மாதிரி, ஒரே சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறார்கள்.

முன்பெல்லாம் என் பாட்டி அடிக்கடி சொல்வாள்.

'வாழ்நாள் பூராவும் உன் தாத்தா உழைத்தார். இப்போது இப்ப்டி ஆகிவிட்டது...' என்று.

இப்போது பாட்டிக்கும் அதேபோல் ஞாபகமறதி வந்துவிட்டது.

நான், என் தாத்தா பாட்டி இருவரும் இங்கே என் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால், கேட்டிலிருக்கும் அந்தப் பெரியவர் விடமாட்டார் என்றே நம்புகிறேன்.

நான் பெரியவனாகி ஒருவேளை எனக்கும் இதேபோல் ஆகலாம்.

அப்போது, நான் அந்த ஹோமுக்கே போக விரும்புகிறேன்.

அதிலும், அந்த கேட்டிருக்கும் பெரியவரைப் போல் ஆகவே விரும்புகிறேன்.

ஆனால்,

நான் அவ்வாறு கேட்டில் இருந்தால்...

 ஹோமில் இருக்கும் முதியவர்களை... அவர்களுடைய பேரன் பேத்திகளைப் பார்க்கக் கண்டிப்பாய் அனுமதிப்பேன் என்பது மட்டும் உறுதி...!".
.
.
.