Saturday, October 23, 2010

99 நாட் அவுட்...

பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த கிராமத்தின் பெயரைக் கேட்டால் நீங்கள் சிரித்து விடுவீர்கள்.

'மரம்புடுங்கிக் கவுண்டனூர்'.

அந்த ஊரில் ஒரு வயதானவரை ஃபோட்டோ எடுக்க என்னை வரச் சொல்லி இருந்தார்கள்.

அவருடைய வயது காரணமாக, அவரை பொள்ளாச்சியில் உள்ள எனது ஸ்டுடியோவுக்கு அழைத்துவர முடியவில்லை என்றும் வந்து போவதற்கான செலவையும் தந்துவிடுவதாக அவருடைய மகன்கள் சொன்னதால் நான் ஒப்புக்கொண்டேன்.

போய்ப் பார்த்தால், அவர் அவருடைய மகன்கள் சொன்னதைவிட உண்மையிலேயே அதிக வயதானவர்தான்.

'என்ன வயது?' என்று விசாரித்தபோது அவருடைய ஒரு மகன் சொன்னார்.

"இன்னிக்கு எங்க அப்பாவோட 99வது பொறந்த நாளுங்க. இன்னிக்கு இங்க விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கோமுங்க. அதுக்காகத்தான் உங்களை ஃபோட்டோ எடுக்க உங்களை வரச் சொன்னது பாத்துக்கங்க...!"

அவர் சொல்லிவிட்டுப் போனதும் அந்தப் பெர்யவரைப் பார்த்து எனக்கு மிக ஆச்சர்யமாய் ஆகிவிட்டது.

99 வயது என்றாலும் நல்ல ஆரோக்கியமாய்த்தான் இருந்தார்.

பிறந்தநாள் விசேஷம் தடபுடலாய் இருந்தாலும், மகன்கள் தான் உற்சாகமாய் இருந்தார்களேயொழிய மருமகள்களுக்கு ஒன்றும் அதில் அவ்வளவு ஈடுபாட்டைக் காணோம்.

அவர்கள் எல்லோரும்,"இந்த வயசுல இதுக்குப் பொறந்த நாளு ஒரு கேடு.. போகமாட்டேங்குதே..!" என்றெல்லாம் காதுபடப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கு கொஞ்சம் வருத்தம்கூடத்தான்.

அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல், ஃபோட்டோவுக்காக அவரை மேக்கப் பண்ணி உட்கார வைக்கும் போது, அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வரும் விதமாய்ச் சொன்னேன்.

"அய்யா.. உங்களோட நூறாவது பிறந்தநாள் அன்னிக்கும் நானே ஃபோட்டோ எடுப்பேன்னு நம்பறேன்..!".

நான் அப்படிச் சொன்னதும் பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி அந்தப் பெரியவர் சொன்னார்.

"ஏன்... உனக்கு என்ன நல்லாத்தான இருக்க..? அடுத்த வருசத்துக்குள்ள நீ ஒண்ணும் செத்துப் போயிற மாட்ட.. வா வா, வந்து நல்லா ஃபோட்டோ எடு...!"என்றார்.
.
.
.

5 comments:

RAVI said...

குறும்புத்தாத்தா இன்னும் பல வருடங்கள் வாழுவாருங்க.கிராமத்து உணவும்,இயற்கைக் காற்றும் நையாண்டி உண்ர்வும் நீண்ட ஆயுள் தரும்.
நாமெல்லாம் எங்க.........?

Anonymous said...

:-) Ha ha. that is confidence and nakkal

Unknown said...

பெருசு பெருசுதான்...

எஸ்.கே said...

very nice

உமா கிருஷ்ணமூர்த்தி said...

கிராமத்துக்குறும்பு நீங்கள் எதை நினைத்து சொல்கின்றீர்கள் என்பதை மிகச்சரியாக மனதைபடித்துவிட்டார் பாருங்கள்.அசடு வழிகிறது துடைத்துக்கொள்ளுங்கள்.

Post a Comment