Showing posts with label மகன். Show all posts
Showing posts with label மகன். Show all posts

Saturday, October 23, 2010

99 நாட் அவுட்...

பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த கிராமத்தின் பெயரைக் கேட்டால் நீங்கள் சிரித்து விடுவீர்கள்.

'மரம்புடுங்கிக் கவுண்டனூர்'.

அந்த ஊரில் ஒரு வயதானவரை ஃபோட்டோ எடுக்க என்னை வரச் சொல்லி இருந்தார்கள்.

அவருடைய வயது காரணமாக, அவரை பொள்ளாச்சியில் உள்ள எனது ஸ்டுடியோவுக்கு அழைத்துவர முடியவில்லை என்றும் வந்து போவதற்கான செலவையும் தந்துவிடுவதாக அவருடைய மகன்கள் சொன்னதால் நான் ஒப்புக்கொண்டேன்.

போய்ப் பார்த்தால், அவர் அவருடைய மகன்கள் சொன்னதைவிட உண்மையிலேயே அதிக வயதானவர்தான்.

'என்ன வயது?' என்று விசாரித்தபோது அவருடைய ஒரு மகன் சொன்னார்.

"இன்னிக்கு எங்க அப்பாவோட 99வது பொறந்த நாளுங்க. இன்னிக்கு இங்க விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கோமுங்க. அதுக்காகத்தான் உங்களை ஃபோட்டோ எடுக்க உங்களை வரச் சொன்னது பாத்துக்கங்க...!"

அவர் சொல்லிவிட்டுப் போனதும் அந்தப் பெர்யவரைப் பார்த்து எனக்கு மிக ஆச்சர்யமாய் ஆகிவிட்டது.

99 வயது என்றாலும் நல்ல ஆரோக்கியமாய்த்தான் இருந்தார்.

பிறந்தநாள் விசேஷம் தடபுடலாய் இருந்தாலும், மகன்கள் தான் உற்சாகமாய் இருந்தார்களேயொழிய மருமகள்களுக்கு ஒன்றும் அதில் அவ்வளவு ஈடுபாட்டைக் காணோம்.

அவர்கள் எல்லோரும்,"இந்த வயசுல இதுக்குப் பொறந்த நாளு ஒரு கேடு.. போகமாட்டேங்குதே..!" என்றெல்லாம் காதுபடப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கு கொஞ்சம் வருத்தம்கூடத்தான்.

அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல், ஃபோட்டோவுக்காக அவரை மேக்கப் பண்ணி உட்கார வைக்கும் போது, அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வரும் விதமாய்ச் சொன்னேன்.

"அய்யா.. உங்களோட நூறாவது பிறந்தநாள் அன்னிக்கும் நானே ஃபோட்டோ எடுப்பேன்னு நம்பறேன்..!".

நான் அப்படிச் சொன்னதும் பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி அந்தப் பெரியவர் சொன்னார்.

"ஏன்... உனக்கு என்ன நல்லாத்தான இருக்க..? அடுத்த வருசத்துக்குள்ள நீ ஒண்ணும் செத்துப் போயிற மாட்ட.. வா வா, வந்து நல்லா ஃபோட்டோ எடு...!"என்றார்.
.
.
.

Thursday, April 1, 2010

ஏழ்மை என்பது என்ன..?


ஒரு அப்பா நகரத்தில் வாழும் தனது மகன் ஏழ்மையைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஊரைச் சுற்றிக் காட்டிய பின்பு கேட்டார்.

"மகனே.. ஏழ்மை என்றால் என்ன என்பது தெரிந்ததா...?"

மகன் பதில் சொன்னான்.

"நன்றாகத் தெரிந்தது அப்பா...

நம்மிடம் ஒரு நாய்தான் இருக்கிறது. அவர்களோ நான்கு வைத்திருக்கிறார்கள்.

நமது வீட்டில் ஒரு சின்ன நீச்சல் குளம்தான் உள்ளது. இவர்களுக்கோ ஒரு ஆறே இருக்கிறது.

நமக்கு இரவில் வைக்க ஓரிரு விளக்குகள்தான் இருக்கிறது. அவர்களுக்கோ நட்சத்திரங்கள் இருக்கின்றன.

நம்மிடம் கொஞ்சம் நிலம் இருக்கிறது. இவர்களோ வயல்களின் சொந்தக்காரர்களாய் இருக்கிறார்கள்.

நமக்கு வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். இவர்களோ அடுத்தவருக்கு உதவுபவர்களாய் இருக்கிறார்கள்.

நாம் உணவை வாங்குகிறோம். அவர்களோ விளைவிக்கிறார்கள்.

நம்மைப் பாதுகாக்க வீடு இருக்கிறது. அவர்களுக்கோ நண்பர்கள் இருக்கிறார்கள்."

மகன் பேசிக் கொண்டே போக தந்தை வாயடைத்து நின்றுகொண்டிருந்தார்.

மகன் தொடர்ந்தான்.

"நன்றி அப்பா... நாம் எவ்வளவு ஏழையாய் இருக்கிறோம் என்று காண்பித்ததற்கு...!".
.
.
.