Sunday, August 30, 2015

தில்லுதுரயின் கடைசி நிமிடங்கள்

மாலை 5 மணிக்கு தில்லுதுரயைப் பரிசோதித்த டாக்டர் வந்த மெடிக்கல் ரிப்போர்ட்களைப் பார்த்ததுமே சொல்லிவிட்டார்.

”இன்னிக்கு ராத்திரிவரை தான் உங்க ஆயுள். நாளைக்கு காலைல நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க. அதனால உங்களுக்கு புடிச்சது எல்லாத்தையும் இன்னைக்கு ராத்திரிக்குள்ள செஞ்சிக்கங்க.!”.

ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்த தில்லுதுர, விஷயத்தை அழுதபடியே மனைவியிடம் சொன்னார்.

மனைவியும் துடித்துப் போனாள்.

கண்களைத் துடைத்தபடி தில்லுதுர கேட்டார்.

“எனக்கு உன் கையால உருளைக்கிழங்கு போண்டாவும், வாழைக்கா பஜ்ஜியும் சாப்பிடணும் போலருக்குமா… கொஞ்சம் செஞ்சி தர்றியா.?”

“இதோங்க… “ என்று எழுந்து ஓடிய மனைவியிடம் சொன்னார், “அப்படியே அதுக்கு தொட்டுக்க கொஞ்சம் தேங்காச் சட்டினியும் செஞ்சிடும்மா.!”
இரவு ஏழு மணிக்கு கேட்டார்.

“ராத்திரி சாப்பாட்டுக்கு வஞ்சிரம் மீன் குழம்பு, மட்டன் கோலா அப்படியே ரத்தப் பொறியல் செஞ்சிடும்மா. இன்னும் ஒரு நாலு மணிநேரந்தான் இருப்பேன்.!”

இரவு பத்து மணிக்கு கேட்டார்.

“நல்ல பசும் பாலை வாங்கி… அதை நல்லா சுண்டக் காய்ச்சி, கொஞ்சமா சர்க்கரை போட்டு, ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காஃபி போட்டுக் கொடும்மா.! இன்னும் ஒரு ரெண்டு மணிநேரந்தான் இருக்கு.!”

இரவு 12 மணி.

எதோ நினைத்தபடி... தன்னருகே அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்புகிறார் தில்லுதுர.

தூக்க கலக்கத்துடன் திரும்பிப் படுத்த மனைவி கோபத்துடன் சொன்னாள்.

“பேசாம படுங்ககாலைல எந்திரிச்சதும் ஆயிரம் வேல இருக்கு. சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும், எடுத்துட்டுப் போறதுக்கு வண்டி சொல்லணும்உங்களுக்கென்ன காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல..!!”.
.
.
.

Monday, August 10, 2015

அம்மான்னா சும்மாவா…

சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்க்க வந்தவன்.

வந்தவன் அந்தக் கலாச்சாரத்தோடே ஒன்றிப் போனதால், நாகரீகம் ரொம்ப முற்றி ‘ஓகே கண்மணி’ போல தன்னுடன் வேலை செய்யும் பெண்ணுடன் லிவிங் டுகெதராய் ஒரே வீட்டில் வசித்து வந்தான்.

ஒருநாள் அவன் அம்மா திடீரென்று கிராமத்தில் இருந்து அவன் தங்கும் ஃப்ளாட்டிற்கு வந்து விட்டாள்.

வந்தவன் சேகரும் ஓர் அழகான இளம்பெண்ணும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அம்மா கேட்டாள், “இது யாரு.?”

சேகர் சொன்னான், “இது என் ரூம் மேட்மா.!”.

அம்மா, “அப்படீன்னா.?”

“ரூம் மேட்னா இதே வீட்ல என் கூட தங்கியிருக்கற பொண்ணு. நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒண்ணும் இல்லம்மா. வீட்டை மட்டுந்தான் ஷேர் பண்ணிக்கறோம். மத்தபடி அவ தனி பெட்ரூம்.. நான் தனி பெட்ரூம்.!”

அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்குப் போய் விட்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து சேகருடைய ரூம்மேட் சொன்னாள்.

“உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்த தோசைக் கரண்டியைக் காணலை. ஒருவேளை, உங்கம்மா எடுத்துட்டுப் போயிருப்பாங்களோ.?”
சேகர் சொன்னான், “தெரியலை… எங்க கிராமத்து வீட்டுல வேற ஃபோன் இல்லை. இரு… நான் எதுக்கும் லெட்டர் போட்டுக் கேக்கிறேன்.!”

அவன் அம்மாவுக்கு கடிதம் எழுதினான்.

“அன்புள்ள அம்மா, நான் நீங்கள் தோசைக் கரண்டியை எடுத்தீங்கன்னு சொல்லலை. எடுக்கலைன்னும் சொல்லலை. ஆனா, ஒண்ணு மட்டும் உண்மை. என் வீட்டுல இருந்து நீங்க போனதுக்கு அப்புறம் தோசைக் கரண்டியைக் காணவில்லை.!”

சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது.
அதை சேகர் பிரித்துப் படித்தான்.

“அன்புள்ள மகனுக்கு, நான் உன் கூட வசிக்கற பொண்ணோடு நீ தப்பா இருக்கறேன்னு சொல்லலை. இல்லைன்னும் சொல்லலை. ஆனா, ஒண்ணு மட்டும் உண்மை-
-அவள் அவ பெட்டுல தூங்கி இருந்தா இந்நேரம் அந்த தோசைக் கரண்டியைக் கண்டுபிடிச்சு இருப்பா.!”.


#வாட்ஸப்பிலிருந்து
.
.
.

Tuesday, August 4, 2015

மதுமகிழ் ராஜ்ஜியத்தின் மாஸ்மாக் மதுக்கடைகள்…


த்துப் பதினஞ்சு வருசமாக் குடிச்சிட்டிருந்த ராஜ்ஜியம் தான் அது… இப்ப கொஞ்சம் பேரு மதுக்கடைகளை மூடுங்கனு வந்து நிக்கறாங்க.

தேசத்தின் பெயரே மதுமகிழ் தேசம்னா பாத்துக்கங்களேன்.

ராஜா மதுவாணன் -மக்களிடம் வேலை வாங்கிக் கொடுத்த சம்பளத்தை, மந்திரி பெயரில் ஊரெல்லாம் மாஸ்மாக் என்று மதுக்கடைகளைத் திறந்து வைத்து திரும்பக் கஜானாவுக்கே கொண்டு வந்துவிடும் மதியூகி.

இல்லாவிட்டால்… ராஜா சொகுசாய் வாழ்வது எப்படி.?

இந்தத் திட்டத்தின் முக்கிய மூளையே மதுமகிழ் தேசத்தின் மகா மந்திரிதான்.

அதிலும் கள்ளு, சாராயம் போன்றவற்றால் கிடைத்த வருமானம் போதாது என்று சமீபமாய் விஸ்கி, பிராந்தி, ஜின், ரம் என ஃபாரின் சரக்குகளும் கலந்து கட்டி வியாபாரம் படுஜோராய் போய்க் கொண்டிருந்த காலத்தில்... கடையை மூடச் சொல்லி வந்து இத்தனை பேர் நிற்கிறார்கள்.

ராஜா இதில் தன் பெயர் கெடக்கூடாது என்று, மகா மந்திரிதான் இப்போது இந்தப் பிரச்னையைக் கையாள வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

கடைகளை மூடிவிட்டால் நஷ்டம் ராஜாவுக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் என்பதை உணர்ந்த மகா மந்திரி… மாஸ்மாக் மதுக்கடைகளை மூடச் சொல்லி வந்திருப்பவர்களைப் பார்த்தார்.

சமூக சேவகர்கள், ஊர்ப் பெரியவர்கள், அகிம்சாவாதிகள், குருகுல மாணவர்கள் மற்றும் கூடவே கொஞ்சம் பெண்கள்.

தனக்கு சப்போர்ட்டாய் இருக்கும் குடிகாரர்கள் ஒருத்தரையும் கூட்டத்தில் காணோம்.

மகா மந்திரி இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தபடி சொன்னார்.

“எல்லோரும் அரசவைக்கு வந்துடுங்க. நாம இதை சபைல வச்சு முடிச்சிடுவோம்.!”.

அரைமணியில் அரசவை கூடியதும்… இதுதான் அன்றைய முதல் பிரச்னையாக ஆரம்பித்தது.

மகா மந்திரி மாஸ்மாக் எதிர்ப்பாளர்களை சபை நடுவே வரச் சொன்னார்.

அவர்கள் எல்லோரும் கூடியதும் மகாமந்திரி சபையை பார்த்து பேச ஆரம்பித்தார்.

“சபையோர்களே… ராஜ்ஜியத்தின் அநேக வளர்ச்சிப் பணிகள் இந்த மாஸ்மாக் வருமானத்தின் மூலமாகவே நடக்கிறது என்பது தெரியும். ஆனால், குடியால் ஏற்படும் பாதிப்பு குறித்து இங்கே வந்திருக்கும் நம் குடிமக்கள் சொல்வதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். ஆகவே மிக எளிதான ஒரு போட்டி வைக்க முடிவு செய்திருக்கிறேன். அதில் இவர்கள் ஜெயித்தால் நாளையிலிருந்தே நாட்டில் மதுவிலக்கு. இதில் தோற்றாலோ இவர்கள் இனி எக்காலமும் மதுவிலக்கு பற்றியே பேசக்கூடாது. ஒப்புக் கொள்கிறீர்களா.?”.

வந்திருந்தவர்களோ, ”முதலில் போட்டியைச் சொல்லுங்க மந்திரியாரே. பிறகு முடிவு செய்யலாம்.!” என்று உஷாராய்ச் சொல்ல, மகாமந்திரி போட்டி விதிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

“எல்லோரும் தயாரா இருக்கணும். விதூஷகன் மூணு எண்ணுவான். மூணு முடிஞ்சதும் மணி அடிக்கும். மணி அடிச்சதும் நான் ஒரு பழத்தோட பேரையோ, இல்லைனா ஒரு கலரையோ சொல்லுவேன். நான் பழத்தோட  பேரை சொன்னா எல்லோரும் வலது பக்கம் இருக்கற ரூமுக்குள்ள போயிடணும். கலரோட பேரச் சொன்னா எல்லோரும் இடது பக்கம் இருக்கற ரூமுக்குள்ள போயிடணும். அதுக்கப்பறம் ரெண்டு ரூமுக்குள்ள போயிருக்கறவங்க எண்ணிக்கைய வச்சு மதுவிலக்கை முடிவு செய்வோம். எங்கயும் போகாம சபைலயே நிக்கறவங்கள நாம கணக்கில எடுத்துக்க வேண்டாம். சரிதானே.!!”.

வந்திருந்தவர்கள் யோசிக்கவே தேவையில்லாத அளவுக்கு போட்டி சுலபமாய் இருந்ததும், வந்தவர்கள் எல்லோருமே மதுவிலக்குக்கு ஆதரவானவர்கள் என்பதாலும் ’ஜெயிக்கப் போவது நாம்தானே...’ என உடனே போட்டிக்கு ஒப்புக் கொண்டார்கள்.

போட்டி அப்போதே ஆரம்பமானது.

சபையில் எல்லோரும் ஆவலுடன் போட்டியைக் காணத் தயாராக, சபை நடுவே இருந்தவர்கள் போட்டிக்குத் தயாராய் அலெர்ட்டாய் நிற்க, விதூஷகன் எண்ணத் துவங்கினான்.

“ஒன்.!”

“ட்டூ.!!”

“த்ரீ.!!!”

எண்ணி முடித்ததும், “டொய்ங்.!!!” என்று பெரிய சத்தத்துடன் மணி அடித்தது.

அடுத்து எல்லோரும் மகாமந்திரியின் வார்த்தைக்காக, எந்தப் பக்கம் பாய்வது என்ற ஆர்வத்துடன் அவர் வாயையே பார்த்துக் கொண்டிருக்க…

மதுமகிழ் தேசத்து மகா மந்திரியின் குரல் ஓங்கி ஒலித்தது.


“ஆரஞ்ச்.!!!!!!!”
.
.
.

Sunday, August 2, 2015

தில்லுதுரயும் ஒரு தில்லாலங்கிடியும்


தில்லுதுரதான் அந்த ஏரியாவின் பெரிய குடியிருப்பான வசந்தம் நகர் குடியிருப்பு சங்கத்தின் தலைவர்.

அன்று அவர் அந்தக் குடியிருப்பைச் சுற்றியும் குடியிருப்புக்கு உள்ளேயும் சாலை போடுவதற்கான காண்ட்ராக்டரைத் தேர்ந்தெடுப்பதற்காக பேப்பரில் கொடுத்த விளம்பரம் பார்த்து வந்தவர்களைத் பார்க்க அமர்ந்திருந்தார்.

யார் குறைந்த தொகையில் நிறைவாகச் செய்து தர ஒப்புக் கொள்கிறார்களோ அவர்களுக்கு வேலையைக் கொடுப்பதாய்த் திட்டம்.

மூன்று பேர் காத்திருந்ததில் முதல் நபரை தில்லுதுர முதல் நபரை அழைத்தார்.

“ஏரியாவைப் பாத்திருப்பீங்க. உங்க ரேட் என்னனு சொல்ல முடியுமா.?”

முதலாமவர் புன்னகைத்தபடி பதில் சொன்னார்.

“சார்… நான் ஏபிசி கம்பெனியோட மேனேஜர். இந்த நகரமெங்கும் ஏகப்பட்ட சாலைகள் போட்ட அனுபவம் உள்ள கம்பெனி எங்களுடையது. இந்த வேலைக்கு ரொம்பக் கொறஞ்சதா செஞ்சாலும் முப்பது லட்சம் மெட்டீரியலுக்கும் இருபது லட்சம் லேபருக்கும் ஆகும். மொத்தமா ஐம்பது லட்சம் கொடுக்கறதா இருந்தா வேலைய முடிச்சுக் கொடுத்திடலாம்.!”.

”கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்…” என்றபடி தில்லுதுர அடுத்தவரை அழைத்தார்.

”சார்… நான் அல்ட்ரா ரோட் கம்பெனியோட பார்ட்னர். இந்த வேலைக்கு நாப்பது லட்சம் மெட்டீரியல் ஆகும். லேபருக்கு ஒரு இருபது லட்சம். இதர செலவுகள் ஒரு பதினஞ்சு. ஆக மொத்தம் எழுபத்தஞ்சு லட்சம் கொடுத்தா நல்லவிதமா செஞ்சு கொடுத்திடலாம் சார்.!”.

லேசாய் ஏமாற்றத்துடன் திரும்பிய தில்லுதுர, வெள்ளை வேட்டி சட்டையில் இருந்த அந்த மூன்றாமவரை யோசனையுடன் பார்த்தவாரே அழைத்தார்.

“உங்கள எங்கயோ பாத்திருக்கேனே சார்…”

வந்தவர் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தபடியே சொன்னார்.

“சார் என்னை மறந்துட்டீங்க போல. நாந்தான் இந்த வட்டச் செயலாளர். பேப்பர் விளம்பரம் பாத்துட்டுத்தான் வர்றேன். இவங்க சொன்ன ரேட்டையும் கவனிச்சேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. சங்கத்துல சொல்லி ஒரு ஒன்னரைக் கோடிய எடுத்துக் கொடுத்தீங்கனா இந்த ரோடு போடற வேலைய நானே அமோகமா முடிச்சுக் கொடுத்திடறேன்.!”

அவர் சொன்னதும் தில்லுதுர சற்றே கோபத்துடன் கேட்டார்.

“என்னது… இந்த வேலைக்கு ஒன்னரைக் கோடியா.? எங்க உங்க ப்ரேக்கப்பைக் கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.!”

தில்லுதுரயின் கோபத்தை கொஞ்சம்கூட லட்சியம் செய்யாத அந்த வட்டச்செயலாளர் சிரித்தபடியே தில்லுதுர பக்கமாய் வந்து மெலிதான குரலில் சொன்னார்.

”எல்லாம் ப்ரொசீஜர்படித்தான் சார் சொல்றேன். ஐம்பது லட்சம் உங்களுக்கு. ஐம்பது லட்சம் எனக்கு. அப்பறம் மீதி இருக்கற ஐம்பதை அந்த மொதல்ல வந்த ஏபிசிக் கம்பெனிக்காரன்கிட்டக் கொடுத்த அவன் ரோட்டைப் போட்டுக் கொடுத்திட்டுப் போறான். என்ன நாஞ்சொல்றது.!!!!”.
.
.
.

Wednesday, July 29, 2015

தில்லுதுரயும் புள்ளிராஜாவும்

தில்லுதுரயும் அவர் நண்பர் புள்ளிராஜாவும் அன்று சனிக்கிழமை வீக்கெண்டை டாஸ்மாக்கில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டில் மனைவி ஊருக்குப் போயிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாய் நேரமும் சரக்கும் அதிகமாகிக் கொண்டே போனது இருவருக்குமே தெரியவில்லை.

காருக்குத் திரும்பும்போது இருவருமே நிதானத்தில் இல்லை என்பது கால்களால் எட்டு போட்டபடி நடந்தபோதே தெரிந்தது.

காரும் டாஸ்மாக் இவர்களுடன் பாரில் குடித்து விட்டு வந்தது போலவே, சாலையில் இடதும் வலதுமாய் வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது.

நகரத்தை விட்டு வெளியேறியதும்… ஆளில்லா சாலையில் கார் வேகமெடுக்கவும் ஆரம்பித்துவிட்டது.

பத்து நிமிடம் இருக்கும்.

திடீரென காரின் முன் தெரிந்த மரத்தைப் பார்த்ததும் பதறிப்போன தில்லுதுர புள்ளிராஜாவைப் பார்த்துக் கத்தினார்.

“டேய் புள்ளி… மரம்டா.! ப்ரேக்கைப் போடு… ப்ரேக்கைப் போடு.!”.

தில்லுதுர கத்தினாரே தவிர, காரின் வேகம் சற்றும் குறையவில்லை.

“டேய் புள்ளி… மரம்டா.!” என்று தில்லுதுர பயந்து போய் கண்களை மூடிக் கத்தியபடி, “வண்டிய நிறுத்துடா” என்று அலறிய அதே விநாடி கார் அந்த மரத்தின் மீது மோத... தில்லுதுர பயத்தில் மயக்கமடைந்தே விட்டார்.

தில்லுதுர மறுபடி கண்களை விழித்தபோதுதான் தெரிந்தது… தான் ஒரு ஹாஸ்பிடலில் இருப்பது.

அடி பலமாய் இல்லையென்றாலும், வலி பலமாய் இருக்க கண்களைத் திருப்பியவர் பக்கத்தில் பேந்தப் பேந்த விழித்தபடி இருந்த புள்ளிராஜாவைப் பார்த்ததும் கோபத்துடன் கேட்டார்.

“ஏண்டா… எத்தன வாட்டி காரை நிறுத்தச் சொல்லிக் கத்தினேன். ஏன் நீ காரை நிறுத்தவேயில்ல.?”.

கோபத்துடன் பேசிய தில்லுதுரயைப் பரிதாபமாய்ப் பார்த்த புள்ளிராஜா மெலிதான கடுப்போடு சொன்னார்.


“ஏன்னா… காரை நீ ஓட்டிட்டு இருந்த.!”
.
.
.