இது எனது நூறாவது பதிவு.
கொஞ்சம் வேகமாகவே நூறை நெருங்கிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.
நான் இதை, இந்த நூறாவது பதிவை நன்றி சொல்லவே பயன்படுத்தப் போகிறேன்.
நான் இந்த சமயத்தில் சில நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டும் இருக்கிறேன்.
முதலில் என் நண்பன்
பொன்.சுதா.
அகில இந்திய அளவில் பரிசு பெற்ற அற்புதமான இரு குறும்படஙளும் மூன்று கவிதைத் தொகுதிகளும் அவனது தற்போதைய சாதனை.
தமிழில் பெயர் சொல்லும் சில திரைப்படங்களே அவனது குறி.
அவன் தான் ஏதாவது எழுது என்று விடாமல் வற்புறுத்தி இந்த பிளாக்கை என்னை உட்காரவைத்து பெயர் சொல்லச் சொல்லி உருவாக்கிய பிரம்மா..!
அவனுக்கே இந்த சமயத்தில் முதல் நன்றி.
ஆனால் நான் இப்போது எழுதும் ஒவ்வொரு பதிவுக்குப் பின்னாலும் ஒரு பெரிய நண்பர்கள் கூட்டத்தின் உதவி இருக்கிறது.
அது என் மின் நகர் நண்பர்கள்.
ஒரு காலனியே கதை எழுதிக் கேட்டிருகிறீர்களா...?
அது எங்கள் காலனியில் நடந்தது.
அதில் முதலில்
சரசுராம்.
திரைத்துறையில் கண்டிப்பாய் நல்ல படம் கொடுக்க முயற்சிக்கும் ஒரு வளரும் இயக்குனர்.
அவன் தான் படித்துக் கொண்டிருந்த எங்களை எழுத வைத்தவன்.
நான், சித்ரன், ஷாராஜ் எல்லோரும் எழுத ஆரம்பித்தது இவன் வீட்டிலிருந்துதான்.
'கீதம்' என்னும் இவன் நடத்திய கையெழுத்துப் பிரதியில் தான் நாங்கள் எழுத்துப் பயிற்சி எடுத்துக் கொண்டோம்.
அப்புறம்
சித்ரன்.
இந்த பிளாக்கின் வடிவமைப்பு மற்றும் அவ்வப்போது சில முக்கிய ஆலோசனைகளும் அவனுடையது.
ஒரு அருமையான... என்னைப் பொறாமை கொள்ளவைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரன்.
கவிதை போலக் கதைகள் அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரன்.
பின்னர், எனது நண்பர்
சத்யராஜ்குமார்.
எங்களில் சீனியர் ரைட்டர்.
பிளாக்கிற்கு ஏற்ற வடிவம் எது என்பதை
அவருடைய பிளாக்கில் எழுதும்போதுதான் கற்றுக் கொண்டேன்.
இந்த பிளாக்கை முதலில் எல்லா வடிவத்திலும் லேசாய் ஒரு சிந்தனையையோ, சிரிப்பையோ தூண்டும் சின்னச் சின்னக் கதைகள் எழுத முடிவு செய்தே 'மின்மினி தேசம்' என்று பெயர் முடிவு செய்தேன்.
பிறகு கொஞ்ச நாள் சந்தோசமாய் ஓடட்டுமே என்று குறுஞ்சிரிப்புக் கதைகளை போட ஆரம்பித்தேன்.
ஒன்றை இப்போது சொல்ல வேண்டும்.
இந்த பிளாக்கை ஆரம்பித்த நேரம், நான் பெரும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.
வீடு, அலுவலகம், உறவு என எல்லோரும் எனக்கு வாழ்க்கையைக் கற்றுகொடுக்க முயற்சிக்க... நான் பிரச்சினைகளைச் சந்திக்க ஆரம்பித்தேன்.
அப்போதெல்லாம்... எனக்கு ஆதரவாய் இருந்தது என் வாழ்க்கைத் துணையும் என் குழந்தையின் சிரிப்பும் எனது நண்பர்களும்தான்.
அதற்கப்புறம்... உதவியாய் இருந்தது மெல்லிய நகையோடும் இந்த வகை குறுஞ்சிரிப்புக் கதைகள்.
நான் உங்கள் வேலை, வாழ்க்கைப் பளுவால் கஷ்டப்படும் பாரத்தைக் குறைக்க எனது நண்பர்களை என்னால் உங்களுக்குத் தரமுடியாது.
எனவே, நான் படித்த கேட்ட இந்தக் கதைகளை உங்களுக்குத் தர முடிவு செய்தேன்.
இங்கே ஒரு நண்பர் சொன்னதுபோல... இது ஒரு இளைப்பாறுதல் தரும் இடமாக இருப்பதையே நான் மிக மிக விரும்புகிறேன்.
அதிகபட்சம் ஒரு 45 விநாடிகளுக்குள் உங்கள் முகத்தில் ஒரு புன்னகையோ... மனத்தில் ஒரு சிந்தனையையோ... மின்மினியின் ஒரு மினுக்கட்டான் மின்னலாய்த் தோன்ற வைக்கும் முயற்சிதான் இது.
இது பூராவும் எனது சொந்தக் கதைகள் கிடையாது.
பாட்டி சொல்லும் கதைகளைப் போல், இதுவும் ஆசிரியர் யாருமற்ற பழங்கதைகளே...!
ஆனால், இதில் வரும் ஒவ்வொரு கதையும் உங்களுக்குப் புதிதாய் இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் மெனக்கெடுகிறேன்.
ஒரு கதையை உங்களுக்குத் தரும்முன் குறைந்தது பத்துக் கதைகளைப் படித்து ரிஜெக்ட் செய்கிறேன்.
இதைப் படித்துக் கருத்துக்கூறும், கருத்துக் கூறாத அனைவருக்கும் என்றென்றும் எனது அன்புகள்.
யார் யாரெல்லாம் உங்களுக்கு முக்கியமான நண்பர்களோ, யார் யார் முகத்தில் எல்லாம் நீங்கள் புன்னகையைப் பார்க்க விரும்புகிறீர்களோ... அவர்களுக்கெல்லாம் இந்த இணைய முகவரியைக் கொடுங்கள்.
சந்தோசம் பரவட்டும்.
இதுபோக,
தனபால்பத்மனாபன், மருத்துவர்.பாலகிருட்டிணன்,
கனகராஜன்,
சோபா.சத்தீஷ் ஆகியோருக்கும் என் தம்பியாகவே கருதும் கார்த்தி என்னும் வேங்கடரத்தினத்திற்கும் என் ஊர் பொள்ளாச்சிக்கும் வேலைக்கு நடுவில் பதிவு போட இணைய இணைப்புக் கொடுத்துச் சம்பளமும் கொடுக்கும் எனது கம்பெனிக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் பல.
மேலும்...இதில் உள்ள சில கதைகளை நமது பிளாக்கின் பெயரோடு வெளியிட்ட 'புதிய தலைமுறை' பத்திரிக்கை மற்றும் அதன் ஆசிரியர்
மாலன் அவர்களுக்கும் எமது நன்றி.
மகிழ்ச்சி பரவட்டும்...!