Showing posts with label கோவை. Show all posts
Showing posts with label கோவை. Show all posts

Thursday, March 24, 2011

குழந்தையின் கருணை



மிக போரடிக்கிறதே என்று டேனியை கோவை வ.உ.சி. பூங்கா அழைத்துச் சென்ற ஒரு ஞாயிறு அன்று நடந்தது இது.

பூங்காவில் நான் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க, டேனி அவன் வயதை ஒத்த ஐந்து ஆறு வயதுச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரம் இருக்கும்.

வேக வேகமாய் என்னிடம் ஓடிவந்தவன், பூங்காவில் கொஞ்ச தூரம் தள்ளி அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கேக்கறாங்க, அவங்களுக்கு கொடுக்கணும் என்று அவருக்கு தருவதற்காய் பத்து ரூபாய் கேட்டான்.

இந்த வயதிலேயே என் பையனுக்கு இவ்வளவு கருணை இருக்கிறதே, அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் இருக்கிறதே என்ற பெருமையுடன் பர்ஸைத் திறந்தவள், பத்து ரூபாயை எடுத்து கையில் கொடுத்தபடி கேட்டேன்.

"எதுக்காக டேனி அவங்களுக்கு பணம் கொடுக்கணும்னு தோணுச்சு..? அவங்கனால வேலை எதுவும் செய்ய முடியாதா..?".

கேட்ட என்னைக் குழப்பத்துடன் பார்த்த டேனி சொன்னான்.

"ஏன் முடியாது... நல்லா முடியுமே..! அவங்கதான் அங்கே மிட்டாய் வித்துகிட்டு இருக்காங்க...!" என்றான்.
.
.
.

Thursday, November 18, 2010

தில்லுதுரயும் டாக்ஸியும்

தில்லுதுர அன்று அலுவலக வேலையாய் ஒரு மீட்டிங்கிற்காக கோவை வந்திருந்தார்.

ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவர், போகும் இடத்தைச் சொல்லி ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறி பின் சீட்டில் அமர்ந்ததும், தனது லேப்டாப்பைப் பிரித்து உட்கார்ந்தார்.

கோவையில் வேலை என்றாலும், தனது அலுவலகம் சம்பந்தமான உத்தரவுகளை சென்னைக்கும் இன்னபிற இடங்களுக்கும் மெயிலில் அனுப்ப ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.

திடீரென மீட்டிங்கிற்கு முன்பு 'சாப்பிட்டு விடலாம்' என்று தோன்றவே, 'நல்ல ஹோட்டல் எங்கே இருக்கிறது..' என்று கேட்பதற்காக டாக்ஸி டிரைவர் தோளைத் தொட்டார்.

டிரைவரின் தோளைத் தொட்டதுதான் தாமதம்.

அதிர்ந்துபோய் திக்கென ஆன டிரைவர், காரை சட்டென்று தாறுமாறாய் கண்டபடி ஓட்ட ஆரம்பித்தார்.

எதிரே வந்த ஒரு லாரியில் மோத இருந்து காரை ஒடித்த டிரைவர், அடுத்து ஒரு ஆட்டோ மேல் மோத இருந்து திருப்பி, மேடு பள்ளத்தில் எகிறி, ஒரு மரத்தில் கிட்டத்தட்ட மோதும் நிலையில் சட்டென்று ஒரு சடன் பிரேக்கைப் போட்டு நிறுத்தினார்.

தில்லுதுரயின் நெஞ்சு படவென்று அடிக்க ஆரம்பித்து, ஓயவே ஐந்து நிமிடம் ஆகியது.

டிரைவரோ நெஞ்சைப் பிடித்தபடி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவர், நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் திரும்பி மெதுவான குரலில் தில்லுதுரயிடம் கேட்டார்.

"என்ன சார், இப்படிப் பண்ணிட்டீங்க..?".

தில்லுதுர மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார்.

"சாரிப்பா... நான் தான் தப்பு பண்ணிட்டேன்..!".

இப்போது லேசாய்ப் புன்னகைத்த டிரைவர், தில்லுதுரயிடம் சொன்னார்.

"இல்ல சார்... இதுல உங்க தப்பு ஒண்ணுமில்ல. எல்லாம் என் தப்புதான். நான் இப்பத்தான் புதுசா டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். இதுக்கு முன்னால பத்து வருசமா ஹாஸ்பிடல்ல டெட்பாடிகளை ஏற்றிச் செல்லும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்..!".
.
.
.

Monday, June 28, 2010

டைம் மெஷின்







அன்று நான் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்தேன்.

பாலக்காடு செல்லும் பஸ் வர இன்னும் அரை மணியாகும் என்றதால் கிடைத்த சீட்டில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தேன்.

எதிரே ஒரு வெயிட் பார்க்கும் மெஷினில் சில குழந்தைகள் தங்களது எடையைப் பார்த்து விளையாடிக் கொண்டிருந்தன.

எனக்கும் எனது எடையைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தது.

போய் ஏறி மெஷினில் சக்கரம் எல்லாம் சுற்றி நின்றபின் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டேன்.

டர்ரென்று கார்ட் வந்து விழுத்தது.

நாற்பத்தியெட்டு கிலோ.

அதுபோக, எடை காட்டும் மெஷினில் விழும் கார்டில் எப்போதும் எனக்கு இன்னொரு ஆவல் உண்டு.

அது, பின்னால் சொல்லும் ஜோசியம்.

திருப்பிப் பார்த்தேன். அதில்...

"நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள்..."

'சரியாய்ச் சொல்கிறதே... நான் ஒரு ஆசிரியை என்பதும் கேரளா செல்லப்போகிறேன் என்பதும் மெஷினுக்கு எப்படித் தெரியும்..?'

குழப்பம் அதிகமாக இன்னொரு தடவை சரியாகக் காட்டுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மறுபடி மெஷினில் ஏறினேன்.

இப்போது கார்டைப் பார்க்க அதில், "நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் கணவரைச் சந்திக்கப் போகிறீர்கள்..."

நானாவது... என் கணவரைப் பார்க்கப் போவதாவது...!

'அவர் இப்போது அவருடைய அலுவலகத்தில் இருப்பார்...' என்று எண்ணிக்கொண்டே வந்து உட்கார்ந்திருப்பேன்.

பின்னால் அவர் குரல் கேட்டது.

"ஹேய் பத்மினி... இன்னும் பஸ் கிடைக்கலையா... ஒரு அர்ஜன்ட் வேலை - கோவை போகணும். சாயங்காலம் பாக்கலாம்..." என்றபடி அவர் கோயமுத்தூர் செல்லும் பஸ்சில் ஏறி கைகாடியவாறே சென்றார்.

எனக்கு ஆச்சர்யம் அதிகமாகியது.

'இது எப்படி நடக்கும்...?'.

யோசித்து யோசித்து தலை வலிக்கும் போலிருந்தது.

சரி இன்னொரு தடவை பார்த்து விடலாம்.

மீண்டும் மெஷினில் ஏறி இன்னொரு ஒரு ரூபாயைப் போட்டேன்.

இப்போது, 'நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவரைச் சந்தித்துவிட்டீர்கள்... இப்போது கடவுள் உங்கள் அருகில் வரப் போகிறார்...!'

நான் முடிவே செய்துவிட்டேன்.

'கடவுளாவது பக்கத்தில் வருவதாவது... அதுவும் இத்தனை பேர் இருக்கும் பஸ் ஸ்டாண்டில்...?'

யோசித்து முடித்திருப்பேன். முருகன் வேடம் போட்ட ஒரு சிறுவன், "அக்கா...!" என்று என்னெதிரே கை நீட்டி நின்றான்.

எனக்கோ தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது.

எப்படி.?

எப்படி..?

எப்படி...?

மெஷினையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்... என்னால் நம்பவே முடியவில்லை.

'இது எப்படி நடக்கும்...?'

'சரி... இதெல்லாம் யதேச்சையாய் நடக்கிறதா... இலலை, உண்மையிலேயே மெஷினுக்கு ஏதாவது சக்தி இருக்கிறதா என்று பார்த்துவிடலாம்.'

கடைசியாய் ஒருமுறை மெஷினில் ஏறி ஒரு ரூபாய் நாணயத்தை மறுபடி போட்டேன்.

அதில், ''நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவரைச் சந்தித்துவிட்டீர்கள்... கடவுளைச் சந்தித்துவிட்டீர்கள் ...இப்போது உங்கள் பஸ்ஸைத் தவறவிட்டு விட்டீர்கள்!" என்றிருந்தது.

"அய்யய்யோ...!' என்று நிமிர்கையில்...

அந்தப் பாலக்காடு பஸ் பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறி என் கண்ணை விட்டு மறைந்து கொண்டிருந்தது.
.
.
.