Friday, February 26, 2010

சுண்டெலியின் உலகத்தில்




முதன்முதலாய் வவ்வாலைப் பார்த்த ஒரு சுண்டெலி ஒடிப்போய் தன் அம்மாவிடம் ஆச்சர்ய ஆச்சர்யமாய் சொன்னது.
"அம்மா.. நான் இன்னிக்கு ஒரு தேவதையைப் பார்த்தேன்...!".

வாய்ப்பு மறுபடி கதவைத் தட்டும்போது


கோர்ட்டில் நீதிபதி ஒரு பெண்ணை விசாரித்துக் கொண்டிருந்தார்.

"குழந்தைகளுக்கான டயாபரைத் திருடினாயா..?"

"ஆமாம்..!"

"அந்தப் பாக்கட்டில் எத்தனை இருந்தது..?"

"இரண்டு...!"

"எனவே... உனக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை...!"

வெளியே பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அவள் கணவன் கத்தினான்.

"ஐயா... கூடவே அவள் ஒரு கடுகு பாக்கட்டையும் திருடினாள்...!".


Thursday, February 25, 2010

வாய்ப்பு கதவைத் தட்டும்போது


பாங்கைக் கொள்ளையடித்த கொள்ளையன் எதிரில் நின்ற ஒரு கஸ்டமரைக் கேட்டான்.

"நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா..?".

'ஆம்..' என்று அவன் தலையாட்டியதும் டுமீல் என்று அவனை சுட்டுவிட்டு எக்காளமாய்த் திரும்பி "வேற யாராவது பாத்தீங்களா..?".

எல்லோரும் இல்லையென்று தலையாட்ட, ஒருவன் பக்கத்தில் நின்ற பெண்ணைக் காட்டிச் சொன்னான்.

"என் மனைவி பார்த்தாள்..!".


Wednesday, February 24, 2010

கண் தெரியாதவரும் கால் டாக்ஸியும்


ஒரு கண் தெரியாதவரும் அவரது வழிகாட்டும் நாயும் சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தார்கள்.
சிக்னலில் சிவப்பு விளக்கு அணைந்து பச்சை ஒளிர்ந்ததும் சாலையின் குறுக்கே வேகவேகமாய் அவரை இழுத்து கொண்டு ஓடிய நாய், கிட்டத்தட்ட படு வேகமாய் வந்த ஒரு கால் டாக்ஸியின் மீது மோத வைக்க இருந்தது.
டிரைவர் சடனாய் ஒரு பிரேக்கைப் போட்டு , "இன்னாயா... வூட்ல சொல்லிக்கினு வந்துட்டியா...?" என்று கேட்டுவிட்டுப் போனான்.
சற்று படபடப்புடன் சாலையின் மறுபுறம் வந்த அந்த கண் தெரியாதவர் நாய்க்கு "ச்..ச்..."என்று அழைத்து ஒரு பிஸ்கட்டைக் அதற்குத் தின்னக் கொடுத்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், "இன்னாபா.. உன்னைக் கொல்லப் பாத்தது... அதுக்குப் போயி பிஸ்கோத்த துண்ணத் தாரீயே...!" என்று கேட்க, அந்த கண்தெரியதவர் பதிலளித்தார்.
"பிஸ்கட் கொடுக்கலைனா இந்த நாயை எந்தப் பக்கம் உதைக்கறதுனு நான் எப்படிக் கண்டுபிடிக்கறது...?".



Tuesday, February 23, 2010

தில்லுதுர மனைவி


எங்கள் அலுவலகத்தில் மொபைல் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
எல்லோரும் முன்னால் இருக்கும் லாக்கர் ரூமில் வைத்துவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம்.
மதியம் லன்ச்சில் வந்து சில சமயங்களில் மிஸ்டு கால் பார்த்து ஃபோன் செய்து கேட்டுக் கொள்வது நடக்கும்.
அன்று அப்படித்தான் நான் எதுவும் ஃபோன் வந்திருக்கிறதா என்று பார்க்க வந்தபோது எங்கள் மானேஜர் யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தார்.
ஆள் கொஞ்சம் பந்தா பேர்வழி. படா தில்லுதுர.
ஸ்பீக்கர் வேறு ஆனில் இருந்தது.
எனவே தன்னால் கவனம் அங்கே சென்றது.
"ஹலோ...!"
மறுமுனையில் இவர் மனைவி என்று நினைக்கிறேன். "என்னங்க..நான் தான்.. ஆபிஸ்லயா இருக்கீங்க..?"
"ஆமா... சொல்லும்மா..."
"நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை. வாங்கிகட்டுமா...?"
"வாங்கிக்க...!"
"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்..."
"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!"
"ஏங்க... அப்புறம் நாம பார்த்தமே ஒரு கார்... இப்ப ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... என்ன பண்ணலாம்..?"
"வாங்கிடு... ஆனா, எல்லா அக்ஸஸரிஸும் இருக்கணும்... தள்ளுபடில வங்கிட்டு அப்புறம் அது இல்ல, இது இல்லனு சொல்லிகிட்டு இருக்கப்படாது... ஓகே?"
"ஓகேங்க... ஐ லவ் யூ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.
தில்லுதுரயும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டு திரும்பினார்.
ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நான் மிரண்டு போய்ப் பார்த்துகொண்டிருக்க, என்னைப் பார்த்து சிரித்தபடியே கேட்டார்.
"யாரோட மொபைல்டா இது..?".







Monday, February 22, 2010

காட்டைவித்துக் கள்ளைக் குடிச்சாலும்


அந்நிய தேசத்தில் காரில் போய்க்கொண்டிருந்த போது அவன் ஒரு பாலத்தில் ஏறி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயல்வதைக் கண்டு தடுத்துப் பேசினேன். ஆங்கிலத்தில்தான்.
"பார்த்தால் ஆசியன் மாதிரி தெரியுதே...!"
"ஆமா.. !"
"நானும்தான்... நீ இந்தியனா...?"
"ஆமா.. !"
""நானும்தான்... நீ சவுத் இந்தியனா...?"
"ஆமா.. !"
"சவுத் இந்தியால எங்கே..?"
"தமிழ்நாடு..."
"அடடே தமிழனா...?" பேச்சு தமிழுக்கு மாறியது. "தமிழ்நாட்ல எங்கே..?"
"கோயம்புத்தூர்..."
"அடடே... கோயம்புத்தூர்னா...?"
"பக்கத்துல ஆனைமலை...!"
"அடடே... ரொம்ப பக்கத்துல வந்துட்டே.. என்ன ஆளுக நீங்க..?"
தன் ஜாதியச் சொன்னான்.
"அடடே, நம்ம ஜாதி... எனன கூட்டம்..?"
அதையும் சொன்னான்.
"அப்படிப் போடு... நம்ம கூட்டமாவே போயிட்ட போ... ஆமா, குலதெய்வம்...?" அவன் பதில் சொன்னதுதான் தாமதம்.
எரிச்சல் மனதில் மண்டியது.
இவனுக ஆளுகதான் அஞ்சு வருசமா எங கோயிலத் தொறக்கவிடாம ஊருக்குள்ள ரகளை பண்ணிகிட்டு இருக்காங்க. இங்க இவன நாம காப்பாத்தறதா..?
"சாவுடா... !" என்று அவனை ஆற்றில் தள்ளிவிட்டேன் நான்.




என் அப்பா ஒரு கவர்மென்ட் ஆஃபீசர்


பள்ளிக்கூடத்தில் மூன்று சிறுவர்கள் தங்களது தந்தைமார்களைப் பற்றிய பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒருவன், "என் அப்பா ஒரு வேட்டைக்காரர்... அவர் வில்லிலிருந்து அம்பும் அவரும் ஒன்றாய்ப் புறப்பட்டால், அவர் அந்த அம்பைவிட வேகமாய்ப் போய்ச் சேர்ந்துவிடுவார்...!".
அடுத்தவன், "என் அப்பா ஒரு மிலிட்டரி ஆஃபீசர்... அவர் துப்பாக்கியிலிருந்து புல்லட்டும் அவரும் ஒன்றாய்ப் புறப்பட்டால், அவர் அந்த புல்லட்டைவிட வேகமாய்ப் போய்ச் சேர்ந்துவிடுவார்...!".
மூன்றாமவன் சொன்னான்.
"என் அப்பா ஒரு கவர்மென்ட் ஆஃபீசர்... அவர் எவ்வளவு வேகம்ணு எனக்குத் தெரியாது..! அவர் ஆஃபிஸ் அஞ்சு மணிக்குத்தான் முடியும்... ஆனா, அவர் நாலு மணிக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்திடுவார்..!".




Saturday, February 20, 2010

"டூ மோர் லார்ஜ்..."


மாலை ஆறு மணி.
அந்த பாருக்குள் அவன் நுழைந்து ஒரு டேபிளில் அமர்ந்தான்.
பார் அட்டென்டர் அவனருகில் வந்து, "சார்..ஆர்டர் ப்ளீஸ்..!".
அவன் திரும்பி, "ஆர்சி ரெண்டு லார்ஜ்...".
பார் அட்டென்டர் கொண்டு வைத்ததும் மெதுவாய் குடித்தான்.
முடிந்தது.
திரும்பவும் பார் அட்டென்டர் அவனருகில் வந்தான்.
அவன், "ஒரு நிமிஷம்..." என்றவன் பாக்கெட்டில் கை விட்டு பர்ஸை எடுத்து பிரித்துப் பார்த்துவிட்டு, "டூ மோர் லார்ஜ்...".
வந்தது... குடித்து முடிந்தது.
மறுபடி பார் அட்டென்டர் அவனருகில்.
அவன் திரும்ப பர்ஸை எடுத்து பிரித்துப் பார்த்துவிட்டு, "டூ மோர் லார்ஜ்..." என்றான்.
இது தொடர்ந்து கொண்டே இருக்க வெறுத்துப்போன பார் அட்டென்டர், "சார்... இங்க பாருங்க. இன்னிக்கு ராத்திரி பூரா கேளுங்க. நான் கொடுத்துகிட்டே இருக்கேன்... ஆனா, ஒவ்வொரு தடவையும் ஆர்டர் பண்ணுறதுக்கு முன்னால அந்தப் பர்ஸ்ல என்னதான் எடுத்துப் பார்க்கறீங்க... அதுதான் எனக்குப் புரியவேமாட்டேங்குது...!".
அவன் மெல்லத் திரும்பி, "தம்பி... அதுலதான் என் மனைவியோட ஃபோட்டோ இருக்கு. எந்த ரவுண்டு முடியும் போது அவள் அழகா தெரிய ஆரம்பிக்கறாளோ... அப்ப குடிக்கறத நிறுத்திட்டு கிளமபிருவேன்..." என்றவன்... ...திரும்பவும், "டூ மோர் லார்ஜ்..." என்றான்.



இன்விஸிபில் மேனின் பிராப்ளம்...


மிக பிஸியாய் இருந்த சைக்ரியாட்ரிக் டாக்டரை இன்டர்காமில் தொடர்பு கொண்ட அவரது ரிஷப்ஸனிஸ்ட் கூறினார்.
"டாக்டர்... இங்கே ஒரு பேஷன்ட் உங்களுக்காக காத்திருக்கிறார். அவருக்கு - இன்விஸிபில் மேன் போல, தான் பிறர் கண்களுக்கு தெரிவதில்லை..! - என்று தோன்றுவதாய்க் கூறுகிறார்..".
பிஸியாய் இருந்த டாக்டர் பதில் கூறுகிறார்.
"அவரைப் பார்க்க முடியாதுன்னு சொல்லு....!".


Friday, February 19, 2010

முதல்வரின் பேருரை


அன்று காமராஜர் அரங்கத்தில் மாநில முதல்வரின் நிர்வாகம் சாராத பேருரை நடந்து கொண்டிருந்தது.
அரங்கத்தில் கூட்டத்தை ஒழுங்கு பண்ணும் பணியில் இருந்த அந்த இளைஞன் கதவருகில் புதிதாய் ஒரு வயதான பெண்மணி உள்ளே நுழைந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அந்தப் பெண்மணிக்கு உதவும் நோக்கத்தோடு அருகில் சென்றவன் கேட்டான், "நான் உங்களுக்கு உதவலாமா...?.
அந்தப் பெண்மணி பதிலளித்தாள், "கண்டிப்பாய்...".
"எங்கே அமர விரும்புகிறீர்கள் அம்மா...?".
"முதல் வரிசையில் இடம் கிடைத்தால் பரவாயில்லை....".
"முதல்வரிசை வேண்டாம் அம்மா... இன்று முதல்வரின் உரை மிகவும் வெறுப்படிக்கும் விதமாய் உள்ளது...".
அந்தப் பெண்மணி கோபமாய் திரும்பி,"நான் யார் தெரியுமா...?".
"தெரியாது... யார் நீங்கள்...?".
"நான் தான் முதல்வரின் அம்மா...!".
வேகமாய்த் திரும்பிய அவன் கேட்டான்,"நான் யார் தெரியுமா...?".
"தெரியாது...!".
"ரொம்ப நல்லதாய்ப் போச்சு..." என்று ஓடியே போனான் அவன்.




Thursday, February 18, 2010

மந்திரவாதியின் மனைவி


கொஞ்ச நாளைக்கு முன்னால எங்க ஊருப்பக்கம் ஒரு மந்திரவாதி இருந்தான்.
பயங்கர சித்துவேலை எல்லாம் செய்வான். ஊர் மக்களையெல்லாம் ரொம்ப மிரட்டி பயமுறுத்தி வெச்சிருந்தான்.
அதோட மட்டுமில்ல... அவன் மனைவியையும் ரொம்பக் கொடுமைப் படுத்துவான். அவ எந்நேரமும் அழுதிட்டேதான் இருப்பா.
ஊர் மக்கள் எல்லாம் அவளுக்காக ரொம்ப பரிதாபப்படுவாங்க.
ஆனா, மந்திரவாதி எதப்பத்தியும் கவலைப்படமாட்டான்.
அவன் அடிக்கடி அவன் மனைவியைப் பாத்து சொல்லுவான். "நான் எப்படா சாவேன்னு பாத்துகிட்டு இருக்கியா.. நான் செத்தாலும் உன்னையும் இந்த ஊரையும் விடமாட்டேன்... புதைகுழியைத் தோண்டிக்கிட்டு வந்து உங்களப் பழிவாங்குவேன்...."
நாங்க எல்லாம் 'இதெதுடா இவன் செத்தும் கெடுப்பான் போல இருக்கே...'னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே அவன் ஒரு நாள் செத்தும் போயிட்டான்.
எங்களுக்கெல்லாம் ஒரே பயம்.
இவனப் பொதச்சா எந்திரிச்சு வந்திடுவானோனு... எங்க ஊரு பழக்கம் எரிக்கவும் முடியாது...
என்ன பண்றதுனு தெரியாம அவன் மனைவி முடிவுக்கே விட்டுட்டோம். பயத்துல யாரும் அவன்கூட சுடுகாடுகூடப் போகல.
ஆனா, அவன் மனைவியோ,'விட்டதுடா...'னு பயங்கர சந்தோஷமா சுத்திகிட்டு இருந்தா.
ஒரு யாரும் இல்லாத அன்னிக்கு அவளத் தனியாப் பாத்து கேட்டேன், "உனக்கு மந்திரவாதி பயமில்லியா...?"னு.
அவ என்னைத் திருப்பிக் கேட்டா, "என்ன பயம்...?".
"அவன் புதைகுழியைத் தோண்டிக்கிட்டு வந்துடுவனோனு..".
அதுக்கு அவள், "தோண்டினா தோண்டட்டும்... நான் அவனத் தலைகீழாத் தான புதைச்சு வச்சிருக்கேன்...!"னு சொன்னாளே பாக்கணும்.



Monday, February 15, 2010

தமிழன் என்று சொல்லடா...


ஒரு பஞ்சாபி, ஒரு மலையாளி, ஒரு தமிழன் மூவரும் ஒரு மோசமான சாலை விபத்து ஒன்றில் மாட்டி உயிரிழந்து விட்டனர்.

மூவரின் உடலும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மருத்துவமனையில் மூவரின் உடலையும் பரிசோதித்த பிறகு அவர்கள் உடலை சவக்கிடங்கிற்கு கொண்டு செல்ல டாக்டர் முடிவெடுத்தபோது அந்தப் பஞ்சாபி திடீரெனக் கண் விழித்தான்.

எல்லோரும் ஒரு கணம் அதிர்ந்துவிட்டனர்.

பிறகு ஒரு டாக்டர் கேட்டார், "என்னப்பா...என்ன நடந்தது...?".

பஞ்சாபி பதில் சொல்ல ஆரம்பித்தான்.

"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... டமால்னு ஒரு சத்தம். அதுக்கப்புறம் பளீர்னு ஒரு வெளிச்சம். கண் முழிச்சுப் பாத்தா... சித்திரகுப்தன் முன்னால நிக்கிறோம். அவர்தான் கேட்டாரு -'பாத்தா சின்ன வயசா இருக்கீங்க... வாழவேண்டிய வயசு... ஆளுக்கொரு ஒரு லட்சம் நன்கொடையா கொடுத்தீங்கனா திரும்ப பூமிக்கே அனுப்பி வைக்கிறேன். என்ன சொல்றீங்க..?' - நான் யோசிக்கவே இல்ல. டப்புனு என் சூட்கேஸத் தொறந்தேன். ஒரு லட்ச ரூபாய எடுத்து வெச்சேன். இதோ இப்ப இங்க இருக்கேன்...".


டாக்டருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.


அவர் கேடடார், "உன் கதை ஓகே... மத்த ரெண்டு பேரு... அவங்க ஏன் இன்னும் திரும்பி வரல்ல...?".


பஞ்சாபி பதில் சொன்னான்.


"நான் கடைசியாப் பாக்கும் போது அந்த மலையாளி டொனேஷன் ஜாஸ்தினு கம்மி பண்ண பேரம் பேசிக்கிட்டு இருந்தான். அந்தத் தமிழ் ஆளு எப்படியும் அவன் கவர்மென்ட்டுக்குத் தெரிஞ்சு அவங்க பே பண்ணி அவனை பூமிக்குக் கூட்டிக்கிட்டு வந்திடும்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தான்...!"


Thursday, February 11, 2010

ஒரு மாதிரியான குடும்பக் கதை


திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் ஃபோன் செய்த மகள் அப்பாவிடம் அழுகிறாள்.
"அப்பா... இப்பல்லாம் அவர் என்கிட்ட அடிக்கடி சண்டை போடறாரு... அடிக்கறாரு... எனக்கும் கோபம் வருது. பெரிய பிரச்னையாயிடுமோனு பயமாயிருக்கு... என்ன பண்றதுண்ணே தெரில...!".
அப்பா ஆதரவாய் பதில் சொன்னார்.
"பயப்படாதம்மா... நீ பயப்படற அளவு மோசமா இருக்காது... கல்யாண வாழ்க்கைல சண்டை வர்றது சகஜம்தான...!".
மகள், "அது எனக்கும் தெரியும்பா... இப்ப அவரோட பாடிய நான் என்ன பண்றது...?".




Wednesday, February 10, 2010

கருத்த, தடித்த, எருமை போன்ற தமிழ்ப் பையன்


அச்சு என்பவரின் தலைமையில், பிரேம்சந்த் நிர்வகிக்கும் மல்லு பள்ளியில், லால்மோஹன் ஹெச்.எம்., ராம்ஜெய் என்னும் வாத்தியார்.

அவர் வகுப்பில் கருத்த, தடித்த, எருமை போன்ற தமிழ்ப் பையன் ஒருவன் படிக்கிறான்.

அன்று ராம்ஜெய் வகுப்பு எடுக்கும்போது, "மல்லுவாயிருப்பதில் பெருமையடைபவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள்..." என்று அவர் சொன்னதும் அத்தனை மாணவர்களும் ஆரவாரமாய்க் கையைத் தூக்குகிறார்கள்... அந்த ஒருவனைத் தவிர.

வாத்தியார் ராம்ஜெய்க்கு ஒரே கோபம்.

"ஏன்... உனக்கு என்ன..?".

அதற்கு அந்தச் சிறுவன், "நான் தமிழன்..."என்கிறான்.

வாத்தியாருக்குக் கோபம் அதிகமாகிறது. "நீ எப்படி தமிழனாவாய்..?".

"நான் தமிழ்நாட்டில் பிறந்தேன்...".

"இது சரியான பதில் அல்ல...".

"என் அப்பா அம்மா இருவரும் தமிழர்கள்..".

"அதனால்...?".

"அதனால், நான் தமிழன் தானே...?".

வாத்தியாருக்கு வந்ததே கோபம்.

"அப்ப... உன் அப்பா அம்மா இருவரும் மடையர்களாயிருந்தால் நீயும் மடையனாய் இருப்பாயா..?".

சிறுவன் சாந்தமாய் பதிலளித்தான்.

"இல்ல... அப்ப நான் மல்லுவாய் இருப்பேன்...!".



Tuesday, February 9, 2010

முதுகெலும்பு அற்ற மற்றும் ஓர் உயிரினம்


கொஞ்ச நாட்களுக்கு முன்பு காட்டில் ஒரு அநாதையான குட்டி முயலும் அதே போல் அநாதையான குட்டி பாம்பு ஒன்றும் வசித்து வந்தன. விதிவசமாய் இரண்டும் குருடும்கூட.

இவை இரண்டும் ஒரு நாள் இரை தேடிப் போகும் போது அந்த முயல் தவறி பாம்பின் மீது விழுந்துவிட்டது.

உடனே முயல் பாம்பிடம், "சாரிண்ணே... மன்னிச்சுக்கஙக. எனக்கு கண்ணு தெரியாது... தெரியாம உஙக மேல விழுந்துட்டேன்...".

"அதனால என்ன... பரவாயில்ல. எனக்கும்தான் கண்ணு தெரியாது. ஆமா... நீங்க யாரு? கரடியா, புலியா, சிறுத்தையா..?" என்று கேட்க, முயல், "எனக்கு அப்பா அம்மா இல்லியா... அதனால நான் யாருன்னு எனக்கே தெரியாது..!" என்றது.

"எனக்கும் அப்படித்தான்... ஒண்ணு பண்ணுவமா, நம்ம யாருன்னு நாமளே கண்டுபிடிச்சுக்குவமா..!".

முயலும் "ஓகே.." சொல்ல பாம்பு முயலின் மேல் ஏறியது.

மெல்ல முயலின் உடலெல்லாம் சுற்றிய பிறகு, " உன் உடல் மென்மையான பஞ்சு போன்ற முடியால் மூடப்பட்டுள்ளது. காதுகள் நீளமாய் உள்ளது. உருண்டையான மூக்கு. சின்ன வால்... நான் கேள்விப்பட்ட வரை நீ முயல் என்றே நினைக்கிறேன்..." என்றது.

"நன்றி..நன்றி..." சந்தோசத்தில் கூவிய முயல் இப்போது பாம்பின் உடலைத் தடவிப் பார்த்துச் சொன்னது.

" உன் உடல் திடமற்றும் எளிதில் வளைந்து கொடுக்கக்கூடியதாயும் உள்ளது. உன் தோல் வழுவழுவென்றும் எளிதில் நழுவக் கூடியதாயும் உள்ளது. உடலெங்கும் அடி வாங்கிய காயங்கள் உள்ளன. உலகமெங்கும் உன்னை அடித்திருப்பார்கள் போலிருக்கிறது. உனக்கு நாக்கு இரட்டையாய் உள்ளது. முதுகெலும்பே இல்லை. எனக்கென்னவோ நீ தமிழனாய் இருப்பாய் என்று தோன்றுகிறது..!" .




கவலைப்படாதே சகோதரா....


கம்பெனியின் முதலாளி மற்றவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. எல்லாப் பக்கமும் லாஸ். பணம் புரட்டவே முடியல. நெனச்சு நெனச்சு பிரஷர் அதிகமாகிட்டே போகுது. டாக்டர்கிட்ட போனா கவலைப்பட்டா இன்னும் உடம்பு மோசமாகிடும்னு சொல்றார்...".
கேட்டுக் கொண்டிருந்த அடுத்தவர் கேட்டார். "அதுக்கு என்ன பண்ணினே...?".
"புதுசா ஒருத்தன வேலைக்குச் சேர்த்திருக்கேன். எனக்கு பதிலா கவலைப்படறதுதான் அவன் வேலை. மாசம் ஒரு லட்சம் சம்பளம். அவன் வேலைக்குச் சேர்ந்து நாளையோட ஒரு மாசம் முடியுது..."
"ஏற்கனவே லாஸ்னு சொல்றே... இப்போ அவனுக்கு எப்படி ஒரு லட்சம் சம்பளம் கொடுப்ப...?" என்று அவர் நண்பர் கேட்டார்.
அதற்கு அந்த முதலாளி, "அதைப் பத்திதான் நான் கவலைப்பட வேண்டியதில்லையே...!".

Monday, February 8, 2010

கைதி கண்ணாயிரம்


கூண்டில் நிற்கும் கைதியைப் பார்த்து நீதிபதி கேட்டார்.
"நீ உண்மையே பேசுவதாக சத்தியம் செய்திருக்கிறாய். மறந்துவிடாதே..! மீறி பொய் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா...?".
கண்ணயிரம் பதிலளித்தான்.
"தெரியும்.. நாங்கள் ஜெயித்துவிடுவோம்..!"




இங்கும் ஒரு காதல் கதை...


கடற்கரையில் அந்த ஆண் நண்டைப் பார்த்ததுமே பெண் நண்டுக்கு காதல் உண்டாகிவிட்டது.


அது மற்ற நண்டுகளைப் போல் சைடுவாக்கில் நடக்காமல் மனிதர்களைப் போல் நேராய் நடந்து கொண்டிருந்தது.


பெண் நண்டு உடனே தன் காதலைச் சொல்லியும்விட்டது. ஆண் நண்டுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.


பெண் நண்டு உடனே தன் பெற்றோர்களிடம் சொல்லி திருமண சம்மதமும் பெற்றுவிட்டது.


நல்ல நாளில் பெண் பார்க்கும் வைபவமும் ஏற்பாடாகியது. பிறகு திருமணம். பெண் நண்டு ஆண் நண்டிடம் போட்ட ஒரே கண்டிஷன் பெண் பார்க்கும்போதும், மாப்பிள்ளை அழைப்பின் போதும், திருமணத்தின் போதும் மற்ற நண்டுகளைப் போல் சைடுவாக்கில் நடக்காமல் நேராய் நடந்து வர்வேண்டும் என்பதுதான். அதே போல் ஆண் நண்டும் நடந்து வர பெண் நண்டுக்கும் அதன் வீட்டாருக்கும் ஒரே பெருமை.


கல்யாணம் முடிந்தது. முதல் இரவு.


அறைக்குள் நுழைந்த ஆண் நண்டு மற்ற நண்டுகளைப் போலவே சைடாய் நடந்துவர பெண் நண்டு கேட்டது.

"என்னங்க... உஙக ஸ்பெஷலே நேரா நடக்கறதுதான். அப்படி நடக்காம எல்லா நண்டுக மாதிரி சாதாரணமா நடந்து வர்றீங்களே..!".


அதற்கு ஆண் நண்டு, "ங்கொய்யால... டெய்லி தண்ணீ அடிக்க டாஸ்மாக்ல ங்கொப்பனா வேலை பாக்கிறான்..." என்றது.












Saturday, February 6, 2010

எப்பூடீ


அமெரிக்காவில் அந்த பார் ஒரு பில்டிங்கின் அறுபதாவது மாடியில் இருந்தது.
அதில் நம்ம சர்தார்ஜி தண்ணியடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு அமெரிக்கன் உள்ளே நுழைந்தான். வந்தவன் நேராய் நம்ம சர்தார்ஜி இருந்த டேபிளுக்கு வந்து அமர்ந்து ஒரு பியர் ஆர்டர் பண்ணிணான்.
நம்ம சர்தார்ஜி கிண்டலாய், "என்னய்யா... இவ்ளோ பெருசா இருக்கே. இன்னும் பியர் குடிச்சுட்டு. கொஞ்சம் வளர வேண்டாமா..? ஒரு பெக் ஹாட் சாப்பிட்டுத்தான் பாரேன்..." என்று மகா கிண்டலாய்ச் சொல்ல அந்த அமெரிக்கன் சாந்தமாய் பதிலளித்தான்.
"அய்யா... இது ஒரு மாஜிக்கல் பியர்... அதனாலதான் நான் இதைக் குடிக்கிறேன்..!" என்றார். சர்தார்ஜி ஆச்சர்யமாய்க் கேட்டார், "அப்படி என்ன மாஜிக்..?".
"இரு காட்டறேன்.." என்ற அந்த அமெரிக்கன் கடகடவென்று பியரைக் குடித்துவிட்டு நேராய் ஜன்னலுக்குப் போனான்.
ஜன்னலில் ஏறிக் குதித்தவன் கீழே விழாமல் சர்ரென்று ஒரு ரவுண்ட் வானத்திலேயே அடித்துவிட்டு வந்து டேபிளில் அமர்ந்து கேட்டான், "எப்பூடீ...?".
சர்தார்ஜிக்கு ஒரே ஆசசர்யம்.
உடனே அவனும் அதே பியரை வாங்கி வேகவேகமாய் குடித்துவிட்டு வேகமாய் ஜன்னலில் ஏறிக் குதித்தான்.
குதித்தவன் பறக்காமல் அறுபதாவது மாடியிலிருந்து நேரே கீழே விழுந்து தலை சிதறி இறந்து போனான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வெயிட்டர் அந்த அமெரிக்கன் அருகில் வ்ந்து, "என்ன சூப்பர்மேன்.... யூனிஃபார்ம் இல்லாம மஃப்டில வந்து கிண்டல் பண்ண ஒருத்தன கொன்னேபோட்டியே..." என்று சொல்லிவிட்டு போனான்.




Friday, February 5, 2010

கபாலி இன் சொர்க்கம்


கேடி கபாலி இறந்ததும் மேலே போனான்.
சி.கு. (சித்திரகுப்தன்) அவன் கணக்குகளை எல்லாம் பார்த்துவிட்டு, "தம்பி கபாலி... உன்னோட கணக்கெல்லாம் பாத்ததுல உனக்கு நரகம்தான் வருது. ஆனாலும் நீ ஆடி மாசம் ஆஃப் சீசன்ல இங்க வந்திருக்கறதால உனக்கொரு ஆஃப்பர் இருக்கு. நீ சொர்க்கம் போறதா, இல்ல நரகம் போறதானு நீயே டிசைட் பண்ணிக்கலாம். என்ன சொல்ற..?" என்றார்.
கபாலி யோசிக்கவேயில்லை, "சொர்க்கம்தான் என்னோட சாய்ஸ்..." என்று சொல்லிவிட்டான்.
"சரி வா..." என்று சி.கு. அவனை சொர்க்கத்திற்கு கூட்டிக்கொண்டு போகும் வழியில்தான் கபாலி அந்த அறையைப் பார்த்தான்.
சுத்தமாய் சத்தம் நுழையாத அந்தக் கண்ணாடி அறைக்குள் அவனுடைய தோஸ்த்துகள் எல்லாம் டிவி, டான்ஸ் பார்த்துக் கொண்டும் சீட்டாட்டம் ஆடிக்கொண்டும் ரொம்ப குஷாலாய் இருப்பதைப் பார்த்து, " மிஸ்டர். சினாகுனா... இது என்ன இடம்..?" என்று கேட்டான்.
சி.கு., " இது நரகம் கபாலி.."என்றார்.
கபாலி யோசித்துப் பார்த்தான், ' நரகமொன்னும் நாம நெனச்ச மாதிரி அவ்வளவு கஷ்டமாய் தெரியல... நம்ம ஃபிரண்ட்ஸெல்லாம் வேற இங்க நிறைய இருக்காங்க.. பேசாம இங்கயே தங்கிடலாம்'னு முடிவு பண்ணி சி.கு.கிட்ட சொல்லிவிட்டான்.
"இதப்பாரு மிஸ்டர். சினாகுனா... நான் சொர்க்கத்துக்குப் போகல...இங்கயே தங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...".
சி.கு., "ஓகே...உன் இஷ்டம்..."னு சொல்லிவிட்டு கிளம்பியதும் கபாலி அந்த அறைக்குள் ஆரவாரமாய் நுழைந்தான்.
அதே நேரம் ஒருவன் மறு கதவு வழியாய் கையில் சவுக்குடன் நுழைந்து, "ம்ம்ம்........கிளம்புங்க, கிளம்புங்க....." என்று சவுக்கைச் சொடுக்க எல்லோரும் எப்போதும் போல் நரகத்தின் தண்டனைகளை அனுபவிக்கத் தொடங்கினார்கள்.
கபாலி நண்பனிடம் விசயத்தைச் சொன்னபோது அவன் சொன்னான்.
" டீ பிரேக்ல வந்து மாட்டிக்கிட்டியே தோஸ்த்து..."




துறவியின் வருகை


புகழ் பெற்ற துறவியைச் சந்திக்க வெளிநாட்டிலிருந்து யாத்ரீகர் ஒருவர் வந்திருந்தார்.
வந்தவர் துறவியின் அறையைப் பார்த்து வியந்து போனார்.
ஒரு சிறிய அறை... அறை முழுக்கப் புத்தகங்கள்.... சாய்ந்து படிக்க ஒரு தலையணை...அவ்வளவுதான்.
ஆச்சயர்மாய் துறவியிடம் அவர் கேட்டார், "உங்களுடைய பொருட்கள் எல்லாம் எங்கே...?".
அதற்குத் துறவி அவனைக் கேட்டார், "உன்னுடைய பொருட்கள் எல்லாம் எங்கே...?".
" எனக்கு எதற்குப் பொருட்கள்... நான் ஒரு யாத்ரீகன் அல்லவா...?".
துறவி சாந்தமாய் புன்னகைத்தவாறு பதிலளித்தார், " நானும் அப்படித்தான்...!".





நாய்ப் பிழைப்பு


நாய் ஒன்று அதன் படிப்பு மற்றும் தகுதிக்கேற்ற வேலை தேடிப் போகும்போது அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தது.
'பர்ஸனல் அஸிஸ்டென்ட் தேவை. தகுதி: ஸ்பீடாக டைப்ரைட்டிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டு மொழிகள் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.'
நாய் வேகமாய் உள்ளே சென்றது. ஒரு மெஷினை வாங்கி மின்னல் வேகத்தில் டைப் செய்து காட்டியது. முதலாளிக்கு பயங்கரத் திருப்தி.
முதலாளி கேட்டார், "ஓகே... உன்னோட மொழி பேசுவேனு தெரியும்... வேற என்ன பாஷை பேசுவே..?".
நாய் தொண்டையை கனைத்துக்கொண்டு அழகாய் மெல்லிய குரலில் சங்கீதமாய், "மியாவ்..." என்றது.



Thursday, February 4, 2010

இதைப் படிக்காதீங்க


ஒரு மீனவன் அதிகாலை ரொம்ப சீக்கிரமா எந்துருச்சிட்டான்.
கடலுக்குள்ள போறதுக்கு இன்னும் வெளிச்சம் வேணும்.
என்ன பண்ணலாம்னு யோசிச்சபடியே நடக்கும்போது அவன் காலடியில ஒரு பை கிடந்தது. பை நிறைய கல்லு.
ஸோ, டைம் பாஸ்க்கு வெளிச்சம் வர்ற வரைக்கும் ஒவ்வொரு கல்லா எடுத்து கடலுக்குள்ள வீசிக்கிட்டு இருந்தான்.
சூரியன் வரும்போது கையில இருந்த ஒரே ஒரு கல்லைத்தவிர, மத்த எல்லாத்தையும் கடலுக்குள்ள வீசியிருந்தான்.
வெளிச்சம் வந்ததும்தான் தெரிந்தது... அவன் கையிலருந்து வீசினது எல்லாம் கல் இல்ல, அத்தனையும் வைரம்.
என்ன பண்றது.... அவன் வாழ்க்கையில ரொம்ப நாள் அதை நினைச்சு நினைச்சு நொந்துக்கிட்டே இருந்தான்.

நீதி: காலைல ரொம்ப சீக்கிரம் எந்திரிக்கக் கூடாது.




ஆகச் சிறிய கதை



உலகின் கடைசி மனிதன் அமர்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது.






கரடி வேடம் போடுபவன் வாழ்வில் ஒரு நாள்



"ஐயோ...என்னைச் சுட்டுடாதீங்க..!"


Wednesday, February 3, 2010

மிகப் பயங்கரமான ஆக்ஸிடென்ட்


ஒரு சிறிய பறவை ஒன்று உல்லாசமாய் பாடியபடி பறந்து சாலையை வேகமாய் க்ராஸ் செய்யும் போது பைக்கில் சென்ற வாலிபனை மோதி மயக்கமாகி விடுகிறது.
காயமடைந்த பறவையைப் பார்த்த வாலிபன் பறவையின் காயத்திற்கு மருந்திட்டு, கூண்டில் படுக்க வைத்து, விழித்தால் உண்ணக் கொஞ்சம் பாலும் ரொட்டியும் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான்.
விழித்த பறவை அலறியது, "அய்யோ... என்னை ஜெயில்ல போட்டுட்டாங்களா...? அப்ப பைக்ல வந்தவன் ஸ்பாட் அவுட்டா..?"



சாமியாரும் மனைவியும்


சாமியார் ஒருவரிடம் பக்தர் சந்தேகம் கேட்கிறார்.
"ஸ்வாமி... முழுமையடைதல் என்றால் என்ன..? முடிந்து போதல் என்றால் என்ன..?.
சாமியார் பதிலளிக்கிறார்.
"பக்தா... திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகிறாய். நல்ல மனைவி அமைந்தால் உன் வாழ்க்கை முழுமையடைந்துவிட்டது என்று அர்த்தம். அதுவே உல்டாவாகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அர்த்தம்.."



ஒரு டாக்டர் ஒரு மெக்கானிக்


டாக்டர் ஒருவர் தனது கார் ரிப்பேர் ஆனதால் மெக்கானிக் ஷெட்டுக்குப் போகிறார்.
காரின் எஞ்ஜினை பிரித்து பழுது நீக்கி திரும்ப மாட்டி ஓடவிட்டு பில் கொடுக்கும்போது மெக்கானிக் டாக்டரிடம் கேட்கிறான். "அய்யா, பாருங்கள்... நானும் உங்களைப் போல்தான் காரின் இதயம் போன்ற எஞ்ஜினைப் பிரித்தேன். வால்வுகளை கழற்றினேன். சரி செய்து திரும்ப மாட்டி மறுபடி ஓட விட்டேன். ஆனால், உங்களுக்கு சம்பளம் அதிகம், எனக்கு எவ்வளவு குறைச்சல் பார்த்தீர்களா..ஏன் இப்படி...?.
டாக்டர் மெல்ல அவன் காதருகில் வந்து சொன்னார்,"நீ செய்ததை எஞ்ஜின் ஓடிக்கொண்டிருக்கும் போது செய். அதிகம் கிடைக்கும்...!"

Tuesday, February 2, 2010

மிகச் சிறிய ஜோக்



ஊனமுற்றோருக்கு உதவும் அமைப்புக் கூட்டத்தில் பயனர் ஒருவரைப் பார்த்து அலுவலர் கேட்கிறார்.
"நீ ஊமையா..?".
பதில், "ஆமா..!".

மின்னல் வீரன்

சாலையில் சென்றுகொண்டிருந்த நத்தை ஒன்றை ஆமை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
நத்தை கோபத்துடன் போலிஸ் ஸ்டேஷனில் போய் நின்றது. "சார்... என்னை ஆமை ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் ஓடிவிட்டது... அதன் மேல் கேஸ் ஒன்று பதியவேண்டும்...!"
கேட்ட போலீஸ் நத்தையிடம்," அந்த ஆமை பற்றி அடையாளம் எதுவும் சொல்லமுடியுமா...?" என்று கேட்டதற்கு நத்தை,"அடையாளம் எதுவும் தெரியல சார்... என்னை இடிச்சுட்டு அவன் மின்னல் வேகத்துல ஓடிட்டான்...!" என்றதாம்.

பரிசு - இரண்டரைக் கோடி கார்

டேனி என்னும் அந்தச் சிறுவன் கார் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த விலையுயர்ந்த காரையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த அந்த காரின் ஓனர் இளைய யுவன் டேனியிடம் கேட்டான். "ஒரு ரவுண்ட் போலாம்... வர்றியா?"டேனி ஆர்வமாய் தலையசைத்தான்.
அந்த யுவன் அவனைக் காரில் ஏற்றிக் கொண்டு ஒரு ரவுண்ட் போனான். "பாத்தியா... டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், பக்கா ஆடியோ ஸிஸ்டம், செவன் கியர், பவர் ஸ்டியரிங், பூராவும் ஆட்டோமேட்டிக்... ஆஸ்த்திரேலியவுல செய்தது. என் அண்ணன் என்னோட பர்த்டேக்கு பரிசா கொடுத்தான். இரண்டரைக் கோடி விலை.........."
அவன் பேசிக் கொண்டே போக டேனி ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.அந்த யுவன் சிரித்தான். "இப்ப நீ என்ன நினைக்கிறேன்னு தெரியும்......."
டேனி நிமிர்ந்து பார்த்தான்.
அந்த யுவன் தொடர்ந்தான். "என் அண்ணன் மாதிரி ஒரு அண்ணன் இருந்தா நல்லா இருக்கும்னுதான் நினைக்கிறே..?"
டேனி சிரித்தவாறே பதில் அளித்தான்."இல்ல... நான் உன் அண்ணன் மாதிரி இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்...." என்றான்.