Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Wednesday, March 9, 2011

தில்லுதுர என்றொரு நல்லவர்


சிறுவன் ரமேஷ் வேலை பார்ப்பது ஒரு முட்டைக் கடையில்.

கொள்முதலாய் வாங்கும் முட்டைகளை கடைத்தெருவில் இருக்கும் சில்லறைக் கடைகளில் கொண்டு போய்க் கொடுப்பதுதான் அவன் வேலை.

ஒருநாள், கூட்டம் அதிகமாய் இருந்த கடைத்தெருவின் வழியாக வரும்போது, ஒரு தடுமாற்றத்தில் வண்டி கவிழ்ந்துவிட, முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து சிதறிவிட்டது.

"ஐயோ... என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்..? இவ்வளவு முட்டையின் காசுக்கு நான் எங்கே போவேன்..?" என்று நினைக்கும்போதே பயம் வந்து, ரமேஷ் அழ ஆரம்பித்துவிட்டான்.

கடைத்தெருவில் போவோர் வருவோரெல்லாம் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்போது, அங்கே வந்த தில்லுதுர ஆதரவாய் ரமேஷின் தோள்களைத் தட்டி, "ஏன் தம்பி அழறே..? இந்த முட்டைகளுக்கு உன்னால் காசு கொடுக்க முடியாது என்றுதானே..?" என்று கேட்க, ரமேஷ் கண்களில் நீருடன் 'ஆம்.." என்று தலையை ஆட்டினான்.

உடனே தில்லுதுர, "கவலைப்படாதே.. இங்கே நான் இருக்கேன். இவ்வளவு பேர் இருக்காங்க. நாங்க உனக்கு உதவி செய்யாமப் போயிடுவோமா..?" என்றபடி பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரின் தோளில் இருந்த தோளில் இருந்த துண்டை எடுத்தார்.

தன் பையில் இருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து அதில் போட்டுவிட்டு, கூட்டத்தாரிடமும் வந்தார்.

கூட்டத்தில் இருந்தவர்கள் சிறுவனின் நிலைக்கு வருத்தப்பட்டு பத்தும் இருபதுமாய் ரூபாய்களைப் போட, கணிசமாய் பணமும் சேர்ந்தது.

வசூலை முடித்து, கூட்டத்தினர் முன்பே பணத்தை எண்ணி அந்தச் சிறுவனிடம் கொடுத்த தில்லுதுர, "அழாதப்பா... இந்தா இந்தப் பணத்தைக் கொண்டுபோய் உன் கடையில் கட்டிவிடு..!" என்று போய்விட்டார்.

கூட்டத்தினர் எல்லோரும் தில்லுதுரயின் உதவும் குணத்தை எண்ணி வியந்து கொண்டிருக்க, அந்தப் பையனிடம் ஒருவர் கேட்டார்.

"அவர் மட்டும் வரலைனா உன் கதி என்ன ஆகியிருக்கும். எவ்வளவு நல்லவர் அந்த மனுஷர். எவ்வளவு உதவும் குணம் அவருக்கு. அவரை உனக்கு முன்னமே தெரியுமா..?".

அழுது கொண்டிருந்த ரமேஷ் கண்களைத் துடைத்தபடியே சொன்னான்.

"அண்ணே.. அவர் பேரு தில்லுதுர. அவர்தான் என் முதலாளி... இந்த முட்டையெல்லாம் அவரு ஏத்தி அனுப்பினது தான்..?".
.
.

Monday, September 6, 2010

நொந்தகுமாரன்

நந்தகுமாரன் ஒரு காலத்தில் பயங்கர ஃபைனான்சியர்.

இப்போ எல்லாம் போச்சு.

வாங்கியவன் எல்லாம் காணாமல் போவதும், போய் விசாரித்தால் எல்லோரும் தப்பான அட்ரஸ் கொடுத்திருப்பதும் தொடர்ந்து நடக்க நந்தகுமாரன் வாழ்வில் நொந்தகுமாரனாகிவிட்டான்.

செல்வம் போய், கையில் இருந்த காசுபணம் போய், கார் வீட்டையெல்லாம் பேங்க் ஜப்தி செய்ய நந்தகுமாரன் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.

குடும்பம் இல்லாதவர் என்பதால் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.

என்றாலும் வயிற்றுப்பாட்டுக்கே திண்டாட்டம் ஆகிவிட்டது இப்போது.
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.

பணம் போச்சு, கௌரவம் போச்சு, மரியாதை, மதிப்பு, நண்பர்கள் என எல்லாமே போயாச்சு.

எல்லாம் போனாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே,
அது போகவேயில்லை... விடாமல் நந்தகுமாரனைத் துரத்தியது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நந்தகுமாரன், யாருக்கும் தெரியாமல் பக்கத்து ஊரில் போய் பிச்சை எடுப்பது என முடிவு செய்தார்.

'எங்கே பிச்சை எடுக்கலாம்...' என கடவுள் முன்னால் திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தார்.

கோயில்,கடைத்தெரு,பஸ் ஸ்டான்ட் என ஏகப்பட்ட இடங்கள் எழுதிப் போட்டதில் "கோயில்" என சீட்டு கிடைத்தது.

மறுநாள் காலையிலேயே நந்தகுமாரன் கடவுளின் திருவுள்ளப்படி பக்கத்து ஊர்க் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டார்.

காலையிலிருந்தே பக்தர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்களேயொழிய, நந்தகுமாரன் தட்டில் விழுந்ததோ ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமான சில்லறைகளே.

பொழுது சாயும்வரை காத்திருந்தும் ஒரு இருபது ரூபாய்கூடச் சேரவில்லை.
நொந்துபோன நந்தகுமாரன், 'வேறு எங்கே உட்காரலாம்...' என்று பார்த்த போது... சற்று தூரத்தில் ஒரு வைன் ஷாப் கண்ணுக்குத் தெரிந்தது.

மாலை நேரம் ஆனதால், இப்போது அங்கே கொஞ்சம் நடமாட்டமும் அதிகமாயிருக்க... ஊருக்குக் கிளம்பும் முன் அங்கேயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்கலாம் என முடிவு செய்தார் நந்தகுமாரன்.

உள்ளே போனவர்கள் நல்ல போதையில் வெளியேவர, அவர்கள் கையிலிருந்து நந்தகுமாரன் தட்டில் ஐந்தும் பத்துமாய் ரூபாய் நோட்டுகளாய் விழ ஆரம்பித்தது.

தட்டு நிறைய நோட்டுகள் விழவிழ, நந்தகுமாரன் எதிரே தெரிந்த கோவில் கோபுரத்தைப் பார்த்துச் சொன்னார்.

"பகவானே... என்னிடம் பணம் வாங்கியவர்கள்தான் ஒரு அட்ரஸ் கொடுத்துவிட்டு இன்னொரு அட்ரஸில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நீயுமா...?".
.
.
.

Tuesday, February 2, 2010

பரிசு - இரண்டரைக் கோடி கார்

டேனி என்னும் அந்தச் சிறுவன் கார் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த விலையுயர்ந்த காரையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த அந்த காரின் ஓனர் இளைய யுவன் டேனியிடம் கேட்டான். "ஒரு ரவுண்ட் போலாம்... வர்றியா?"டேனி ஆர்வமாய் தலையசைத்தான்.
அந்த யுவன் அவனைக் காரில் ஏற்றிக் கொண்டு ஒரு ரவுண்ட் போனான். "பாத்தியா... டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், பக்கா ஆடியோ ஸிஸ்டம், செவன் கியர், பவர் ஸ்டியரிங், பூராவும் ஆட்டோமேட்டிக்... ஆஸ்த்திரேலியவுல செய்தது. என் அண்ணன் என்னோட பர்த்டேக்கு பரிசா கொடுத்தான். இரண்டரைக் கோடி விலை.........."
அவன் பேசிக் கொண்டே போக டேனி ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.அந்த யுவன் சிரித்தான். "இப்ப நீ என்ன நினைக்கிறேன்னு தெரியும்......."
டேனி நிமிர்ந்து பார்த்தான்.
அந்த யுவன் தொடர்ந்தான். "என் அண்ணன் மாதிரி ஒரு அண்ணன் இருந்தா நல்லா இருக்கும்னுதான் நினைக்கிறே..?"
டேனி சிரித்தவாறே பதில் அளித்தான்."இல்ல... நான் உன் அண்ணன் மாதிரி இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்...." என்றான்.