Showing posts with label டாஸ்மாக். Show all posts
Showing posts with label டாஸ்மாக். Show all posts

Wednesday, July 29, 2015

தில்லுதுரயும் புள்ளிராஜாவும்

தில்லுதுரயும் அவர் நண்பர் புள்ளிராஜாவும் அன்று சனிக்கிழமை வீக்கெண்டை டாஸ்மாக்கில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டில் மனைவி ஊருக்குப் போயிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாய் நேரமும் சரக்கும் அதிகமாகிக் கொண்டே போனது இருவருக்குமே தெரியவில்லை.

காருக்குத் திரும்பும்போது இருவருமே நிதானத்தில் இல்லை என்பது கால்களால் எட்டு போட்டபடி நடந்தபோதே தெரிந்தது.

காரும் டாஸ்மாக் இவர்களுடன் பாரில் குடித்து விட்டு வந்தது போலவே, சாலையில் இடதும் வலதுமாய் வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது.

நகரத்தை விட்டு வெளியேறியதும்… ஆளில்லா சாலையில் கார் வேகமெடுக்கவும் ஆரம்பித்துவிட்டது.

பத்து நிமிடம் இருக்கும்.

திடீரென காரின் முன் தெரிந்த மரத்தைப் பார்த்ததும் பதறிப்போன தில்லுதுர புள்ளிராஜாவைப் பார்த்துக் கத்தினார்.

“டேய் புள்ளி… மரம்டா.! ப்ரேக்கைப் போடு… ப்ரேக்கைப் போடு.!”.

தில்லுதுர கத்தினாரே தவிர, காரின் வேகம் சற்றும் குறையவில்லை.

“டேய் புள்ளி… மரம்டா.!” என்று தில்லுதுர பயந்து போய் கண்களை மூடிக் கத்தியபடி, “வண்டிய நிறுத்துடா” என்று அலறிய அதே விநாடி கார் அந்த மரத்தின் மீது மோத... தில்லுதுர பயத்தில் மயக்கமடைந்தே விட்டார்.

தில்லுதுர மறுபடி கண்களை விழித்தபோதுதான் தெரிந்தது… தான் ஒரு ஹாஸ்பிடலில் இருப்பது.

அடி பலமாய் இல்லையென்றாலும், வலி பலமாய் இருக்க கண்களைத் திருப்பியவர் பக்கத்தில் பேந்தப் பேந்த விழித்தபடி இருந்த புள்ளிராஜாவைப் பார்த்ததும் கோபத்துடன் கேட்டார்.

“ஏண்டா… எத்தன வாட்டி காரை நிறுத்தச் சொல்லிக் கத்தினேன். ஏன் நீ காரை நிறுத்தவேயில்ல.?”.

கோபத்துடன் பேசிய தில்லுதுரயைப் பரிதாபமாய்ப் பார்த்த புள்ளிராஜா மெலிதான கடுப்போடு சொன்னார்.


“ஏன்னா… காரை நீ ஓட்டிட்டு இருந்த.!”
.
.
.

Tuesday, April 22, 2014

தில்லுதுரயும் டாஸ்மாக் லீவும்

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மூன்றுநாள் லீவ் என்றதும் தில்லுதுர அலர்ட் ஆகிவிட்டார்.

மூன்று நாளும் வீட்டில் சரக்கை வாங்கி வைத்துக் குடிக்க மனைவி விட மாட்டாள் என்பதால், வரும் போதே நன்றாக சுதி ஏத்திக் கொண்டுதான் வந்தார்.

வீட்டுக்கு வந்து மனைவியின் திட்டு எல்லாம் வாங்கி முடித்து விட்டு, சாப்பிட்டு படுக்கும் போதுதான் மனைவி சொன்னாள்...

“ஏங்க... புதுசா வந்ததால இங்க நமக்கு ஓட்டு இல்ல. என் ஓட்டு இன்னும் அம்மா வீட்டு அட்ரஸ்ல தான இருக்கு. நான் வேணும்னா நாளைக்கு காலைல போய்ட்டு எலெக்சன் முடிஞ்சு வெள்ளிக் கிழமை வரட்டுமா.!”.

கேட்டதுதான் தாமதம்.

மூன்று நாட்கள்...மனைவியும் இல்லாமல் டாஸ்மாக்கும் இல்லாமல்.

தில்லுதுர கண்கள் கலங்கி விட்டது.

குரல் போதையில் உளறலோடு சொன்னார்.

“மூணு நாள்... ஐயோ... நீ இல்லாம நான் எப்படி இருக்கப் போறேன்னு தெரியலையே தங்கம்...!”

தில்லுதுர புலம்ப ஆரம்பித்ததும் மனைவி சிரித்தபடி கேட்டாள்.

“இது யாரு பேசறது... நீங்க பேசறீங்களா இல்ல உள்ள போன சரக்கு பேசுதா.?”.

மனைவி கேட்டதும் அதே உளறலோடு பதில் சொன்னார்.

“ஏண்டி... நாந்தான் பேசறேன். ஆனா நான் பேசறது உங்கூட இல்ல... சரக்குகூட.!” என்றார்.
.
.
.



Sunday, September 8, 2013

குடி…. குடியைக் கெடுக்கும்.!


தில்லுதுரயின் மருமகன் ஒரு மகா குடிகாரன்.

டாஸ்மாக்கே கோயில் என வாழும் தமிழ்க் குடிமகன்களில் ஒருவன்.

எத்தனையோ முறை மகளும் மனைவியும் புகார் கூறியும் தில்லுதுர அதுகுறித்து தனது மருமகனிடம் பேசியதில்லை.

குடிப்பதினால் ஏற்படும் சங்கடங்களை உணரும்போது அவர் அதை நிறுத்திவிடுவார் என்பது தில்லுதுரயின் எண்ணம்.

ஆனால், தில்லுதுரயின் மனைவியோ இதை விடுவதாயில்லை.

மருமகனை எப்போதும் திட்டுவதும் கேவலமாய்ப் பேசுவதும் எனத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

தில்லுதுர மனைவியிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் எப்போதும் போல், தில்லுதுரயின் பேச்சை மதித்ததேயில்லை.

அன்றும் அப்படித்தான்.

தீபாவளிக்கோ எதற்கோ மகளுடன் வீட்டுக்கு வந்த மருமகன், மாலை வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று ஆரம்பித்த வக்குவாதம்… சண்டையாய் மாறி, கைகலப்பாகி கடைசியில் தில்லுதுரயின் மருமகன் தில்லுதுரயின் மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்றதில் போய் முடிந்துவிட்டது.

நல்லவேளையாய், மருமகன் துப்பாக்கி குறி தவறியதால் மாமியார் உயிர் தப்பிவிட, அவர் மருமகன் மீது போலிசில் புகார் செய்தேயாக வேண்டும் என அலுவலகத்தில் தில்லுதுரயை உடனே வரச் சொன்னார்.

தில்லுதுர வீடு வந்து சேர்வதற்குள் நிலவரம் ஓரளவு தணிந்திருக்க, மனைவியை சமாதானப் படுத்திவிட்டு, மருமகனைக் கூப்பிட்டு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

“இதோ பாருங்க… குடிக்கறது ஒரு மோசமான பழக்கம். அதனால, நீங்க என்னென்ன இழந்திருக்கீங்கனு யோசிச்சுப் பாருங்க. உங்க மனைவியின் அன்பு, குழந்தைகளுடனான விளையாட்டு, உறவுகளுடனான கொண்டாட்டம், உங்க மரியாதை இப்படி எல்லாத்தையும் இழந்திருக்கீங்க..”

மருமகன் தில்லுதுர சொல்வதின் அர்த்தம் ஓரளவு புரிந்து கவலையுடன் பார்க்க… தில்லுதுர தொடர்ந்தார்.

“இதையெல்லாம் தாண்டி இன்னிக்கு பொறுப்பான உங்க கையில் துப்பாக்கி தூக்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனா, நல்லா யோசிச்சுப் பாருங்க. இந்தக் குடியாலதான் இன்னிக்கு உங்க குறியும் தவறிப் போச்சு.! இதை உணர்ந்துகிட்டீங்கனா சரி.!”.
.
.
.



Friday, February 24, 2012

தில்லுதுர இன் டாஸ்மாக் பார்

ஒரு வெள்ளிக்கிழமையின் சாயங்காலம் முடிந்த நேரத்தில் டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த தில்லுதுர, மங்கலான வெளிச்சத்தில் ஒரு ஆளில்லாத டேபிளைத் தேடி அமர்ந்தார்.

அமர்ந்ததும் அவசர அவசரமாய் அங்கும் இங்கும் பரபரப்புடன் பார்த்த அவர், அட்டென்டரை வேகமாய்க் கையை ஆட்டி அழைத்தார்.

பக்கம் வந்த அட்டென்டர் ஆர்டரைக் கேட்பதற்குள், "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள... ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

குழப்பத்துடன் அவரைப் பார்த்த அட்டென்டர், தில்லுதுர கேட்டதை கொண்டு வந்து கொடுத்தார்.

சரக்கு வந்ததும் கொஞ்சம் அவசரமாகவே அதைக் குடித்த தில்லுதுர, திருமபவும் பரபரப்புடன் அந்த அட்டென்டரை அழைத்தார்.

பக்கம் வந்த அட்டென்டரிடம் மறுபடி, "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

இன்னும் குழப்பமான அந்த அட்டென்டர், ஒன்றும் பேசாமல் திரும்பவும் தில்லுதுர கேட்டதையெல்லாம் கொண்டு வந்து டேபிளில் வைத்தார்.

அதையும் குடித்து முடித்துவிட்டு அந்த அட்டென்டரை அழைத்த தில்லுதுர, "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

கடுப்பாகிப் போன அட்டென்டர் ஆரடரைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, தில்லுதுரயைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டார்.

"சும்மா 'சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள'னு சொல்லறியே... சண்டை எப்பய்யா ஆரம்பிக்கப் போகுது.?".

அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருந்த தில்லுதுர, இப்போ அந்த அட்டென்டரைப் பார்த்து போதையாய் சிரித்தபடி சொன்னார்.

"இப்ப... நான் குடிச்சதுக்கெல்லாம் நீ பணம் கேட்ட உடனே...!" என்றார்.
.
.
.

Monday, May 10, 2010

ஒரு கெமிஸ்ட்ரி ஜோக்



நியூட்ரான் தெரியுமா உங்களுக்கு...?

ஒரு வீக் எண்ட்.... சாயங்காலம்.

அவனும் அவன் தோஸ்த்து இன்னொரு நியூட்ரானும் ஒரு நாள் தண்ணி அடிக்க பக்கத்துல இருக்கற டாஸ்மாக் பாருக்குப் போனாய்ங்க.
போனாய்ங்களா.... அங்கே தண்ணி அடிச்சு அவனுக ஃபுல் மப்பு.

எல்லாம் முடிஞ்சு கடைசியா நம்ம நியூட்ரான் பார் அட்டென்டர்கிட்ட கேட்டான்.

"இன்னாப்பா... நமக்கு எவ்ளோ சார்ஜு...?"

இதைக் கேட்டதும் கூடக் குடித்துக் கொண்டிருந்த நண்பன் நியூட்ரான் சொன்னது.

"ஏய்... இன்னாப்பா நீ லூஸூ மாதிரிக் கேட்டிகிணுகீற...? நாமதான் நியூட்ரான் ஆச்சே... நமக்கு ஏது சார்ஜூ...?".
.
.
.

Monday, February 8, 2010

இங்கும் ஒரு காதல் கதை...


கடற்கரையில் அந்த ஆண் நண்டைப் பார்த்ததுமே பெண் நண்டுக்கு காதல் உண்டாகிவிட்டது.


அது மற்ற நண்டுகளைப் போல் சைடுவாக்கில் நடக்காமல் மனிதர்களைப் போல் நேராய் நடந்து கொண்டிருந்தது.


பெண் நண்டு உடனே தன் காதலைச் சொல்லியும்விட்டது. ஆண் நண்டுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.


பெண் நண்டு உடனே தன் பெற்றோர்களிடம் சொல்லி திருமண சம்மதமும் பெற்றுவிட்டது.


நல்ல நாளில் பெண் பார்க்கும் வைபவமும் ஏற்பாடாகியது. பிறகு திருமணம். பெண் நண்டு ஆண் நண்டிடம் போட்ட ஒரே கண்டிஷன் பெண் பார்க்கும்போதும், மாப்பிள்ளை அழைப்பின் போதும், திருமணத்தின் போதும் மற்ற நண்டுகளைப் போல் சைடுவாக்கில் நடக்காமல் நேராய் நடந்து வர்வேண்டும் என்பதுதான். அதே போல் ஆண் நண்டும் நடந்து வர பெண் நண்டுக்கும் அதன் வீட்டாருக்கும் ஒரே பெருமை.


கல்யாணம் முடிந்தது. முதல் இரவு.


அறைக்குள் நுழைந்த ஆண் நண்டு மற்ற நண்டுகளைப் போலவே சைடாய் நடந்துவர பெண் நண்டு கேட்டது.

"என்னங்க... உஙக ஸ்பெஷலே நேரா நடக்கறதுதான். அப்படி நடக்காம எல்லா நண்டுக மாதிரி சாதாரணமா நடந்து வர்றீங்களே..!".


அதற்கு ஆண் நண்டு, "ங்கொய்யால... டெய்லி தண்ணீ அடிக்க டாஸ்மாக்ல ங்கொப்பனா வேலை பாக்கிறான்..." என்றது.