தில்லுதுரதான் அந்த ஏரியாவின் பெரிய குடியிருப்பான வசந்தம் நகர் குடியிருப்பு சங்கத்தின் தலைவர்.
அன்று அவர் அந்தக்
குடியிருப்பைச் சுற்றியும் குடியிருப்புக்கு உள்ளேயும் சாலை போடுவதற்கான காண்ட்ராக்டரைத்
தேர்ந்தெடுப்பதற்காக பேப்பரில் கொடுத்த விளம்பரம் பார்த்து வந்தவர்களைத் பார்க்க அமர்ந்திருந்தார்.
யார் குறைந்த தொகையில்
நிறைவாகச் செய்து தர ஒப்புக் கொள்கிறார்களோ அவர்களுக்கு வேலையைக் கொடுப்பதாய்த் திட்டம்.
மூன்று பேர் காத்திருந்ததில்
முதல் நபரை தில்லுதுர முதல் நபரை அழைத்தார்.
“ஏரியாவைப் பாத்திருப்பீங்க.
உங்க ரேட் என்னனு சொல்ல முடியுமா.?”
முதலாமவர் புன்னகைத்தபடி
பதில் சொன்னார்.
“சார்… நான் ஏபிசி
கம்பெனியோட மேனேஜர். இந்த நகரமெங்கும் ஏகப்பட்ட சாலைகள் போட்ட அனுபவம் உள்ள கம்பெனி
எங்களுடையது. இந்த வேலைக்கு ரொம்பக் கொறஞ்சதா செஞ்சாலும் முப்பது லட்சம் மெட்டீரியலுக்கும்
இருபது லட்சம் லேபருக்கும் ஆகும். மொத்தமா ஐம்பது லட்சம் கொடுக்கறதா இருந்தா வேலைய
முடிச்சுக் கொடுத்திடலாம்.!”.
”கொஞ்சம் வெயிட்
பண்ணுங்க சார்…” என்றபடி தில்லுதுர அடுத்தவரை அழைத்தார்.
”சார்… நான் அல்ட்ரா
ரோட் கம்பெனியோட பார்ட்னர். இந்த வேலைக்கு நாப்பது லட்சம் மெட்டீரியல் ஆகும். லேபருக்கு
ஒரு இருபது லட்சம். இதர செலவுகள் ஒரு பதினஞ்சு. ஆக மொத்தம் எழுபத்தஞ்சு லட்சம் கொடுத்தா
நல்லவிதமா செஞ்சு கொடுத்திடலாம் சார்.!”.
லேசாய் ஏமாற்றத்துடன் திரும்பிய தில்லுதுர, வெள்ளை வேட்டி சட்டையில் இருந்த அந்த மூன்றாமவரை யோசனையுடன் பார்த்தவாரே அழைத்தார்.
“உங்கள எங்கயோ
பாத்திருக்கேனே சார்…”
வந்தவர் வாயெல்லாம்
பல்லாகச் சிரித்தபடியே சொன்னார்.
“சார் என்னை மறந்துட்டீங்க
போல. நாந்தான் இந்த வட்டச் செயலாளர். பேப்பர் விளம்பரம் பாத்துட்டுத்தான் வர்றேன்.
இவங்க சொன்ன ரேட்டையும் கவனிச்சேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. சங்கத்துல சொல்லி
ஒரு ஒன்னரைக் கோடிய எடுத்துக் கொடுத்தீங்கனா இந்த ரோடு போடற வேலைய நானே அமோகமா முடிச்சுக்
கொடுத்திடறேன்.!”
அவர் சொன்னதும்
தில்லுதுர சற்றே கோபத்துடன் கேட்டார்.
“என்னது… இந்த
வேலைக்கு ஒன்னரைக் கோடியா.? எங்க உங்க ப்ரேக்கப்பைக் கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.!”
தில்லுதுரயின்
கோபத்தை கொஞ்சம்கூட லட்சியம் செய்யாத அந்த வட்டச்செயலாளர் சிரித்தபடியே தில்லுதுர பக்கமாய் வந்து மெலிதான குரலில் சொன்னார்.
”எல்லாம் ப்ரொசீஜர்படித்தான்
சார் சொல்றேன். ஐம்பது லட்சம் உங்களுக்கு. ஐம்பது லட்சம் எனக்கு. அப்பறம் மீதி இருக்கற
ஐம்பதை அந்த மொதல்ல வந்த ஏபிசிக் கம்பெனிக்காரன்கிட்டக் கொடுத்த அவன் ரோட்டைப் போட்டுக்
கொடுத்திட்டுப் போறான். என்ன நாஞ்சொல்றது.!!!!”.
.
.
.