Friday, February 8, 2013

டேனி என்றொரு ஞானி




அவரோட அக்கா கோடை விடுமுறைக்கு குழந்தைகளை கூட்டிக் கொண்டு வீட்டில் விட்டிருந்த நேரம்.

குழந்தைகளா அதுக.?

எந்நேரமும் எதையாவது உடைச்சுகிட்டே தான் இருக்கும்.

ஆனாலும், எப்போதும் தனியாகவே எங்களோடு இருக்கும் டேனிக்கு, இவர்கள் வருகை மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதால் அவர்களை நான் சகித்துக் கொண்டு போய்விடுவேன்.

பத்தாதுக்கு இவரோட அக்கா குழந்தைக வேற.!

ஆனாலும், பொதுவாய் நான் டீச்சர் என்பதாலோ என்னவோ, அந்தக் குழந்தைகள் தவறு செய்யும் போது கத்தி விடுவதும் என் வழக்கமாய் இருந்து வந்தது.

அன்றும் இப்படித்தான்.

சாயங்காலம் வேலை முடித்து வீட்டுக்குள் நுழையும் போதே டீப்பாய் உடைந்திருப்பது கண்ணில் பட்டது.

அதற்கொரு பாட்டம் திட்டி முடித்து விட்டு...

ராத்திரி சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருந்த போது, டேனிக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவரோட அக்கா பையன் உப்பு வைத்திருந்த பீங்கான் கிண்ணத்தை டைனிங் டேபிளில் இருந்து கீழே தள்ளி உடைத்து விட... கோபத்துடன் அவனைத் திட்டிக் கொண்டே அதைப் பூராவும் சுத்தம் செய்து முடித்தேன்.

அடுத்த சில நிமிடத்தில் அவரோட அக்கா பெண் சட்னியைக் கீழே சாய்த்துவிட, அவர் 'திட்டாதே திட்டாதே...' என்று கண்ணைக் காட்டுவதையும் பொருட்படுத்தாமல், எனக்கு வந்த கோபத்தில் கன்னாபின்னாவென்று அந்தக் குழந்தைகளைத் திட்டிவிட்டு, அடுத்த சட்னியை தயார் செய்ய சமையல் அறையில் நுழைந்தேன்.

கூடவே அந்தக் குழந்தைகளும் நான் திட்டுவதை பொருட்படுத்தாமல் எனக்கு உதவ ஓடிவர... அதை கவனிக்காத மாதிரி காட்டிக் கொண்டு, கோபத்துடன் வேகமாய் எடுத்த எண்ணெய் பாட்டில் கை வழுக்கி தரையில் சிலீரென்ற சத்ததுடன் விழுந்து உடைந்தது.

அந்தக் குழந்தகள் ரெண்டும் அதைப் பார்த்து அதிர்ச்சியுடன் விலகி நிற்க, இத்தனை நேரம் திட்டிய குழந்தைகள் முன்னால் இப்போது தவறு செய்த குற்ற உணர்வுடன் நான் நிற்க... டைனிங் ஹாலில் அவர் டேனியிடம் சொல்வது கேட்டது.

"ஐயையோ தொலைஞ்சாய்ங்க... இப்ப யாரு மாட்டினா தெரியலையே.!".

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த டேனி சொன்னான்.

"இப்ப... இதை உடைச்சது அவங்க ரெண்டு பேருமே இல்ல.! அம்மா...!".

இவன் எப்படி டேனி அங்க உட்கார்ந்த இடத்திலிருந்தே இங்கே நடப்பதை  சொல்கிறான் என்ற ஆச்சர்யம் மனதில் ஓடுவதற்குள், அவர் டேனியிடம் கேட்டார்.

"அதெப்படிடா... அம்மா உடைச்சாங்கனு சொல்ற.?".

அவர் கேட்டதும் டேனி அமைதியாய் தெளிவாய் பதில் சொன்னான்.

"இவ்வளவு நேரமாகியும் அம்மா யாரையுமே திட்டலியே.!".
.
.
.



Friday, January 25, 2013

தில்லுதுரயின் ட்ரீம் ஜாப்




ட்ரீம் ஜாப் கெடைச்ச பின்னாலும் ஒரு மனுஷனுக்கு வேலை பிடிக்காமப் போகுமா..?

தில்லுதுரக்கு பிடிக்கவில்லை.

என்ன கதைனு கேளுங்க...

அது தில்லுதுர படித்து முடித்து வேலை தேடித்தேடி அலுத்துப் போயிருந்த காலம்.

வேலை கிடைக்காமல் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த போது, நண்பன் ராஜா சொன்னான்.

"சுந்தராபுரத்துல இருக்கற சொல்கேட்ட கணபதி கிட்ட வேண்டிக்கடா தில்லு. நம்ம சொன்னத கேக்கற  கணபதியாம்...கேட்டதெல்லாம் கொடுக்கறாராம்.!".

வேலை கிடைக்குமென்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயாராயிருந்த தில்லுதுர அன்று மாலையே அந்தக் கோவிலுக்குப் போனான்.

வேண்டுவதுதான் வேண்டுகிறோம்.... கொஞ்சம் நல்லாவே வேண்டிக்கலாம் என்று சொல்கேட்ட கணபதியிடம் கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே வேண்டிக் கொண்டான்.

"கடவுளே... என் பை எப்பவும் பணமா நெரஞ்சிருக்கற மாதிரி ஒரு வேலை; எனக்குனு ஒரு பெரிய வண்டி; அதுல எப்பவும் என்னைச் சுத்தி ஏகப்பட்ட பொண்ணுக... இது மட்டும் இந்த ஒரு மாசத்துக்குள்ள நடக்கற மாதிரி அருள்புரியப்பா ஆண்டவா...!".

தில்லுதுர வேண்டிய சமயத்தில் அந்தக் கோவில் மணியும் அடிக்க மஹா சந்தோஷத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த மாதம் அவன் கேட்ட மாதிரியே ஒரு வேலைகிடைத்து விட்டது.

ஆனாலும்... தில்லுதுர இப்போதும் கடுப்புடன் தான் வேலைக்குப் போகிறான்.

ஏனென்றால்..... தில்லுதுர இப்ப ஒரு லேடீஸ் பஸ் கண்டக்டர்.!
.
.
.







Monday, January 7, 2013

கிருஷ்ண சபாவில் டேனி


சனிக்கிழமை மாலை.

டேனி காலையிலிருந்து  சும்மா டிவி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே என்று யோசித்துக் கொண்டிருந்த போது எதிர் வீட்டில் அந்தத் தகவலைச் சொன்னார்கள்.

ரெண்டு தெரு தள்ளி கிருஷ்ண சபாவில் பாகவத வகுப்புகள் எடுப்பதாகவும் இன்று ஏதோ பாடகர் வந்திருப்பதால் இன்று பேச்சும் பாட்டுமாய் அட்டகாசமாய் இருக்கும் என்றும் சொல்ல....

வெட்டியாய் டிவி பார்ப்பதற்கு இது உபயோகமாய் இருக்குமே என்று டேனியை அழைத்துக் கொண்டு அங்கே கிளம்பினேன்.

டேனி இதுவரை மேடையில் பாட்டுகள் பாடி பார்த்ததில்லை என்பதால், வரும் வழி பூராவும் எப்படி டிவில வருவது போல் ஆடிக் கொண்டே பாடுவார்களா, யாரு டேன்ஸ் ஆடுவார்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வந்தான்.

வந்த இடத்தில் முதல் வரிசையிலேயே இடம் கிடைக்க ஆர்வத்துடன் அமர்ந்த டேனி, பிரசங்கர் பேசப் பேச டென்ஷனாகிப் போனான்.

பிரசங்கர் பாட்டுக்கு முன்னர் கண்ணன் பிறந்தது வளர்ந்தது லீலைகள் எல்லாம் பெரியவர்களுக்கு போல கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலும் சொல்லிக்கொண்டே போக... அசுவாரஸ்யத்துடன் நெளிந்து கொண்டிருந்த டேனி, அவர் பாட ஆரம்பித்ததும் உற்சாகமாகிப் போனான்.

கண்ணன் பாடல்கள் எப்போதும் போல தனி அழகுடன் ஜொலிக்க, பிரசங்கரும் அதை உற்சாகமாய் பாட....  வந்திருந்த குழந்தைகள் எல்லாம் சந்தோஷத்துடன் கூடவே சேர்ந்து பாட... டேனியும் அவர்களுடன் ஐக்கியமாகிப் போனான்.

கிடத்தட்ட ரெண்டு மணிநேரம்... போனதே தெரியவில்லை.

எல்லாம் முடிந்து வீடு திரும்பும் வழியிலும்கூட டேனி உற்சாகத்துடன், "ராதே ஷ்யாம்... ராதே ஷ்யாம்..." என்று பாடிக் கொண்டே வர, அவனை நல்ல இடத்திற்கு சந்தோஷத்துடன் கேட்டேன்.

"என்ன டேனி... அந்த அங்கிள் பாடின பாட்டெல்லாம் பிடிச்சிருந்ததா.?".

சந்தோஷமாய் பாடிக் கொண்டே வந்த டேனி...  இப்போது அதை நிறுத்திவிட்டு லேசான அலுப்புடன் சொன்னான்.

"பாட்டெல்லாம் நல்லாத்தாம்மா இருந்துச்சு... ஆனா, அட்வர்டைஸ்மென்ட்தான் ரொம்ப நீளம்.!".
.
.
.

Wednesday, December 19, 2012

தில்லுதுரயும் ஒரு தில்லாலங்கிடியும்

தில்லுதுர படித்து முடித்து வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் அது.

அன்று... இரவு உணவுக்காக வழக்கமாய் சாப்பிடும் மெஸ்ஸுக்கு போய்க் கொண்டிருக்கையில் சாலையில் அந்தப் பெரியவர் வழி மறித்தார்.

"தம்பி... நானும் என் மனைவியும் ஒரு வேலையா ஒருத்தரை பார்க்க கோயமுத்தூர் வந்தோம். வந்த எடத்துல பணத்த தொலைச்சிட்டோம். பாக்க வந்தவர் வேற எதோ வேலையா வெளியூர் போயிட்டாரு. நாளைக்கு காலைலதான் தஞ்சாவூர் போக முடியும்...!"

பெரியவர் சொல்லிக் கொண்டே போக, தில்லுதுர சிரித்தார்.

"இப்ப என்ன ஊருக்குப் போக பணம் வேணும்னு கேக்கப் போறியா பெருசு.?".

தில்லுதுர கேள்வியில் தெரிந்த நையாண்டியை புரிந்து கொண்ட பெரியவர் வாடிய முகத்துடன் சொன்னார்.

"ஊருக்குப் போக பணம் இருக்கு தம்பி. சாப்பிடத்தான்... சாப்பாட்டுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா போதும் தம்பி. ரெண்டு பேரும் சுகர் பேஷண்ட் வேற. மதியத்துலருந்து சாப்பிடாததால அதோ அங்க என் மனைவி ரொம்ப டயர்டாகி படுத்துட்டா.!" என்று அந்தக் கடைப் பக்கமாய் இருட்டைக் காட்டினார்.

எத்தனை ஆட்களை இந்த மாதிரிப் பாத்து இரக்கப்பட்டு ஏமாந்தாச்சு. இதுபோல அழுது புலம்பி காசை வாங்கிக் கொண்டு போன நிறையப் ஆட்களை அடுத்த அரை மணியில் டாஸ்மாக்கில் பார்த்ததும் நடந்திருக்கிறது.

தில்லுதுர இந்தமுறை ஏமாறத் தயாராயில்லை.

அவர் அந்தப் பெரியவரை பார்த்து சொன்னார்.

"இங்க பாரு பெருசு... காசெல்லாம் தரமுடியாது. உனக்கு சாப்பாடுதான வேணும். நான் இப்ப சாப்பிடத்தான் போறேன். கூட வந்து வேணுங்கறதச் சாப்பிடு. மனைவிக்கும் வேண்டியதை வாங்கிக்க. ஓகேன்னா இப்பவே எங்கூட வா... என்ன.?".

தில்லுதுர கேட்டதும் பெரியவர் முகம் மலர்ந்து போனார்.

"ரொம்ப சந்தோஷம் தம்பி. இருங்க அவகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்.!" என்று அந்த இருட்டுக்குள் ஓடிவிட்டு வந்தவர் தில்லுதுர பின்னாலேயே மெஸ்ஸுக்கு வந்துவிட்டார்.

பெரியவருக்கு உண்மையிலேயே பசிதான் போல. பார்க்க நல்ல குடும்பக்காரர் போலத்தான் தெரிந்தார். தஞ்சாவூர், மழை, விவசாயம், கோயில் என ஏதேதோ பேசிக் கொண்டே சாப்பிட்டவர், மறக்காமல் மனைவிக்கும் பார்சல் வாங்கிக் கொண்டார்.

சாப்பிட்டு முடித்து கல்லாவில் இருந்த நோட்டை வாங்கி தில்லுதுர சாப்பாட்டு கணக்கை எழுதுவதற்குள், "நான் கிளம்பட்டா தம்பி.!" என்று கேட்டபடியே கடை முதலாளிக்கும் ஒரு வணக்கம் போட்டுவிட்டு இருளில் இறங்கி மறைந்தே போனார்.

தில்லுதுரக்கும் ஒருவருக்கு உதவியதை விட அடுத்தவரிடம் இந்தமுறை ஏமாறவில்லை என்ற கர்வம் தான் அதிகமாய் இருந்தது.

காலை டிஃபன் சாப்பிட மெஸ்ஸுக்கு வந்த தில்லுதுர, லேட்டாகிவிட்ட அவசரத்தில் வேகவேகமாய் சாப்பிட்டு முடித்து கணக்கை எழுத நோட்டை வாங்கிப் பார்த்தவர் கேட்டார்.

"என்ன முதலாளி... இப்பத்தான் சாப்பிடவே வர்றேன். அதுக்கு முன்னயே ரெண்டு டிஃபண் கணக்கு எழுதிருக்கே.!".

கேட்ட தில்லுதுரயைப் பார்த்து முதலாளி சொன்னார்.
"ஆமா தில்லு.. நீ இப்பத்தான் வர்ற. ஆனா, காலைல ஏழரைக்கே நேத்து உங்கூட வந்த உன் அப்பா வந்து அவருக்கும் அம்மாவுக்கும் டிஃபன் பார்சல் வாங்கிட்டுப் போனாரே.!".
.
.
.

Thursday, December 13, 2012

டேனியும் ஆதாமின்ட இடுப்பு எலும்பும்

டேனியின் யூகேஜி முடிந்து முதல் வகுப்புக்கு முந்தைய கோடை விடுமுறை.

எந்நேரமும் டிவியும் ரிமோட்டுமாக இருக்கிறானே என்ற கவலை லேசாய் எழ ஆரம்பித்த நேரம்.

பக்கத்து வீட்டு பொடியன் ஜான்சன் வாசலில் வந்து நின்றான்.

"ஆன்ட்டி... இன்னிக்கு அடுத்ததெரு சர்ச்ல பைபிள் க்ளாஸ் ஸ்டார்ட் பண்றாங்க. டெய்லி ஒன் அவர். அம்மா என்னை போகச் சொல்றாங்க.
நான் டேனியையும் கூட்டிட்டுப் போகட்டா.?".

'சும்மா டிவி பாக்கறதுக்கு இது நல்ல விஷயந்தானே.?' -என்று யோசித்தபடியே திரும்புவதற்குள் டேனி ஜான்சனுடன் கிளம்பிவிட்டான்.

பைபிள் க்ளாஸ் முடிந்து வந்தவன் நேராய் அவன் அப்பாவிடம் ஓடினான்.
"அப்பா... இன்னிக்கு பைபிள் க்ளாஸ்ல அந்த அங்கிள் சொன்னாரு. கடவுள் ஆதாமோட இடுப்புல இருந்து ஒரு எலும்ப எடுத்துத்தான் ஏவாளை படைச்சாராம். அவங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் ஆச்சாம். நெசம்மாப்பா.?".

அவன் கேட்ட ஆர்வத்தைப் பார்த்த படியே அவன் அப்பா அவனிடம் சொன்னார்.

"ஆமாம்... ஏன் கேக்கற.?".

டேனி இன்னும் அந்த ஆச்சர்யம் மாறாமல் கேட்டான்.

"டிவில பாக்கறனே.. யாருக்காவது காயம் பட்டாலே எத்தனை ரத்தம் வருது. இந்த கடவுள் அப்படி இடுப்பு எலும்ப எடுத்தப்ப ஆதாமுக்கு பயங்கரமா காயமாகி ரொம்ப ரத்தம் வந்திருக்கும் தானேப்பா.?".

அவன் அப்பா சிரித்தபடி அவனுக்கு புரிவதற்காக சொன்னார்.

"அதெல்லாம் மனுசங்க செஞ்சாத்தான் பயங்கர ரத்தமெல்லாம் வரும். கடவுள் ஆதாமோட எலும்ப எடுத்தப்ப அவனுக்கு லேசா ஒரு வலி மட்டும்தான் வந்துச்சாம். அப்புறம்தான் அதை ஏவாளா மாத்தி கடவுள் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாராம்.!".

அப்பா சொன்னதும் சந்தேகம் தெளிந்து ஜான்சனுடன் வெளியெஎ விளையாட ஓடியவன் கொஞ்ச நேரத்தில் எங்கோ விழுந்து எந்தரித்த அழுக்கோடு வந்தவன் அவன் அப்பாவிடம் ஓடினான்.

"அப்பா எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்கப் போகுதுனு நெனைக்கறேன்.!".

சொன்ன டேனியிடம்,"ஏன் அப்படி சொல்ற.?" என்று அவன் அப்பா கேட்க... டேனி சொன்னான்.

"ஏன்னா, எனக்கு இப்ப இடுப்பு வலிக்குதே.!".
.
.
.