Thursday, December 13, 2012

டேனியும் ஆதாமின்ட இடுப்பு எலும்பும்

டேனியின் யூகேஜி முடிந்து முதல் வகுப்புக்கு முந்தைய கோடை விடுமுறை.

எந்நேரமும் டிவியும் ரிமோட்டுமாக இருக்கிறானே என்ற கவலை லேசாய் எழ ஆரம்பித்த நேரம்.

பக்கத்து வீட்டு பொடியன் ஜான்சன் வாசலில் வந்து நின்றான்.

"ஆன்ட்டி... இன்னிக்கு அடுத்ததெரு சர்ச்ல பைபிள் க்ளாஸ் ஸ்டார்ட் பண்றாங்க. டெய்லி ஒன் அவர். அம்மா என்னை போகச் சொல்றாங்க.
நான் டேனியையும் கூட்டிட்டுப் போகட்டா.?".

'சும்மா டிவி பாக்கறதுக்கு இது நல்ல விஷயந்தானே.?' -என்று யோசித்தபடியே திரும்புவதற்குள் டேனி ஜான்சனுடன் கிளம்பிவிட்டான்.

பைபிள் க்ளாஸ் முடிந்து வந்தவன் நேராய் அவன் அப்பாவிடம் ஓடினான்.
"அப்பா... இன்னிக்கு பைபிள் க்ளாஸ்ல அந்த அங்கிள் சொன்னாரு. கடவுள் ஆதாமோட இடுப்புல இருந்து ஒரு எலும்ப எடுத்துத்தான் ஏவாளை படைச்சாராம். அவங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் ஆச்சாம். நெசம்மாப்பா.?".

அவன் கேட்ட ஆர்வத்தைப் பார்த்த படியே அவன் அப்பா அவனிடம் சொன்னார்.

"ஆமாம்... ஏன் கேக்கற.?".

டேனி இன்னும் அந்த ஆச்சர்யம் மாறாமல் கேட்டான்.

"டிவில பாக்கறனே.. யாருக்காவது காயம் பட்டாலே எத்தனை ரத்தம் வருது. இந்த கடவுள் அப்படி இடுப்பு எலும்ப எடுத்தப்ப ஆதாமுக்கு பயங்கரமா காயமாகி ரொம்ப ரத்தம் வந்திருக்கும் தானேப்பா.?".

அவன் அப்பா சிரித்தபடி அவனுக்கு புரிவதற்காக சொன்னார்.

"அதெல்லாம் மனுசங்க செஞ்சாத்தான் பயங்கர ரத்தமெல்லாம் வரும். கடவுள் ஆதாமோட எலும்ப எடுத்தப்ப அவனுக்கு லேசா ஒரு வலி மட்டும்தான் வந்துச்சாம். அப்புறம்தான் அதை ஏவாளா மாத்தி கடவுள் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாராம்.!".

அப்பா சொன்னதும் சந்தேகம் தெளிந்து ஜான்சனுடன் வெளியெஎ விளையாட ஓடியவன் கொஞ்ச நேரத்தில் எங்கோ விழுந்து எந்தரித்த அழுக்கோடு வந்தவன் அவன் அப்பாவிடம் ஓடினான்.

"அப்பா எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்கப் போகுதுனு நெனைக்கறேன்.!".

சொன்ன டேனியிடம்,"ஏன் அப்படி சொல்ற.?" என்று அவன் அப்பா கேட்க... டேனி சொன்னான்.

"ஏன்னா, எனக்கு இப்ப இடுப்பு வலிக்குதே.!".
.
.
.