Wednesday, December 19, 2012

தில்லுதுரயும் ஒரு தில்லாலங்கிடியும்

தில்லுதுர படித்து முடித்து வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் அது.

அன்று... இரவு உணவுக்காக வழக்கமாய் சாப்பிடும் மெஸ்ஸுக்கு போய்க் கொண்டிருக்கையில் சாலையில் அந்தப் பெரியவர் வழி மறித்தார்.

"தம்பி... நானும் என் மனைவியும் ஒரு வேலையா ஒருத்தரை பார்க்க கோயமுத்தூர் வந்தோம். வந்த எடத்துல பணத்த தொலைச்சிட்டோம். பாக்க வந்தவர் வேற எதோ வேலையா வெளியூர் போயிட்டாரு. நாளைக்கு காலைலதான் தஞ்சாவூர் போக முடியும்...!"

பெரியவர் சொல்லிக் கொண்டே போக, தில்லுதுர சிரித்தார்.

"இப்ப என்ன ஊருக்குப் போக பணம் வேணும்னு கேக்கப் போறியா பெருசு.?".

தில்லுதுர கேள்வியில் தெரிந்த நையாண்டியை புரிந்து கொண்ட பெரியவர் வாடிய முகத்துடன் சொன்னார்.

"ஊருக்குப் போக பணம் இருக்கு தம்பி. சாப்பிடத்தான்... சாப்பாட்டுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா போதும் தம்பி. ரெண்டு பேரும் சுகர் பேஷண்ட் வேற. மதியத்துலருந்து சாப்பிடாததால அதோ அங்க என் மனைவி ரொம்ப டயர்டாகி படுத்துட்டா.!" என்று அந்தக் கடைப் பக்கமாய் இருட்டைக் காட்டினார்.

எத்தனை ஆட்களை இந்த மாதிரிப் பாத்து இரக்கப்பட்டு ஏமாந்தாச்சு. இதுபோல அழுது புலம்பி காசை வாங்கிக் கொண்டு போன நிறையப் ஆட்களை அடுத்த அரை மணியில் டாஸ்மாக்கில் பார்த்ததும் நடந்திருக்கிறது.

தில்லுதுர இந்தமுறை ஏமாறத் தயாராயில்லை.

அவர் அந்தப் பெரியவரை பார்த்து சொன்னார்.

"இங்க பாரு பெருசு... காசெல்லாம் தரமுடியாது. உனக்கு சாப்பாடுதான வேணும். நான் இப்ப சாப்பிடத்தான் போறேன். கூட வந்து வேணுங்கறதச் சாப்பிடு. மனைவிக்கும் வேண்டியதை வாங்கிக்க. ஓகேன்னா இப்பவே எங்கூட வா... என்ன.?".

தில்லுதுர கேட்டதும் பெரியவர் முகம் மலர்ந்து போனார்.

"ரொம்ப சந்தோஷம் தம்பி. இருங்க அவகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்.!" என்று அந்த இருட்டுக்குள் ஓடிவிட்டு வந்தவர் தில்லுதுர பின்னாலேயே மெஸ்ஸுக்கு வந்துவிட்டார்.

பெரியவருக்கு உண்மையிலேயே பசிதான் போல. பார்க்க நல்ல குடும்பக்காரர் போலத்தான் தெரிந்தார். தஞ்சாவூர், மழை, விவசாயம், கோயில் என ஏதேதோ பேசிக் கொண்டே சாப்பிட்டவர், மறக்காமல் மனைவிக்கும் பார்சல் வாங்கிக் கொண்டார்.

சாப்பிட்டு முடித்து கல்லாவில் இருந்த நோட்டை வாங்கி தில்லுதுர சாப்பாட்டு கணக்கை எழுதுவதற்குள், "நான் கிளம்பட்டா தம்பி.!" என்று கேட்டபடியே கடை முதலாளிக்கும் ஒரு வணக்கம் போட்டுவிட்டு இருளில் இறங்கி மறைந்தே போனார்.

தில்லுதுரக்கும் ஒருவருக்கு உதவியதை விட அடுத்தவரிடம் இந்தமுறை ஏமாறவில்லை என்ற கர்வம் தான் அதிகமாய் இருந்தது.

காலை டிஃபன் சாப்பிட மெஸ்ஸுக்கு வந்த தில்லுதுர, லேட்டாகிவிட்ட அவசரத்தில் வேகவேகமாய் சாப்பிட்டு முடித்து கணக்கை எழுத நோட்டை வாங்கிப் பார்த்தவர் கேட்டார்.

"என்ன முதலாளி... இப்பத்தான் சாப்பிடவே வர்றேன். அதுக்கு முன்னயே ரெண்டு டிஃபண் கணக்கு எழுதிருக்கே.!".

கேட்ட தில்லுதுரயைப் பார்த்து முதலாளி சொன்னார்.
"ஆமா தில்லு.. நீ இப்பத்தான் வர்ற. ஆனா, காலைல ஏழரைக்கே நேத்து உங்கூட வந்த உன் அப்பா வந்து அவருக்கும் அம்மாவுக்கும் டிஃபன் பார்சல் வாங்கிட்டுப் போனாரே.!".
.
.
.