Tuesday, September 25, 2012

தில்லுதுரயும் திடுக் பாட்டியும்


நண்பர் நடத்தும் முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த டூர்  பஸ்ஸுக்கான ட்ரைவருக்கு அன்று ஏனோ வரமுடியவில்லை.

'இல்லத்தின் முதியவர்கள் ஏமாந்துவிடக்கூடாதே..' என்று அந்த நண்பர் அன்று தில்லுதுரயின் உதவியைக் கேட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் தில்லுதுரயும் சந்தோஷமாய் அந்த பஸ் டிரைவர் வேலையை ஒப்புக் கொண்டார்.

காலை ஆறுமணிக்கு பஸ் கிளம்பியதிலிருந்தே எல்லா முதியவர்களும் தங்கள் வயதை மறந்து ஆட்டம் பாட்டம், கேலி, கிண்டல், பாடல்கள் என அட்டாகசம் செய்தபடி குழந்தைகள் போல குதூகலமாய் வந்து கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு நேரம் முடியும்..?

எட்டு மணிக்கு எல்லாம் அடங்கி, ஆளாளுக்கு அவரவர் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை பகிர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.
ஒரு பத்து பதினைந்து நிமிடம் இருக்கும்.

வயதான பாட்டி ஒன்று வந்து பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருந்த தில்லுதுர தோளைத் தட்டியது.

திரும்பிய தில்லுதுரயைப் பார்த்து தனது பொக்கை வாயை காட்டி சிரித்தபடி, "இந்தா தம்பி.... இதைக் கொஞ்சம் சாப்பிடு..!" என்று கொஞ்சம் உடைந்த முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை இருந்த ஒரு காகிதப் பொட்டலத்தை நீட்டியது.

தில்லுதுரயும் சிரித்தபடியே வாங்கி சாப்பிட்டபடி வண்டியை தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தார்.

எல்லாம் காலியாகி இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும்.

அதே பாட்டி அதேபோல் தில்லுதுர தோளைத் தட்டியது.

"இன்னும் கொஞ்சம் சாப்பிடறயா தம்பி..?" என்று அதேபோல் மறுபடி ஒரு பொட்டலத்தை நீட்டியது.

அதே உடைந்த முந்திரி, பாதாம், பிஸ்தா வஸ்துக்கள்.

தில்லுதுர சிரித்தபடி மறுத்தார்.

"போதும் பாட்டி.. நீங்களே சாப்பிடுங்க..!".

பாட்டி புன்னகைத்தபடி பதில் சொன்னது.

"இல்ல தம்பி... எங்க யாருக்கும் பல்லு கிடையாது. அதனால இதை எங்களால சாப்பிட முடியாது.! நீ சாப்பிடலைனா இதை கீழதான் போடணும்..!".

பாட்டி சொன்னதும் ஆச்சர்யத்துடன் திரும்பிய தில்லுதுர கேட்டார்.

"சாப்பிட முடியாதுன்னா... அப்புறம் எதுக்கு இதையெல்லாம் வாங்கினீங்க..?".

தில்லுதுர கேட்டதும் அந்தப் பாட்டி அப்போதும் புன்னகை மாறாமல் பதில் சொன்னது.

"இதை யாரு வாங்கினா.? நாங்க வாங்கின சாக்லெட் பாருக்குள்ள இது இருந்தது. உண்மைல இதைச் சுத்தி இருக்கற சாக்லெட் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அதை நாங்கெல்லாம் சப்பிச் சாப்பிட்டுட்டு இதை வேஸ்ட்டா எறிய வேண்டாமேன்னு உனக்கு குடுத்தேன்...!" என்றார்.
.
.
.