Wednesday, July 29, 2015

தில்லுதுரயும் புள்ளிராஜாவும்

தில்லுதுரயும் அவர் நண்பர் புள்ளிராஜாவும் அன்று சனிக்கிழமை வீக்கெண்டை டாஸ்மாக்கில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டில் மனைவி ஊருக்குப் போயிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாய் நேரமும் சரக்கும் அதிகமாகிக் கொண்டே போனது இருவருக்குமே தெரியவில்லை.

காருக்குத் திரும்பும்போது இருவருமே நிதானத்தில் இல்லை என்பது கால்களால் எட்டு போட்டபடி நடந்தபோதே தெரிந்தது.

காரும் டாஸ்மாக் இவர்களுடன் பாரில் குடித்து விட்டு வந்தது போலவே, சாலையில் இடதும் வலதுமாய் வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது.

நகரத்தை விட்டு வெளியேறியதும்… ஆளில்லா சாலையில் கார் வேகமெடுக்கவும் ஆரம்பித்துவிட்டது.

பத்து நிமிடம் இருக்கும்.

திடீரென காரின் முன் தெரிந்த மரத்தைப் பார்த்ததும் பதறிப்போன தில்லுதுர புள்ளிராஜாவைப் பார்த்துக் கத்தினார்.

“டேய் புள்ளி… மரம்டா.! ப்ரேக்கைப் போடு… ப்ரேக்கைப் போடு.!”.

தில்லுதுர கத்தினாரே தவிர, காரின் வேகம் சற்றும் குறையவில்லை.

“டேய் புள்ளி… மரம்டா.!” என்று தில்லுதுர பயந்து போய் கண்களை மூடிக் கத்தியபடி, “வண்டிய நிறுத்துடா” என்று அலறிய அதே விநாடி கார் அந்த மரத்தின் மீது மோத... தில்லுதுர பயத்தில் மயக்கமடைந்தே விட்டார்.

தில்லுதுர மறுபடி கண்களை விழித்தபோதுதான் தெரிந்தது… தான் ஒரு ஹாஸ்பிடலில் இருப்பது.

அடி பலமாய் இல்லையென்றாலும், வலி பலமாய் இருக்க கண்களைத் திருப்பியவர் பக்கத்தில் பேந்தப் பேந்த விழித்தபடி இருந்த புள்ளிராஜாவைப் பார்த்ததும் கோபத்துடன் கேட்டார்.

“ஏண்டா… எத்தன வாட்டி காரை நிறுத்தச் சொல்லிக் கத்தினேன். ஏன் நீ காரை நிறுத்தவேயில்ல.?”.

கோபத்துடன் பேசிய தில்லுதுரயைப் பரிதாபமாய்ப் பார்த்த புள்ளிராஜா மெலிதான கடுப்போடு சொன்னார்.


“ஏன்னா… காரை நீ ஓட்டிட்டு இருந்த.!”
.
.
.

Saturday, May 23, 2015

வட போச்சே…

அன்று டேனியின் அப்பாவுடைய மேனேஜர் குடும்பத்துடன் எங்கள் வீட்டு விருந்துக்கு வந்திருந்தார்.

காலை பத்தரை மணிக்கு வந்தவுடனேயே அவர்களுக்கு வடையும் காப்பியும் கொடுத்து வரவேற்றாகி விட்டது.

அவரும் மேனேஜரும் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்க, டேனியும் மேனேஜர் குழந்தையும் விளையாட வாசலுக்கு ஓடியிருந்தனர்.

மேனேஜரின் மனைவியும் பழகுவதற்கு எளியவராய், என்னுடன் பேசிக் கொண்டே எனக்கு உதவுவதற்காய் கிச்சனுக்குள் வந்துவிட்டார்.

மதிய விருந்துக்கு எல்லாவற்றையும் தயார் செய்து முடித்து டைனிங் டேபிளில் உட்கார்ந்த நேரம்.

சமையல் நல்ல விதமாய் அமைந்திருக்கவே, எல்லோரும் திருப்தியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சாப்பாடு… சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம் எல்லாம் முடிந்து தயிருக்குப் போயிருந்தபோதுதான் திடீரென அந்த மேனேஜர் கேட்டார்.

”இந்த தயிர் சாதத்துக்கு ஒரு வடை இருந்தா நல்லாருந்திருக்குமே.!”

சொன்னதும் பக்கென்று ஆகி விட்டது எனக்கு.

வடை எல்லாம் காலையிலேயே முடிந்து போய், மிச்சம் இருந்த ஒன்றிரண்டையும் டேனியும் அவர் குழந்தையும் சாப்பிட்டு தீர்த்து விட்டிருந்த படியால், என்ன பதில் சொல்வது என்று நான் விழிக்க ஆரம்பிக்க டேனி, “இருங்க அங்கிள்...!” டைனிங் டேபிளை விட்டு இறங்கி ஓடினான்.

வரும்போது அவன் கையில் ஒரு வடையிருக்க, அதை நேராய் ஓடி வந்து, “இந்தாங்க அங்கிள்.!” என்று அவனே மேனேஜரிடம் கொடுத்ததும் அவர் மிகுந்த சந்தோஷமாகி விட்டார்.

”குட் பாய்..!” என்று அவன் கன்னத்தை தட்டியபடி தயிர் சாதத்துடன் வடையைக் கடித்து சாப்பிட ஆரம்பிக்க…

அவர் மனைவி ஆர்வத்துடன் கேட்டார்.

“வடை எல்லாம் அப்பவே தீர்ந்துடுச்சேடா டேனி... அப்புறம் எங்கருந்து அங்கிளுக்கு வடையைக் கொண்டு வந்த.?”

அவர் கேட்டதும் டேனி பெருமையுடன் சொன்னான்.


”காலைல அம்மா வடை செஞ்ச ஒடனேயே… அப்பா வீட்ல இருக்கற எலியப் புடிக்க ஒரு வடைய எலிப்பொறில மாட்டி வச்சிருந்தாங்க. அதை இதுவரைக்கும் எலி சாப்பிடல. அதான் அங்கிளாவது சாப்பிடட்டுமேனு கொண்டு வந்து கொடுத்தேன்.!”
.
.
.

Wednesday, May 14, 2014

தப்புத் தப்பாய் ஒரு தப்பு

டேனியின் பள்ளியில் விடுமுறை விட்டு பதினைந்து நாட்களாகிவிட்டது.

இந்த விடுமுறை நாட்களில் பாடம் மறந்துவிடாமல் இருக்க, சின்னச் சின்னக் கணக்குகளும்,  மூன்றெழுத்து நான்கெழுத்து தமிழ் வார்த்தைகளும் எழுதப் படிக்கப் பழக்கச் சொல்லியிருந்தார்கள்.

அந்த முறையில் இன்று தமிழைக் கையில் எடுத்திருந்தேன்.

’படம், பாடம், உப்பு, தப்பு’ என மூன்றெழுத்து தமிழ் வார்த்தைகளை எழுதப் பழக்குவது என்ற முடிவுடன் உட்கார்ந்தாகிவிட்டது.

விடுமுறையிலும் எழுதப் படிக்கச் சொல்கிறார்களே என்ற கடுப்புடன் அமர்ந்த டேனி, தமிழ் என்றதும் கடுப்பின் உச்சத்துக்கே போய்விட்டான்.

படிப்பது ஆங்கில மீடியம் என்பதால் தமிழ் சரியாய் வராது என்பதும், தமிழ் என்றால் ஹோம்வொர்க் முடிய நேரம் அதிகமாகி விளையாடச் செல்வது தாமதமாகும் என்பதும்தான் காரணம்.

முதலில் படம், அடுத்து பாடம் என்னும் வார்த்தைகளை தப்பும் தவறுமாய் எழுதி என்னைக் கொஞ்ச நேரம் வெறுப்பேற்றிய பிறகு சரியாய் எழுதியவன், பிறகு உப்பு என்னும் வார்த்தையை தவறின்றி எழுதிவிட்டான்.

அடுத்த வார்த்தை ”தப்பு”.

டேனியிடம் திரும்பி, “நாலாவதா எழுத வேண்டிய வார்த்தை ’தப்பு”. எங்க எழுது பார்க்கலாம்... தப்பு.!”.

சொன்னதும் டேனி கர்ம சிரத்தையாய் குனிந்து தனது ஹோம்வொர்க் நோட்டில் எழுதினான்.

“ட... ப்... பு..!”

எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தவன், “கரெக்ட்டானு பாரும்மா.!” என்று நோட்டை என்னிடம் நீட்டினான்.

பார்த்ததும் லேசான கோபத்துடன், அவனுக்குப் புரியட்டும் என்பதற்காக சற்று அழுத்தமாய்ச் சொன்னேன்.

“டேனி... நீ எழுதியிருக்கிறது தப்புடா.!”.

நான் சொன்னதும் தனது ஹோம்வொர்க் நோட்டைத் திருப்பி ஒருமுறை பார்த்த டேனி, எந்தச் சலனமும் இல்லாமல் என்னைப் பார்த்துச் சொன்னான்.

“ஆமா... அதைத்தான நீ எழுதச் சொன்ன.!”.
.
.
.



Tuesday, April 22, 2014

தில்லுதுரயும் டாஸ்மாக் லீவும்

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மூன்றுநாள் லீவ் என்றதும் தில்லுதுர அலர்ட் ஆகிவிட்டார்.

மூன்று நாளும் வீட்டில் சரக்கை வாங்கி வைத்துக் குடிக்க மனைவி விட மாட்டாள் என்பதால், வரும் போதே நன்றாக சுதி ஏத்திக் கொண்டுதான் வந்தார்.

வீட்டுக்கு வந்து மனைவியின் திட்டு எல்லாம் வாங்கி முடித்து விட்டு, சாப்பிட்டு படுக்கும் போதுதான் மனைவி சொன்னாள்...

“ஏங்க... புதுசா வந்ததால இங்க நமக்கு ஓட்டு இல்ல. என் ஓட்டு இன்னும் அம்மா வீட்டு அட்ரஸ்ல தான இருக்கு. நான் வேணும்னா நாளைக்கு காலைல போய்ட்டு எலெக்சன் முடிஞ்சு வெள்ளிக் கிழமை வரட்டுமா.!”.

கேட்டதுதான் தாமதம்.

மூன்று நாட்கள்...மனைவியும் இல்லாமல் டாஸ்மாக்கும் இல்லாமல்.

தில்லுதுர கண்கள் கலங்கி விட்டது.

குரல் போதையில் உளறலோடு சொன்னார்.

“மூணு நாள்... ஐயோ... நீ இல்லாம நான் எப்படி இருக்கப் போறேன்னு தெரியலையே தங்கம்...!”

தில்லுதுர புலம்ப ஆரம்பித்ததும் மனைவி சிரித்தபடி கேட்டாள்.

“இது யாரு பேசறது... நீங்க பேசறீங்களா இல்ல உள்ள போன சரக்கு பேசுதா.?”.

மனைவி கேட்டதும் அதே உளறலோடு பதில் சொன்னார்.

“ஏண்டி... நாந்தான் பேசறேன். ஆனா நான் பேசறது உங்கூட இல்ல... சரக்குகூட.!” என்றார்.
.
.
.



Wednesday, April 16, 2014

டேனியின் அழுகை

டேனி அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே சோகமாகவே இருந்தான்.

சாயங்காலம் சாப்பிடுவதற்கான நொறுக்குத் தீனிகளைக் கொடுத்து விட்டு, மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

”ஏன் டேனி... சோகமா இருக்க.?”

கேட்டதும் டேனி கவலையுடன் திரும்பி என்னைப் பார்த்தான்.

“நான் ரொம்பக் கருப்பா இருக்கனாம்மா.?”

நான் அவனைத் தேற்றும் விதமாய்ச் சொன்னேன்.

“இல்லியேடா... நீ நல்ல செகப்பு தான.!”

சொன்னதும் அவன் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“என் கண்ணு ரெண்டும் முட்டை முட்டையா பெருசா இருக்காம்மா.?”

இதென்னடா வம்பாப் போச்சு - என்று எண்ணியவாறே அவனுக்கு ஆறுதலாய் பதில் சொன்னேன்.

“இல்லியேடா... உன் கண்ணு ரெண்டும் ரொம்ப அழகா, பட்டு மாதிரி இருக்க வேண்டிய சைஸ்லதான இருக்கு.!”

டேனி இன்னும் திருப்தியாகாமல் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“நான்... குண்டா தொப்பையா சொட்டைத் தலையோட ஏதாவது இருக்கேன்னாம்மா.?”

என்னடா... புள்ள இன்னிக்கு தன் அழகு மேல இவ்வளவு வருத்தமா இருக்கானே என்று யோசித்த படியே சொன்னேன்.

“சேச்சே... யாருடா சொன்னா அப்படியெல்லாம். நீ சும்மா தங்கமாட்டம் அம்புட்டு அழகா இருக்க. உன்னை யாரு அப்பிடியெல்லாம் சொன்னா.?”

கேட்டதும் டேனி வருத்தத்துடன் சொன்னான்.

“அப்படியெல்லாம் யாரும் சொல்லலம்மா. ஆனா, எதிர் வீட்டு ஆன்ட்டி எப்பப் பாத்தாலும் என்னை ”டேனி... அவன் அப்பா மாதிரியே இருக்கான்”னு சொல்றாங்களே.!”.
.
.
.