Wednesday, December 15, 2010

ராசா மந்திரி

ஒரே ஒரு காட்டிலே, ஒரே ஒரே ஒரு கிணறாம்... அந்தக் கிணற்றுக்குள்ளே எக்கச்சக்கமான தவளைகளாம்.

தங்களுக்கு என ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுப்போம் என்று முடிவு செய்தனவாம் அந்தத் தவளைகள். அதே கிணற்றில் இருந்த ஓர் ஆமைக்கு பட்டம் சூட்டி கோஷம் போட்டனவாம் அந்த ஆமைகள். ஆமையோ, தவளைகளின் நன்மைக்காக உருப்படியாக எதுவும் செய்யாமல், சோம்பேறித்தனமாகவே இருக்க... கொஞ்ச நாளிலேயே சலித்துவிட்டதாம்.

"சுறுசுறுப்பான ஒரு ராஜாதான் வேண்டும்" என்று முடிவெடுத்து, ஒரு பச்சோந்தியைப் பதவியில் அமர்த்தினவாம். நிமிடத்துக்கு ஒரு வண்ணத்துக்கு மாறி, தவளைகளுக்கு நன்றாகவே பொழுதுபோக்கு காட்டிய பச்சோந்தி, அந்தத் தவளைகள் அசந்த நேரம் பார்த்து, அவற்றுக்கு இரையாக வேண்டிய பூச்சிகளை எல்லாம் தானே பிடித்து தின்ன ஆரம்பித்துவிட்டதாம். பட்டினியில் துடித்த பாவப்பட்ட தவளைகள், "பூச்சிக்கு ஆசைப்படாத பெரிய ஜீவராசியாகத் தேர்ந்தெடுத்து அதிகாரத்தை அவர் கையில் கொடுப்போம்" என்று வானத்தைப் பார்த்து பலமாக யோசித்தனவாம்.

அந்த நேரம் பார்த்து, ஜிவ்வென்று வந்து அங்கே இறங்கியதாம் ஒரு நாரை. "ஆஹா, இவர்தான் எத்தனை வெள்ளை! இவர் அலகுதான் எத்தனை உறுதி! சிறகுதான் எத்தனை அகலம்! தூய்மையும், பலமும்,அசாத்திய திறமையும் கொண்ட இவரை ராஜாவாக்கினால், நமக்கு விடிவுகாலம் வந்து விடும்!" என்று நம்பிக்கையோடு நாரையைத் தேர்ந்தெடுத்தன அந்தக் கிணற்றுத் தவளைகள்.

இந்த முறை அசாத்திய மாற்றம்! தவளைகளுக்குப் போட்டியாக பூச்சிகளை யாரும் தின்னவில்லை. அதேசமயம், நாளுக்கு நாள் தவளைகளின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்தன!

சும்மா கிடந்த ஆமை ராஜா, தங்கள் இரையைப் பிடுங்கித் தின்ற பச்சோந்தி ராஜா, தவளையே தின்கிற நாரை ராஜா... இவர்களுக்கு அடுத்தபடியாக எந்த புது ராஜாவைத் தேடுவது?" என்று மிச்சம் மீதியிருந்த தவளைகள் கவலையோடு கூடி உட்கார்ந்து, மறுபடி யோசிக்க ஆரம்பித்தனவாம்.

நீதி: கதரோ, கதிரோ, காவியோ... ராஜாக்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், தவளைகளின் தலைவிதி மட்டும் மாறுவதே இல்லை..!
.
.
.
நன்றி: விகடன்

Tuesday, December 14, 2010

லட்சம் கோடி

தேசமே திரும்பிப் பார்த்த, அந்த மாபெரும் ஊழலின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

மந்திரியை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்த அரசு தரப்பு வக்கீல் காட்டமாய் அவரிடம் கேட்டார்.

"இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய, நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா இல்லையா..?".

வக்கீல் கேட்டதும் எல்லோரும் மந்திரியைத் திரும்பிப் பார்க்க, அவரோ வக்கீல் கேட்டதே காதில் விழாததுபோல் நீதிமன்ற ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

வக்கீல் மறுபடி கேட்டார்.

"சொல்லுங்கள்... இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா, இல்லையா..?".

மந்திரி இப்போதும் எந்தச் சலனமும் இல்லாமல் ஜன்னல் வழியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் ஒருமுறை வக்கீல் கேட்க, மந்திரி வக்கீலைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நிற்பதைப் பார்த்த நீதிபதி, கோபத்துடன் சுத்தியலை டேபிள் மீது நாலு தட்டுத் தட்டி மந்திரியைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டார்.

"மிஸ்டர் மந்திரி... வக்கீல் கேட்கிறர் அல்லவா..? பதில் சொல்லுங்கள் ..!".

"ஓ..!" நீதிபதி சொன்னதும் திரும்பிய மந்திரி சொன்னார்.

"மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே..! இவ்வளவு நேரமும் வக்கீல் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்..!".
.
.
.

Monday, December 13, 2010

ஒரு டம்ளர் பால்

இரவு தூங்கப் போகும் முன் ஒரு பெரிய டம்ளரில் பால் குடிப்பது டேனியின் வழக்கம்.

அன்று ஒரு சின்ன விசேஷம் காரணமாக நிறைய விருந்தாளிகள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.

எனவே, இரவு டேனிக்குப் பால் கொடுக்க கொஞ்சம் லேட்டாகிவிட்டது .

ஏற்கனவே ரகளை பண்ணுவதில் பிஹெச்டி வாங்கும் டேனி சொந்தங்களைப் பார்த்த உற்சாகத்தில், "எனக்குப் பால் கொடு..எனக்குப் பால் கொடு..!" என்று இன்னும் கொஞ்சம் அதிகமாய்க் கத்தி ரகளை பண்ணிக் கொண்டிருந்தான்.

'சொந்தங்கள் முன்னால் இப்படி மானத்தை வாங்குகிறானே..' என்ற கடுப்பில் நான் அவனிடம் சற்று கோபமாகவே கேட்டேன்.

" ஏன் டேனி இப்படிக் கத்தற.. உன்னிடம் கொஞ்சம் கூடப் பொறுமையே இல்லையா...?".

அதற்கு டேனி இன்னும் கடுப்பேற்றும் விதத்தில் சிரித்தபடியே சொன்னான்.

"ஓ மை டியர் மம்மி... என்கிட்ட பொறுமை ரொம்ப இருக்கு. ஆனா, பால்தான் இல்லை...!".
.
.
.

Saturday, December 11, 2010

தில்லுதுரயின் தாடி

தில்லுதுர ஒருசமயம் பிசினஸ் விஷயமாக வெளியூர் போயிருந்தார்.

ஊருக்குத் திரும்ப வந்தபோது, எல்லோரும் அவருடைய கேவலமான நீளமான தாடியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

நண்பர்களோ அவரது தாடி குறித்து அவரிடமே கிண்டல் செய்தனர்.

"என்ன தில்லு.. எதுக்காக இப்படி ஒரு கேவலமான தாடி..?".

பதிலுக்கு தில்லுதுர அதைவிடக் கேவலமாய் தாடியைப் பற்றி பதில் சொன்னார்.

அதைக்கேட்ட அவரது நண்பர்கள் மிக ஆச்சர்யமாய் தில்லுதுரயைப் பார்த்துக் கேட்டார்கள்.

"பிடிக்கலைனா எதுக்கு தில்லு வளர்க்கிற..?".

தில்லுதுர அவர்களிடம் கூலாய் பதில் சொன்னார்.

"பிடிக்கலை... ஆனாலும் வளர்க்கணும்...!".

நண்பர்கள் திரும்பவும் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள்.

"பிடிக்காததை ஏன் வளர்க்கிற.. எடுத்துட வேண்டியதுதான..?"

தில்லுதுர முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பதில் சொன்னார்.

"எடுத்திடலாம்னுதான் இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது... என் மனைவிக்கும் இந்த தாடி பிடிக்கலைனு...!".
.
.
.

Friday, December 10, 2010

மழையின் காரணமாக பள்ளி விடுமுறை

மழையின் காரணமாக விடுமுறை என்பதால், இரண்டாம் வகுப்புப் படிக்கும் என் மகன் டேனியை ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்ப அழைத்து வந்து கொண்டிருந்தேன்.

எதிர்பாராத விடுமுறை என்பதால் மிகுந்த சந்தோஷத்துடன் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தவன், அந்த டெலிபோன் கம்பங்களைப் பார்த்ததும் திடீரென என்னிடம் திரும்பிக் கேட்டான்.

"ஏம்மா... அந்த வயர்ல எல்லாம் கரண்ட் போகுதாம்மா..?".

நான் தமிழ் படித்தவள்.. கல்லூரியில் விரிவுரையாளர்.

எனக்கு அது டெலிபோன் சம்பந்தமான கம்பங்கள் என்று தெரியுமேயொழிய, அதில் கரண்ட் போகுதா... இல்லை, வெறும் சிக்னல்கள் மட்டும் போகுதா என்பது தெரியாது என்பதால் சொன்னேன்.

"எனக்கு சரியாத் தெரியலையேடா...!".

டேனி ஒன்றும் சொல்லாமல், அவனது சாலையோர விளையாட்டுகளில் கவனம் ஆனான்.

கொஞ்ச நேரம்தான்... இப்போது ஒரு சரியான மின்னலைத் தொடர்ந்து இடி இடிக்க அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"ஏம்மா... இந்த மின்னல், இடி எல்லாம் எப்படிம்மா வருது..?".

உண்மையில் எனக்கு சந்தேகமாக இருந்ததால் அவனிடம் சொன்னேன்.

"எனக்குத் தெரியலையேடா...!".

அடுத்து "ஓணான்ல கேர்ள்ஸ்னு எப்படிம்மா தெரிஞ்சுக்கறது..?" போல அவனது சந்தேகங்கள் எல்லாம் விதவிதமாய், வீடு வந்து சேரும்வரை வந்து கொண்டே இருந்தாலும், நான் சொன்ன பதில் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

"எனக்குத் தெரியலையேடா...!".

'எப்படித்தான் இவனுக்கு இத்தனை சந்தேகங்கள் வருது... தெரியலையே?' என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறக்கையில் அவன் கேட்டான்.

"ஏம்மா... நான் ரொம்ப கேள்வி கேட்டு உன்னைத் தொந்தரவு பண்ணறேனா..?".

டேனி கேட்டதும் சந்தோஷமாய்,"இல்லைடா கண்ணா...!" என்று சொன்னவள் தொடர்ந்து சொன்னேன்.

"நீ நிறைய கேள்விகள் கேட்டாத்தான், நிறையா கத்துக்க முடியும்...!".
.
.
.