Showing posts with label ரூபாய். Show all posts
Showing posts with label ரூபாய். Show all posts

Thursday, August 22, 2013

இருபதாயிரம் ரூபாய் பொம்மை


டேனியின் ஸ்கூலில் ட்ரேடிங் பற்றி ஏதோ சொல்லிக் கொடுத்த தினம் அன்று.

அவன் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததுமே அவனுடைய அப்பாவிடம் தனக்குப் பிடிக்காத தன்னுடைய டைனோசர் பொம்மையை விற்க முயன்று கொண்டிருந்தான்.

“எவ்வளவு ரூபாய்டா இந்த பொம்மை.?”.

அப்பா கேட்டதும் டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.

“ட்வெண்ட்டி தவ்சண்ட் ரூபீஸ்.!”.

அப்பா சிரித்தபடியே சொன்னார்.

“இருபதாயிரம் ரூபாய் ரொம்ப அதிகம்டா. இந்த பொம்மையோட விலையே அறுநூறு ரூபாய்தான்.!”.

சொன்னதும் டேனி சிரித்தபடியே சொன்னான்.

“அது இந்த பொம்மை புதுசா வாங்கினப்ப. இப்பத்தான் நம்ம வீட்டுல எல்லோர்கிட்டயும் பழகிடுச்சில்ல.!”.

”அப்பக் கூட இது ரொம்ப அதிகம்டா.!”.

சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட, டேனி வெளியே விளையாட ஓடிவிட்டான்.

ரெண்டொரு நாள் போயிருக்கும்.

திடீரென ஞாபகம் வந்து அவர் டேனியிடம் கேட்டார்.

“டேய்… அந்த டைனோசர் பொம்மை என்னாச்சு.?”.

அவர் கேட்டதும் டேனி வெற்றிக் களிப்புடன் சொன்னான்.

“அதை அன்னிக்கே பக்கத்து வீட்டு அர்னேஷ் கிட்ட இருபதாயிரத்துக்கு வித்துட்டேனே.!”.

கேட்டதும் ஆச்சர்யத்துடன் அவர் டேனியிடம் கேட்டார்.

“எப்படினு சொல்லு… புரியலயே.!”.

கேட்டதும் டேனி புன்னகையுடன் சொன்னான்.


“என் இருபதாயிரம் ரூபாய் பெரிய டைனோசர் பொம்மைய கொடுத்திட்டு, அவன்கிட்ட இருந்த பத்தாயிரம் ரூபாய் சின்ன கார் பொம்மை ரெண்டை வாங்கிட்டேன். சரிதான.?” என்றான்.
.
.
.

Wednesday, March 9, 2011

தில்லுதுர என்றொரு நல்லவர்


சிறுவன் ரமேஷ் வேலை பார்ப்பது ஒரு முட்டைக் கடையில்.

கொள்முதலாய் வாங்கும் முட்டைகளை கடைத்தெருவில் இருக்கும் சில்லறைக் கடைகளில் கொண்டு போய்க் கொடுப்பதுதான் அவன் வேலை.

ஒருநாள், கூட்டம் அதிகமாய் இருந்த கடைத்தெருவின் வழியாக வரும்போது, ஒரு தடுமாற்றத்தில் வண்டி கவிழ்ந்துவிட, முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து சிதறிவிட்டது.

"ஐயோ... என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்..? இவ்வளவு முட்டையின் காசுக்கு நான் எங்கே போவேன்..?" என்று நினைக்கும்போதே பயம் வந்து, ரமேஷ் அழ ஆரம்பித்துவிட்டான்.

கடைத்தெருவில் போவோர் வருவோரெல்லாம் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்போது, அங்கே வந்த தில்லுதுர ஆதரவாய் ரமேஷின் தோள்களைத் தட்டி, "ஏன் தம்பி அழறே..? இந்த முட்டைகளுக்கு உன்னால் காசு கொடுக்க முடியாது என்றுதானே..?" என்று கேட்க, ரமேஷ் கண்களில் நீருடன் 'ஆம்.." என்று தலையை ஆட்டினான்.

உடனே தில்லுதுர, "கவலைப்படாதே.. இங்கே நான் இருக்கேன். இவ்வளவு பேர் இருக்காங்க. நாங்க உனக்கு உதவி செய்யாமப் போயிடுவோமா..?" என்றபடி பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரின் தோளில் இருந்த தோளில் இருந்த துண்டை எடுத்தார்.

தன் பையில் இருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து அதில் போட்டுவிட்டு, கூட்டத்தாரிடமும் வந்தார்.

கூட்டத்தில் இருந்தவர்கள் சிறுவனின் நிலைக்கு வருத்தப்பட்டு பத்தும் இருபதுமாய் ரூபாய்களைப் போட, கணிசமாய் பணமும் சேர்ந்தது.

வசூலை முடித்து, கூட்டத்தினர் முன்பே பணத்தை எண்ணி அந்தச் சிறுவனிடம் கொடுத்த தில்லுதுர, "அழாதப்பா... இந்தா இந்தப் பணத்தைக் கொண்டுபோய் உன் கடையில் கட்டிவிடு..!" என்று போய்விட்டார்.

கூட்டத்தினர் எல்லோரும் தில்லுதுரயின் உதவும் குணத்தை எண்ணி வியந்து கொண்டிருக்க, அந்தப் பையனிடம் ஒருவர் கேட்டார்.

"அவர் மட்டும் வரலைனா உன் கதி என்ன ஆகியிருக்கும். எவ்வளவு நல்லவர் அந்த மனுஷர். எவ்வளவு உதவும் குணம் அவருக்கு. அவரை உனக்கு முன்னமே தெரியுமா..?".

அழுது கொண்டிருந்த ரமேஷ் கண்களைத் துடைத்தபடியே சொன்னான்.

"அண்ணே.. அவர் பேரு தில்லுதுர. அவர்தான் என் முதலாளி... இந்த முட்டையெல்லாம் அவரு ஏத்தி அனுப்பினது தான்..?".
.
.