Tuesday, August 3, 2010

சொல்லாதே..!

துறவி ஒருவர் மலைப் பகுதியில் குதிரையில் வந்து கொண்டிருந்தார்.
நேரமோ மாலை நேரம்.
இருட்டத் துவங்கியிருந்தது.
அப்போது பாதையின் ஓரத்தில் ஒருவன் மயங்கிக் கிடப்பதைத் துறவி பார்த்தார்.
குதிரையிலிருந்து இறங்கிய அந்தத் துறவி அவனை அசைத்துப் பார்த்தார்.
அவன் அசையவில்லை.
எனவே, துறவி தன் கையிலிருந்த தண்ணீர் குடுவையிலிருந்து நீரைக் கொஞ்சம் முகத்தில் தெளித்து அவனை மயக்கம் தெளிவித்தார்.
மயக்கம் தெளிந்தவனைக் கைத்தாங்கலாய் அழைத்துக் குதிரையில் ஏற்றி அமரவைத்தார்.
அவன் ஏறி அமர்ந்த மறுகணம், லகானைப் பற்றி ஒரு சொடுக்கு சொடுக்க குதிரை திருடனுடன் சடுதியில் பறந்தோடி மறைந்துவிட்டது.
துறவிக்கு அப்போதுதான் அவன் திருடன் என்பதும் இதுவரை அவன் நடித்திருக்கிறான் என்பதும் புரிய வந்தது.
குதிரை பறிபோனதால் அவர் மெல்ல நடந்து, மலையைக் கடந்து, பொழுது புலரும் நேரத்தில் நகரத்தை அடைந்தார்.
நகரத்தை அடைந்த துறவி நேராகச் சந்தைக்குப் போனார்.
அங்கே சந்தையில் திருடன்... இவர் குதிரையை விற்க நின்று கொண்டிருந்தான்.
துறவி மெல்லச் சென்று அவன் தோளைத் தொட்டார்.
திரும்பிப் பார்த்த திருடன் மிரண்டு போனான்.
துறவி மெல்லச் சிரித்தபடிச் சொன்னார்,"சொல்லாதே..!".
திருடன் அதிர்ச்சி மாறாமல்,"என்ன?எது?" என்று உளறினான்.
துறவி முன்னிலும் அதிக அன்புடன் சொன்னார்.
"குதிரையை நீயே வைத்துகொள். ஆனால், நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிய வந்தால்... எதிர்காலத்தில் உண்மையிலேயே சாலையில் யாராவது மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன்வரமாட்டார்கள். புரிகிறதா...?".
திருடன் கண்ணில் இப்போது கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
சொல்லிவிட்டு துறவி தன்வழியே போய்க் கொண்டிருந்தார்.

2 comments:

சென்ஷி said...

அருமையான கருத்துடன் கூடிய கதை..

Anonymous said...

அருமை

Post a Comment