Wednesday, December 19, 2012

தில்லுதுரயும் ஒரு தில்லாலங்கிடியும்

தில்லுதுர படித்து முடித்து வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் அது.

அன்று... இரவு உணவுக்காக வழக்கமாய் சாப்பிடும் மெஸ்ஸுக்கு போய்க் கொண்டிருக்கையில் சாலையில் அந்தப் பெரியவர் வழி மறித்தார்.

"தம்பி... நானும் என் மனைவியும் ஒரு வேலையா ஒருத்தரை பார்க்க கோயமுத்தூர் வந்தோம். வந்த எடத்துல பணத்த தொலைச்சிட்டோம். பாக்க வந்தவர் வேற எதோ வேலையா வெளியூர் போயிட்டாரு. நாளைக்கு காலைலதான் தஞ்சாவூர் போக முடியும்...!"

பெரியவர் சொல்லிக் கொண்டே போக, தில்லுதுர சிரித்தார்.

"இப்ப என்ன ஊருக்குப் போக பணம் வேணும்னு கேக்கப் போறியா பெருசு.?".

தில்லுதுர கேள்வியில் தெரிந்த நையாண்டியை புரிந்து கொண்ட பெரியவர் வாடிய முகத்துடன் சொன்னார்.

"ஊருக்குப் போக பணம் இருக்கு தம்பி. சாப்பிடத்தான்... சாப்பாட்டுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா போதும் தம்பி. ரெண்டு பேரும் சுகர் பேஷண்ட் வேற. மதியத்துலருந்து சாப்பிடாததால அதோ அங்க என் மனைவி ரொம்ப டயர்டாகி படுத்துட்டா.!" என்று அந்தக் கடைப் பக்கமாய் இருட்டைக் காட்டினார்.

எத்தனை ஆட்களை இந்த மாதிரிப் பாத்து இரக்கப்பட்டு ஏமாந்தாச்சு. இதுபோல அழுது புலம்பி காசை வாங்கிக் கொண்டு போன நிறையப் ஆட்களை அடுத்த அரை மணியில் டாஸ்மாக்கில் பார்த்ததும் நடந்திருக்கிறது.

தில்லுதுர இந்தமுறை ஏமாறத் தயாராயில்லை.

அவர் அந்தப் பெரியவரை பார்த்து சொன்னார்.

"இங்க பாரு பெருசு... காசெல்லாம் தரமுடியாது. உனக்கு சாப்பாடுதான வேணும். நான் இப்ப சாப்பிடத்தான் போறேன். கூட வந்து வேணுங்கறதச் சாப்பிடு. மனைவிக்கும் வேண்டியதை வாங்கிக்க. ஓகேன்னா இப்பவே எங்கூட வா... என்ன.?".

தில்லுதுர கேட்டதும் பெரியவர் முகம் மலர்ந்து போனார்.

"ரொம்ப சந்தோஷம் தம்பி. இருங்க அவகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்.!" என்று அந்த இருட்டுக்குள் ஓடிவிட்டு வந்தவர் தில்லுதுர பின்னாலேயே மெஸ்ஸுக்கு வந்துவிட்டார்.

பெரியவருக்கு உண்மையிலேயே பசிதான் போல. பார்க்க நல்ல குடும்பக்காரர் போலத்தான் தெரிந்தார். தஞ்சாவூர், மழை, விவசாயம், கோயில் என ஏதேதோ பேசிக் கொண்டே சாப்பிட்டவர், மறக்காமல் மனைவிக்கும் பார்சல் வாங்கிக் கொண்டார்.

சாப்பிட்டு முடித்து கல்லாவில் இருந்த நோட்டை வாங்கி தில்லுதுர சாப்பாட்டு கணக்கை எழுதுவதற்குள், "நான் கிளம்பட்டா தம்பி.!" என்று கேட்டபடியே கடை முதலாளிக்கும் ஒரு வணக்கம் போட்டுவிட்டு இருளில் இறங்கி மறைந்தே போனார்.

தில்லுதுரக்கும் ஒருவருக்கு உதவியதை விட அடுத்தவரிடம் இந்தமுறை ஏமாறவில்லை என்ற கர்வம் தான் அதிகமாய் இருந்தது.

காலை டிஃபன் சாப்பிட மெஸ்ஸுக்கு வந்த தில்லுதுர, லேட்டாகிவிட்ட அவசரத்தில் வேகவேகமாய் சாப்பிட்டு முடித்து கணக்கை எழுத நோட்டை வாங்கிப் பார்த்தவர் கேட்டார்.

"என்ன முதலாளி... இப்பத்தான் சாப்பிடவே வர்றேன். அதுக்கு முன்னயே ரெண்டு டிஃபண் கணக்கு எழுதிருக்கே.!".

கேட்ட தில்லுதுரயைப் பார்த்து முதலாளி சொன்னார்.
"ஆமா தில்லு.. நீ இப்பத்தான் வர்ற. ஆனா, காலைல ஏழரைக்கே நேத்து உங்கூட வந்த உன் அப்பா வந்து அவருக்கும் அம்மாவுக்கும் டிஃபன் பார்சல் வாங்கிட்டுப் போனாரே.!".
.
.
.

Thursday, December 13, 2012

டேனியும் ஆதாமின்ட இடுப்பு எலும்பும்

டேனியின் யூகேஜி முடிந்து முதல் வகுப்புக்கு முந்தைய கோடை விடுமுறை.

எந்நேரமும் டிவியும் ரிமோட்டுமாக இருக்கிறானே என்ற கவலை லேசாய் எழ ஆரம்பித்த நேரம்.

பக்கத்து வீட்டு பொடியன் ஜான்சன் வாசலில் வந்து நின்றான்.

"ஆன்ட்டி... இன்னிக்கு அடுத்ததெரு சர்ச்ல பைபிள் க்ளாஸ் ஸ்டார்ட் பண்றாங்க. டெய்லி ஒன் அவர். அம்மா என்னை போகச் சொல்றாங்க.
நான் டேனியையும் கூட்டிட்டுப் போகட்டா.?".

'சும்மா டிவி பாக்கறதுக்கு இது நல்ல விஷயந்தானே.?' -என்று யோசித்தபடியே திரும்புவதற்குள் டேனி ஜான்சனுடன் கிளம்பிவிட்டான்.

பைபிள் க்ளாஸ் முடிந்து வந்தவன் நேராய் அவன் அப்பாவிடம் ஓடினான்.
"அப்பா... இன்னிக்கு பைபிள் க்ளாஸ்ல அந்த அங்கிள் சொன்னாரு. கடவுள் ஆதாமோட இடுப்புல இருந்து ஒரு எலும்ப எடுத்துத்தான் ஏவாளை படைச்சாராம். அவங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் ஆச்சாம். நெசம்மாப்பா.?".

அவன் கேட்ட ஆர்வத்தைப் பார்த்த படியே அவன் அப்பா அவனிடம் சொன்னார்.

"ஆமாம்... ஏன் கேக்கற.?".

டேனி இன்னும் அந்த ஆச்சர்யம் மாறாமல் கேட்டான்.

"டிவில பாக்கறனே.. யாருக்காவது காயம் பட்டாலே எத்தனை ரத்தம் வருது. இந்த கடவுள் அப்படி இடுப்பு எலும்ப எடுத்தப்ப ஆதாமுக்கு பயங்கரமா காயமாகி ரொம்ப ரத்தம் வந்திருக்கும் தானேப்பா.?".

அவன் அப்பா சிரித்தபடி அவனுக்கு புரிவதற்காக சொன்னார்.

"அதெல்லாம் மனுசங்க செஞ்சாத்தான் பயங்கர ரத்தமெல்லாம் வரும். கடவுள் ஆதாமோட எலும்ப எடுத்தப்ப அவனுக்கு லேசா ஒரு வலி மட்டும்தான் வந்துச்சாம். அப்புறம்தான் அதை ஏவாளா மாத்தி கடவுள் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாராம்.!".

அப்பா சொன்னதும் சந்தேகம் தெளிந்து ஜான்சனுடன் வெளியெஎ விளையாட ஓடியவன் கொஞ்ச நேரத்தில் எங்கோ விழுந்து எந்தரித்த அழுக்கோடு வந்தவன் அவன் அப்பாவிடம் ஓடினான்.

"அப்பா எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்கப் போகுதுனு நெனைக்கறேன்.!".

சொன்ன டேனியிடம்,"ஏன் அப்படி சொல்ற.?" என்று அவன் அப்பா கேட்க... டேனி சொன்னான்.

"ஏன்னா, எனக்கு இப்ப இடுப்பு வலிக்குதே.!".
.
.
.

Thursday, December 6, 2012

அரசியல்வாதி




ஊரில் ஒரு பெரிய மனுஷன்.

புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள...தன் மகன்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தாராம்.

ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி...  தன் வீட்டின் ஒரு அறையை பூராவும் நிறைக்க வேண்டும் என்பதே அந்தப் போட்டி.

ஒரு மகன் விவசாயி.

ஆயிரம் ரூபாய்க்கும் வைக்கோலாய் வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.

ஆனால் பாவம், அறை கால்வாசிகூட நிரம்பவில்லை.

அடுத்த மகன் வியாபாரி.

ஆயிரம் ரூபாய்க்கும் பஞ்சு வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.

ஆனால் பரிதாபம், அறை அரைவாசிகூட நிரம்பவில்லை.

கடைசி மகனோ அரசியல்வாதி.

அவன் ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுவர்த்தி அறையில் ஏற்றினானாம்.

அறை முழுவதும் ஒளியால் நிரம்பியது.

பெரியவர் மற்ற இரு மகன்களைப் பார்த்து பெருமையாய் சொன்னாராம்.

"புரிந்ததா புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று.?"

கேட்டதும் மகன்கள் இருவரும் தலையைக் குனிய, அரசியல்வாதி மகனின் பிஏ தனக்குள் முணுமுணுத்தானாம்.

"ஆமாமா... எந்த லூஸாவது 'மீதி தொள்ளாயிரத்து தொண்ணூதொம்பது ரூபா எங்கே'னு கேட்டுச்சா பாரு.!!!".
.
.
.

Tuesday, December 4, 2012

மனைவியின் காதலன்



தில்லுதுர எப்போதும் தன் மனைவியை மதித்ததே இல்லை.

என்னவோ திருமணமாகிஆறேழு வருடங்கள் ஆகிவிட்டதே தவிர, மனைவியின் அழகின் மேல் அவருக்கு வருத்தம் இருந்து கொண்டேதான் இருந்தது.

கருப்பு நிறம்.

குறைந்த படிப்பு.

குள்ளம்.

நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கிடையாது.

தனக்கு மேட்சாயில்லை என ஆயிரம் குறைகள் அவருக்கு.

இது பற்றி சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் பேச்சில் மனைவியை குத்திக் கொண்டேதான் இருப்பார்.

தன்னைக் காதலித்த பெண்களை, இப்போதும் தன்னை ஆராதிக்கும் அழகிகள்  என்று அவர் தற்பெருமைகள் வேறு.

அவர் மனைவியும் அப்படியொன்றும் அழகு கம்மியில்லை என்றாலும், இல்லாத குறையை கணவர் குத்திக் காட்டும் போது அவருக்கு வருத்தமாய்த்தான் இருக்கும்.

அதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது சொல்லிக் கொள்ளலாம் என்று காத்திருந்த தில்லுதுர மனைவிக்கு, பையனின் காதுகுத்துக்காக மாமனார் வீட்டை அழைக்க தில்லுதுர வந்த போது அந்த சான்ஸ் கிடைத்தது.

தனது கல்லூரிக்காலத்தில் தன்னைக் காதலித்து தோற்று, இன்றும் தேவதாஸாய் சுற்றும் சுந்தரை தூரத்தில் பார்க்க நேர்ந்ததும், அவர் தில்லுதுரயிடம் அவனைக் காட்டினார்.

"ஏங்க... அதோ அந்த ஆளைப் பாத்தீங்களா.?".

தில்லுதுர அசுவாரஸ்யமாய் அவர் காட்டிய அந்த ஆளைப் பார்த்தபடி கேட்டார்.

"எது... அந்த அழுக்கு சட்டையும் தாடியுமாய் குடிச்சுத் தள்ளாடிட்டுப் போறானே... அந்த ஆளா.?"

தில்லுதுரயின் மனைவி இப்போது இன்னும் உற்சாகமாய்ச் சொன்னார்.

"அந்த ஆள் ஏன் அப்படி இருக்கார் தெரியுமா.?"

தில்லுதுர குழப்பத்துடன் தலையாட்டினார்... "ம்ஹூம்...தெரியலையே.!!".

தில்லுதுர மனைவி தன் கணவனிடம் தன் அழகையும் ஒருவன் ஆராதித்த கதையை மிகுந்த சந்தோஷத்துடன்  சொன்னார்.

"பத்து வருஷம் முன்னாடி இந்த சுந்தர் என்னைக் காதலிச்சாரு. ஒருதடவை எனக்கு லவ் லெட்டர் கூட கொடுத்தாரு. நான் அவர் காதலை ஏத்துக்க மறுத்துட்டேன். நான் அவர் காதலை ஏத்துக்க மறுத்த அந்த கணத்துலருந்து இன்னை வரைக்கும் அவர்  இப்படித்தான் இருக்காரு..!".

தில்லுதுர மிகவும் அதிர்ந்துபோய் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

"என்னது அவன் உனக்கு லவ் லெட்டர் குடுத்து நீ மறுத்ததால தான், பத்து வருஷமா இந்த ஆளு இப்படி இருக்கானா.?".

தில்லுதுர மனைவி இப்போது மிகுந்த கர்வத்துடன் 'ஆமாம்...!' என்பதுபோல் தலையை ஆட்ட...

தில்லுதுர அதே ஆச்சர்யத்துடன் தொடர்ந்து சொன்னார்.

"ஆனாலும்...  அதை ஒரு மனுஷன் பத்து வருஷம் செலிபரேட் பண்ணறதெல்லாம் ஓவர் இல்லையா.?".
.
.
.