Wednesday, September 5, 2012

தில்லுதுர என்றொரு கடன்காரன்

தில்லுதுரயின் ரெடிமேட் துணிக்கடை பிசினஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது.

ஏரியாவே தில்லுதுரயின் கடையை நம்பியிருந்தாலும் தில்லுதுர சரக்கை சப்ளை செய்பவர்களுக்கு ஒரு சிம்மசொப்பனம் தான்.

தெரியாமல் எவனாவது சரக்கை கொடுத்து விட்டால், அதற்கு பணத்தை வசூல் செய்வதற்குள் அவனுக்கு குறைந்தது ஐந்தாறு பிறந்தநாளாவது வந்துவிடும்.

அன்றைக்கும் அப்படித்தான்.

தில்லுதுர திருப்பூரின் மிக பிரபலமான கம்பெனிக்கு ஒரு பத்தாயிரம் பனியன்கள் சப்ளை செய்யச் சொல்லி ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.

அந்தக் கம்பெனியில் தில்லுதுரயின் பழைய வராக்கடன்களை எல்லாம் பட்டியலிட்டு விட்டு கூடவே ஒரு மெயிலும் அனுப்பியிருந்தார்கள்.

"மன்னிக்கவும் மிஸ்டர். தில்லுதுர...
தங்களது பழைய பாக்கி இவ்வளவு இருப்பதால் தாங்கள் அதை நேர் செய்த பின்பே இந்த ஆர்டரை பிராசஸ் செய்து பொருட்களை அனுப்ப முடியும். தங்களின் மேலான பதிலை எதிர்பார்த்து...!" என எழுதி ஒப்பம் அட்டாச் செய்யப் பட்டிருந்தது.

மெயிலைப் பார்த்த தில்லுதுர உடனடியாய் அவர்களுக்கு இவ்வாறு ஒரு பதில் போட்டார்.

"ஐயா...
வியாபாரம் ஜரூராய் நடந்து கொண்டிருக்கும் சமயம். சரக்கு மிக அவசரத் தேவையாய் இருக்கிறது.
நீங்களோ பழைய கடனை பைசல் செய்தால்தான் சரக்கை சப்ளை செய்ய முடியுமென்று சொல்கிறீர்கள்.
ஆனால், என்னால் அவ்வளவு நீண்டகாலம் காத்திருக்க முடியாதென்பதால் நான் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன்.
அந்த ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள்.

அன்பன்,
தில்லுதுர."
.
.
.