Saturday, June 5, 2010

டேனியும் நாய்க்குட்டியும்



பூமியின் காவல் தேவதை அன்று அதிசயமாய் பூலோகம் வந்திருந்தாள்.

வந்தவள் மக்களை அழைத்துச் சொன்ன செய்தியோ மகா அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது.

"மானிடர்களே... இப்பூலோகம் இன்னும் சில மணிகளில் அழியப் போகிறது. உங்களில் ஏழு உயிர்களை இப்போது என்னால் காப்பற்ற முடியும். அந்த ஏழு உயிர்களும் தனக்குப் பிடித்த ஒரு பொருளைத் தன்னுடன் எடுத்துவர அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. உங்களில் யார் அந்த எழுவர் என்பதை முடிவு செய்து சற்று நேரத்தில் அனுப்பி வையுங்கள்...!"

அடுத்த முக்கால் மணி நேரத்தில் முதலாய் ஒரு தமிழ்ப் புலவர் வந்தார்.

தேவதை அவனைக் கேட்டாள்.

"யார் நீ...?".

"புலவன்...!".

"உன்னுடன் என்ன கொண்டுவரப் போகிறாய்...?".

"புத்தகங்கள் அடங்கிய ஒரு பை....!".

"சரி வா...!".

தேவதை அவனைத் தனது சிறகுகளில் அவனை ஏற்றிக் கொண்டாள்.

பிறகு... ஒரு அரசியல்வாதி தனது செலவங்கள் அடங்கிய பெட்டியுடன் வந்தான்.

அதன் பின்னால் ஒரு குடிகாரன் தனது மினி பாருடன் வந்தான்.

ஒரு உலக அழகி தனது ஒப்பனை சாதனங்களுடன் வந்தாள்.

ஒரு வியாதிக்காரன் தனது மருந்து பாட்டில்களுடன் வந்தான்.

ஒரு பக்திமான் தனது பிரியமான ஸ்வாமி படத்துடன் வந்தான்.

கடைசியாய் வந்தது ஒரு சிறுவன்.

தேவதை கேட்டாள்.

"யார் நீ...?".

சிறுவன் பதில் சொன்னான்.

"நான் டேனி...!".

"உன்னுடன் என்ன கொண்டு வந்திருக்கிறாய்...?".

"எனது செல்ல நாய்க்குட்டி பப்பி...!".

தேவதை நெற்றியைச் சுருக்கினாள்.

"தம்பி... என்னுடன் ஏழு உயிர்களை அழைத்துச் செல்லவே அனுமதி இருக்கிறது. எனவே, உன்னுடன் எடுத்துச் செல்ல வேறு ஏதாவது உயிரற்ற பொருளை எடுத்து வா...போ...!".

டேனி ஒரு கணம் யோசித்தான்.

"தேவதையே... உன்னால் ஏழு உயிர்களை அழைத்துச் செல்ல முடியுமானால்...இதோ என்னுடைய பப்பியை அழைத்துச் செல். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்...!".

தேவதையின் கண்கள் ஒரு கணம் ஒளிர்ந்து மறைந்தது.
சற்று நேரம் கழித்து தேவதை கிளம்பும்போது அவள் சிறகில் டேனியும் பப்பியும் மட்டுமே இருந்தார்கள்.
.
.
.

7 comments:

அனு said...

ரொம்ப அழகாக இருந்தது.. உங்க எல்லா பதிவுமே சுருக்கமாகவும் sweetஆவும் இருக்குது.. தொடர்ந்து கலக்குங்க...

Raman Kutty said...

நண்பர்களுக்கு தெரிவித்து விட்டேன்..

Aba said...

அற்புதம். உங்கள் பதிவுகள் பலவற்றை வாசித்துள்ளேன். அனைத்தும் அருமை.

Anonymous said...

fine....

very nice....

ur.own imagination or taken...watever may be, concept is grate.

SRK said...

சற்று நேரம் கழித்து தேவதை கிளம்பும்போது அவள் சிறகில் டேனியும் பப்பியும் மட்டுமே இருந்தார்கள். ... ... ... என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்க, தேவதைக்கு செல்வங்கள் அடங்கிய பெட்டியை கையூட்டாக அளித்து விட்டு சிறகின் மறைவில் அரசியல்வாதியும் பதுங்கியிருந்தான்.

- என்று எழுதி இதை பெரியவங்க கதை ஆக்குங்க மீன்ஸ்.

Chithran Raghunath said...

@SRK: ... ஆஹா ஆரம்பிச்சிட்டீங்களே..

Anonymous said...

நாமெல்லோரும் முன்பு இப்படித்தானே இருந்தோம்.
எந்தக் கணத்தில் இப்படி இவ்வளவு சுயநலமாய் மாறிப் போனோம் என்பதை யோசிக்கும் போது மிக வருத்தமாய் இருக்கிறதல்லவா...?
குழந்தைகள் அல்லது அவர்கள் பற்றிய அந்தக் கதைகள் நம்மை ஒரு கணம் நம்மை அங்கே அழைத்துச் செல்வதை... நம்மை ஒரு கணம் அந்தக் குழந்தைகளாகவே வாழ இந்த பதினைந்து விநாடிகள் உதவியதாய் நம்புகிறேன்

Post a Comment