Friday, March 25, 2011

ஹீமேன் தில்லுதுர




காட்டில் ஆதிவாசிகளுக்கு வாழும் முறை கற்றுக் கொடுக்க தில்லுதுர சென்றிருந்த போது நடந்தது இது. வாராவாரம் க்ளாஸ் எடுத்து போரடித்ததால், இந்தவாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு மாறுதலுக்காகாக காட்டுக்குள் ஒரு தடவை போய் வரலாம் என முடிவெடுத்தார்கள் தில்லுதுரயின் நண்பர்கள்.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து கொண்டார்கள் எல்லோரும்.

காட்டுக்குள் வழி காட்டவும், வன விலங்குகளால் எதுவும் ஆபத்து வந்தால் சமாளிக்கவும் மாதையன் என்னும் ஒரு ஆதிவாசியையும் அழைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

காட்டுக்குள் செல்லும் வழியெல்லாம் மாதையன் காட்டின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தான்.

காட்டில் நிறைய காட்டெருமைகளையும், மான்களையும் காட்டிக் கொண்டே வந்தவன், காட்டுக்குள் நிறைய புலிகள் இருப்பதாகவும் அதிர்ஷ்டம் இருந்தால் அவைகளையும் பார்க்கலாம் என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

அதுவரை சந்தோசமாக சிரித்தபடி கும்மாளமிட்டபடி வந்து கொண்டிருந்த 'தில்லுதுர அன் கோ'விற்கு புலி என்றதும் வயிற்றில் புளி கரைத்தது போலாகிவிட்டது.

அதன் பிறகு, அவர்கள் எதுவும் பேசாமல் மாதையனின் பின்னால் நடக்கத் தொடங்கினார்கள்.

பயத்தில் யாருக்கும் வார்த்தையே வரவில்லை.

தில்லுதுர திரும்பிடலாம் என்று எண்ணினாலும், அதைச் சொல்ல கௌரவம் தடுத்தது.

மாதையனோ இன்னும் 'இதோ கரடி போயிருக்கு, யானை லத்தி போட்டிருக்கு'னு இன்னும் அதிகமாய் கலவரப் படுத்திக் கொண்டே வந்தான்.

ஒரு அரை மணி இருக்கும்.

நல்ல நடுக்காடு.

கீழே பார்த்துக் கொண்டே வந்த மாதையன் திடீரென வாயில் விரலை வைத்து,"உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!" என்றான்.

எல்லோரும் திரும்பி அவனைப் பார்க்க, எச்சரிக்கையுடன் சப்தமில்லாமல் காலடி எடுத்து வைத்த அவன் கிசுகிசுவென சப்தமில்லாமல் ரகசியமாய் சொன்னான்.

"இதோ பாருங்க... இதுதான் புலியோட காலடித்தடம். இன்னும் காலடித்தடம் அச்சுக் குழையாம இருக்கு. இது இப்பத்தான் இந்தப்பக்கமா போயிருக்கு. இங்க எங்கயாவதுதான் இருக்கும். சத்தம் போடாம என் பின்னயே வாங்க. புலி எங்க போயிருக்குனு பாக்கலாம்..!".

சொல்லிவிட்டு முன்னோக்கி நகர ஆரம்பித்த மாதையனை தொடர்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் நண்பர்கள் தில்லுதுரயைப் பார்க்க... தில்லுதுர அவர்களிடம் தைரியமாய்ச் சொன்னார்.

"என்னடா பாக்கறீங்க. நீங்க எல்லாரும் மாதையன் கூடவே டீமாப் போயி புலி எங்க போயிட்டிருக்குனு பாருங்க. நான் ஒத்தை ஆளாப் போயி புலி எங்க இருந்து வந்துச்சுனு பாக்கறேன்..!" என்றார்.
.
.
.

8 comments:

உமா கிருஷ்ணமூர்த்தி said...

செம"தில்லு "துர

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

உண்மையான 'தில்லு'துர...

சென்ஷி said...

:)

Anonymous said...

Climax-விட கதை சொன்ன தோணி ரொம்ப நல்ல இருந்தது

அர்ஜுன் எ வேதாளம் said...

கில்லி'துரை

Thilse Senthil said...

தில்லு போல வருமா..?
super anna

இராம்குமார் said...

அப்பா ......என்னா தைரியம்

Mohamed Faaique said...

நெஞ்சில் தில்...தில்...

Post a Comment