Saturday, August 24, 2013

நூறு தர்பூசணிப் பழங்கள்


டேனிக்கு ஒரு ஐந்து வயதிருக்கும்.

அவனும் நானும் அவன் அப்பாவுடன் ஒரு ஞாயிறு மதியத்தில் பர்ச்சேஸ் முடித்து வரும்போது நடந்தது இது.

காலையிலேயே கிளம்பியது.

மளிகை, கொஞ்சம் துணிகள், அவனுக்கு பொம்மை என எல்லாம் வாங்கி முடிக்கையில் கிட்டத்தட்ட மதியமாகிவிட்டது.

திரும்பும் வழியில் வெயில் தாங்காமல் ஒரு சாலையோர தர்பூசணிக் கடையில் நிறுத்தினார் அவர்.

ரெகுலராய் இளநீர்க் கடையும் வைத்திருப்பவர் என்பதால் அந்தக் கடைக்காரர் டேனி அப்பாவுக்கும் பழக்கம் போல.

போனதுமே ”வாங்க சார்… சவுக்கியமா.?” என்றபடி, சுவையான பழமாய்த் தேர்ந்தெடுத்து மூன்று ப்ளேட்டுகளில் சின்னச் சின்னத் துண்டுகளாய் வெட்டி கொடுத்துப் போனார்.

நாங்கள் சாப்பிட, டேனிக்கு அந்த தர்பூசணீயின் சிவப்புக் கலரும், முக்கோணம் முக்கோணமான அதன் துண்டுகளும் அதன் சுவையும் பிடித்துப் போக வெயிலின் கொடுமையும் சேர ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

ஒரு பிளேட்டையும் அவனே சாப்பிட்டதைப் பார்த்த அந்த கடைக்காரர் அவனுக்கு இன்னும் கொஞ்சம் பழத் துண்டுகளை வைத்தபடியே டேனியிடம் விளையாட்டாய்க் கேட்டார்.

“குட்டிப் பையனுக்கு தர்பூசணிப்பழம் புடிச்சிருக்கா.?”.

டேனி உற்சாகமாய்த் தலையாட்டினான்.

“ரொம்ப புடிச்சிருக்கு அங்கிள். செம டேஸ்ட்டு..!”.

கடைக்காரர் சிரித்தபடியே அடுத்து அவனிடம் கேட்டார்.

“இப்ப நூறு தர்பூசணிப் பழம் உனக்குத் தர்றேன். உன் அப்பாவையும் அம்மாவையும் எங்கிட்ட விட்டுட்டுப் போயிடறயா.?”.

நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் டேனியின் பதிலுக்காக அவன் முகத்தைப் பார்த்தபடி இருக்க, அவனோ ஒரு நிமிசம் பலமாய் யோசித்து விட்டு, “முடியாது அங்கிள்… எனக்கு என் அப்பா அம்மாதான் வேணும்.!” என்றான்.

கடைக்காரர் சிரித்தபடியே அவன் கன்னத்தை தட்டிவிட்டு, என் கணவரிடம், “பாசக்கார பயதான் சார்.” என்றபடி பணத்தை வாங்கிக் கொண்டார்.

திரும்பும் வழியில் அவன் அப்பா டேனியிடம் கேட்டார்.

“ஏண்டா… அந்த அங்கிள் ’நூறு பழம் தர்றேன்… அப்பா அம்மாவக் கொடுத்திடறியா..”னு கேட்டப்ப உடனே பதில் சொல்லாம என்ன யோசிச்ச.?”.

அவர் கேட்டதும் டேனி சிரித்தபடியே சொன்னான்.


“என்னால எப்படி நூறு தர்பூசணிப் பழத்தை கொண்டுபோக முடியும்னுதான் யோசிச்சுப் பார்த்தேன்.!”.
.
.

Thursday, August 22, 2013

இருபதாயிரம் ரூபாய் பொம்மை


டேனியின் ஸ்கூலில் ட்ரேடிங் பற்றி ஏதோ சொல்லிக் கொடுத்த தினம் அன்று.

அவன் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததுமே அவனுடைய அப்பாவிடம் தனக்குப் பிடிக்காத தன்னுடைய டைனோசர் பொம்மையை விற்க முயன்று கொண்டிருந்தான்.

“எவ்வளவு ரூபாய்டா இந்த பொம்மை.?”.

அப்பா கேட்டதும் டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.

“ட்வெண்ட்டி தவ்சண்ட் ரூபீஸ்.!”.

அப்பா சிரித்தபடியே சொன்னார்.

“இருபதாயிரம் ரூபாய் ரொம்ப அதிகம்டா. இந்த பொம்மையோட விலையே அறுநூறு ரூபாய்தான்.!”.

சொன்னதும் டேனி சிரித்தபடியே சொன்னான்.

“அது இந்த பொம்மை புதுசா வாங்கினப்ப. இப்பத்தான் நம்ம வீட்டுல எல்லோர்கிட்டயும் பழகிடுச்சில்ல.!”.

”அப்பக் கூட இது ரொம்ப அதிகம்டா.!”.

சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட, டேனி வெளியே விளையாட ஓடிவிட்டான்.

ரெண்டொரு நாள் போயிருக்கும்.

திடீரென ஞாபகம் வந்து அவர் டேனியிடம் கேட்டார்.

“டேய்… அந்த டைனோசர் பொம்மை என்னாச்சு.?”.

அவர் கேட்டதும் டேனி வெற்றிக் களிப்புடன் சொன்னான்.

“அதை அன்னிக்கே பக்கத்து வீட்டு அர்னேஷ் கிட்ட இருபதாயிரத்துக்கு வித்துட்டேனே.!”.

கேட்டதும் ஆச்சர்யத்துடன் அவர் டேனியிடம் கேட்டார்.

“எப்படினு சொல்லு… புரியலயே.!”.

கேட்டதும் டேனி புன்னகையுடன் சொன்னான்.


“என் இருபதாயிரம் ரூபாய் பெரிய டைனோசர் பொம்மைய கொடுத்திட்டு, அவன்கிட்ட இருந்த பத்தாயிரம் ரூபாய் சின்ன கார் பொம்மை ரெண்டை வாங்கிட்டேன். சரிதான.?” என்றான்.
.
.
.

Saturday, August 17, 2013

பிரார்த்தனை



சுற்றுலா வந்து வழி தவறிப் பாலைவனத்தில் மாட்டிக் கொண்ட இரு நண்பர்களுக்கும் எப்படித் தப்பிப்பதென்றே தெரியவில்லை.

ரெண்டு மூன்று நாட்களாக வெயிலிலும் இரவிலும் சோறு தண்ணியில்லாமல் நடந்து திரிந்தும் சாப்பிட குடிக்க ஒன்றும் கிடைக்காமல் ஓய்ந்து போனார்கள்.

மூன்றாம் நாள் மதியம் கிட்டத்தட்ட இருவரும் ஓய்ந்துபோன சமயம், 

தாகத்துக்கான தண்ணீருக்காய் தவித்து கடைசி முயற்சியாய் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய அமர்ந்தார்கள்.

முதல் நண்பன் மனமுருகி கிட்டத்தட்ட அரைமணி நேரம் பிரார்த்தனை செய்திருப்பான்.

இரண்டாவது நண்பன் ரெண்டு நிமிடம் கூட பிரார்த்தனை செய்திருக்க மாட்டான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்கள் சோலையுடன் கூடிய ஒரு நீரூற்றைக் கண்டார்கள்.

நல்ல அமிர்தம் போன்ற நீரைக் குடித்து ஓய்வெடுத்ததும் அடுத்து உணவுக்காக பிரார்த்தனையை துவங்கினார்கள்.

வழக்கம் போல முதலாமவன் அரைமணி பிரார்த்தனை செய்ய, இரண்டாமவன் அரை நிமிடம்கூட பிரார்த்திருக்க மாட்டான்.

அடுத்த நிமிடம், அவர்கள் கண்முன்னே ஒரு அற்புத உணவுத் தட்டுடன் கூடிய டேபிள் தோன்ற அதையும் சாப்பிட்டு முடித்தார்கள்.

வயிறு நிறைந்ததும் முதலாமவனுக்கு இப்போது இரண்டாமவனைப் பார்த்து வெறுப்புத் தோன்ற ஆரம்பித்தது.

நாம் அரை மணி செய்யும் பிரார்த்தனையின் பலனை இவன் அரை நிமிடம்கூட செய்யாமல் அனுபவிக்கிறானே என கடுப்பு அதிகரித்தது.
கொஞ்ச நேரம் கழிந்தது.

இருவரும் வீட்டுக்குத் திரும்ப வழி கேட்டு இறைவனை நோக்கி பிரார்த்தித்தார்கள்.

வழக்கம்போலவே முதலாமவன் அரைமணிக்கு குறையாமல் பிராத்தித்து எழ, இரண்டாமவன் அரை நிமிடத்தில் தனது பிராத்தனையை முடித்துக் கொண்டான்.

பத்தே நிமிடத்தில் அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல தேவதூதர்கள் வாகனத்துடன் வந்து நின்றார்கள்.

வாகனத்தைப் பார்த்ததும் பரவசத்துடன் முன்னால் ஓடிய முதலாமவன், வாகன ஓட்டியிடம் சொன்னான்.

“நான் கஷ்டப்பட்டு செய்த பிரார்த்தனையின் பலனை என் நண்பனும் அனுபவிக்கிறான். இந்தமுறை என் பிரார்த்தனையின் பலனாய் வந்த இந்த வண்டியில் அவனை நம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாம்.!”.

சொன்ன முதலாமவனைப் பார்த்து அந்த வாகன் ஓட்டி சிரித்தார்.

“இந்த வண்டி உண்மையில் உன் பிரார்த்தனையின் பலனாக வரவில்லை. உன் நண்பனின் பிரார்த்தனைக்காகவே வந்திருக்கிறது.!”.

கேட்ட முதலாமவன் அதிர்ந்து அந்த வாகன ஓட்டியைப் பார்த்து சந்தேகத்துடன் கேட்டான்.

“அது எப்படி… நான் அரைமணி பிரார்த்தனை செய்யும் போது அவன் அரை நிமிடம் கூட பிரார்த்திக்கவில்லையே.!”.

அவன் கேட்டதும் வாகன ஓட்டி சிரித்தபடியே சொன்னான்.

“ஆமாம். உன்னுடைய பிரார்த்தனைகள் எல்லாம் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றே இருந்தது. அதனால் நீளமாய் இருந்தது. ஆனால், உன் நண்பன் கடவுளிடம் என்ன கேட்டான் தெரியுமா.? ’எனக்கு எதுவும் செய்யும் முன்னர் என் நண்பனின் பிரார்த்தனையை நிறைவேற்று இறைவா.!’ என்பதே. அதனால் அவன் பிரார்த்தனை எப்போதும் சிறிதாகவே இருந்தது. கடவுள்  எப்போதும் ஒருவன் தனக்காக பிரார்த்திப்பதை விட அடுத்தவருக்காக பிரார்த்திப்பதையே உடனடியாய் நிறைவேற்றுவார். இப்போது புரிகிறதா.?”..

வாகன ஓட்டி கேட்க கேட்க முதலாமவன் தலை  வெட்கிக் கவிழ்ந்தது.
.
.
.

Friday, August 16, 2013

தில்லுதுர அட் தியானா க்ளாஸ்

தில்லுதுர படித்து முடித்து நீண்ட நாட்களாக வேலையின்றி வீட்டில் சும்மா இருந்த காலம் அது.

அப்பா எவ்வளவு திட்டியும் கண்டுகொள்ளாமல், சும்மா இருப்பதின் சுகத்தை முழுதாய் அனுபவித்தபடி தில்லுதுர ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.

திட்டித் திட்டி அலுத்துப்போய் இப்போதெல்லாம் அவர் தில்லுதுரயை திட்டுவதைக் கூட நிறுத்தி விட்டார்.

கொஞ்ச நாட்கள் போயிருக்கும்.

அன்று தில்லுதுரயின் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தில்லுதுரயின் அம்மா மகிழ்வுடன் அவரிடம் சொன்னார்.

”ஏங்க... விஷயம் தெரியுமா.! நம்ம பையனுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு.!”.

அவர் சொல்வதைக் கேட்ட அப்பா கோபத்துடன் கேட்டார்.

”ஏன்... உம்பையன் எங்கயும் வேலைக்குச் சேந்துட்டானா.?”.

அவர் கேட்டதும், தில்லுதுரயின் அம்மா சந்தோசத்துடன் சொன்னார்.

“இல்லீங்க... ஆனா அவனுக்கு நல்ல புத்தி வந்துடும். இன்னிலருந்து அவன் ஒரு தியான வகுப்பில சேர்ந்திருக்கான்.!”.

சொன்னதும் கடுப்புடன் திரும்பிய தில்லிதுரயின் அப்பா கோபமாய்ச் சொன்னார்.

“வெவரம் புரியாமப் பேசாத.! தியானம்ங்கறதே சும்மா இருக்கறதுதான். என்ன... இவ்வளவு காலம் தனியா சும்மா இருந்த உம்மகன் இனி கூட்டத்தோட சும்மா இருப்பான். அவ்வளவுதான் வித்தியாசம்.!”

அவர் சொல்லிக் கொண்டே போக, அதற்காக மகனுக்கு ரூபாய் ஐயாயிரம் கொடுத்த அதிர்ச்சியில் உறைந்திருந்தார் தில்லுதுரயின் அம்மா.
.
.
.


Tuesday, August 13, 2013

தில்லுதுர கம்பெனி ஆட்கள்

தில்லுதுரயின் அளவான சாஃப்ட்வேர் கம்பெனி, கடுமையான பொருளாதார சிக்கலில் தவித்த காலம் அது.

ஹெ.ஆர். டிபார்ட்மெண்ட்டில் இருந்து சிக்கலை சமாளிக்க ஆள் குறைப்பு செய்ய தில்லுதுரயிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

சொன்னபடி ஆட்களைக் குறைத்தாலும் தில்லுதுர வேறொரு யோசனையுடன் இருந்தார்.

ஹெச்.ஆர். ஹெட்டை கூப்பிட்டு தனது கம்பெனியின் சிறந்த இருபது பேரைத் தேர்ந்தெடுத்து... தமது செலவில், பத்துப் பேரை இங்கிலாந்துக்கும், பத்துப் பேரை அமெரிக்காவுக்கும் அனுப்பி வெவ்வேறு கம்பெனிகளில் வேலை செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னார்.

ஓரிரு வருடங்களில் தமது கம்பெனி சிக்கலில் இருந்து மீண்டதும் இவர்களது அனுபவத்தைப் பயன்படுத்தி, தனது கம்பெனியை மேம்படுத்தலாம் என்பது அவரது திட்டம்.

சொன்னபடி அந்த இருபது பேரையும் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் அனுப்பி வைக்கவும் செய்தார்கள்.

எண்ணிப் பதினைந்தே மாதம்.

தில்லுதுரயின் கம்பெனி மறுபடி பிஸினெஸில் சூடுபிடித்து பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருந்தது.

திடீரென ஒருநாள் அந்த இருபது பேர் ஞாபகம் வந்து ஹெ.ஆர். ஹெட்டைக் கூப்பிட்டு விசாரித்தார் தில்லுதுர.

”வெளிநாடு பயிற்சி பெற்ற இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்.?”.

ஹெ.ஆர். சிரித்தபடி சொன்னார்.

“இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற அனைவரும் உண்மையிலேயே புத்திசாலிகள். அவர்கள்  எல்லோருக்கும் இப்போது நம் கம்பெனியில் மிக உயர்ந்த பதவிகளைக் கொடுத்தாயிற்று.!”.

தனது முடிவு சரியாய் அமைந்து விட்ட சந்தோஷத்துடன் தில்லுதுர ஹெச்.ஆரிடம் அடுத்துக் கேட்டார்.

“அந்த... அமெரிக்கா போனவர்கள் என்னாச்சு.?”.

தில்லுதுர கேட்டதும் ஹெச்.ஆர். முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் தில்லுதுரயிடம் சொன்னார்.

“அவய்ங்க ரொம்ப புத்திசாலிக.... திரும்பி வரமுடியாதுனு சொல்லிட்டு அமெரிக்காவுலயே செட்டிலாயிட்டானுக.!”.
.
.

Monday, August 12, 2013

கடவுளிடம் சென்ற காக்கை

டேனியின் வயது அப்போது நான்கு இருக்கும்.

அவனை கிண்டர்கார்டன் ஸ்கூலிலிருந்து சாயங்காலம் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தேன்.

வீடும் ஸ்கூலும் பக்கம்தான் என்பதால் நடந்தே அழைத்துச் செல்வதும் திரும்பக் கூட்டி வருவதும்தான் வழக்கம்.

அன்றும் அப்படித்தான் கூட்டி வந்து கொண்டிருந்தேன்.

சாலையோரம் கிடந்த கூழாங்கற்களை எடுப்பதும் எறிவதுமாக வந்து கொண்டிருந்தவன் திடீரென கலவரமாய்க் கூப்பிட்டான்.

“அம்மா... அங்க பாத்தியா.?”.

அவன் காட்டிய திசையில் சாலையோரத்தில் ஒரு காகம் இறந்து கிடந்தது.

கொஞ்சம் முன்புதான் இறந்திருக்க வேண்டும்.

பளபளப்பு மாறாமல் அப்படியே இருந்தது அந்தக் காகம்.

அதன் அருகே செல்ல விடாமல், டேனியை சற்றே என் பக்கமாய் இழுத்தபடி நடக்கையில் அவன் கேட்டான்.

“ஏம்மா அந்த காக்கா அப்பிடிக் கெடக்குது.?”.

அந்தக் காக்கை இறந்துவிட்டது என்பதை குழந்தைக்கு எப்படிச் சொல்வது என்று புரியாமல், நான் எல்லோரும் சொல்வதுபோல், “அது சாமிகிட்டப் போயிடுச்சுடாதங்கம்.!” என்றேன்.

நான் சொன்னதும் ஏதோ புரிந்தது போலவே யோசித்தபடி வந்த டேனி மறுபடி கேட்டான்.

"ஏம்மா... சாமி கிட்டப் போன காக்கா எப்பிடி இங்க கெடக்குது.? கருப்பா இருக்குனு புடிக்காம சாமி திரும்ப தூக்கி எறிஞ்சிட்டாரா.?”.
.
.
.

Saturday, August 10, 2013

டயட்டு

கணவர் காலில் அடிபட்டு படுத்திருக்கும் சமயம்.

ரெண்டு மூணு மாசம் படுத்திருக்க வேண்டியிருப்பதால் வெய்ட் ஏறாமல் இருக்க கண்டிப்பாக டயட் மெய்ண்டெய்ன் பண்ண டாக்டர் அட்வைஸ் செய்திருந்தார்கள்.

எனவே கலோரி கம்மியான, மசாலா குறைத்து, ஆயில் ஃப்ரைகள் எல்லாம் தவிர்த்து அவருக்கு செய்து வைத்துவிட்டு, நானும் டேனியும் வழக்கம் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த ஞாயிறு அன்று மதியம் அப்படித்தான்.

டேனி காளான் ஃப்ரையும், காலி ஃப்ளவர் க்ரேவியும் கேட்க... அவனுக்கு அதை செய்துவிட்டு, அவருக்கு எப்பவும் போல் கோதுமை அரிசி சாதமும் வெண்டைக்காய் சாம்பாரும் பரிமாற ஆரம்பித்தேன்.

பாதி சாப்பிட்டிருப்பார்.

அதன் பிறகு நானும் டேனியும் சாப்பிட அமர்ந்தோம்.

சாப்பிடுக் கொண்டே திரும்பியவர், நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு பரிதாபமாகக் கேட்டார்.

“டயட்லயே மிகக் கொடுமையான பார்ட் என்னனு தெரியுமா.?”

சாப்பிட்டுக் கொண்டே நிமிர்ந்து அவரை எதுவும் புரியாமல், “என்னது.?” என்று கேட்டபடி  நான் பார்க்க, அவர் தொடர்ந்து சொன்னார்.

“டயட்லயே கொடுமையான பகுதி... சாப்பிட என் தட்டுல என்ன இருக்குனு பாக்கறத விட, பக்கத்துல இருக்கறவங்க தட்டுல என்ன இருக்குனு பாத்துட்டு சும்மா இருக்கறதுதான்.!”.
.
.
.