Thursday, October 25, 2012

டேனியின் சினிமா

டேனி வந்தவுடன் அவனுடன் சினிமாவுக்குப் போவதற்காக காத்திருந்தான் அச்சுத்.

படம் போடுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

தியேட்டர் வேறு இன்னும் கால் மணி தூரம் போகவேண்டும்.

வருவதாய்ச் சொன்ன டேனி வேறு இவ்வளவு லேட்டாக்குகிறான்.

அச்சுத் டென்ஷனில் நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்க, வேகவேகமாய் வாசலில் வந்து நின்றான் டேனி.

கடுப்போடு அச்சுத் கேட்டான்.

"ஏண்டா லேட்டு.?".

டேனி வியர்த்து வடியும் முகத்தை துடைத்தவாறே சொன்னான்.

"அதையேன்டா கேக்கற... கிளம்பற நேரத்துல அம்மா -பக்கத்து கோயில்ல பக்திப் பிரசங்கம் நடக்குது அதுக்குப் போ-ன்னு சொல்றாங்க. எனக்கோ சினிமாக்குப் போகலாம்னு ஆசை. என்ன பண்றதுன்னு யோசிச்சிகிட்டே, 'டாஸ் போட்டு பாத்து எது வருதோ...
அதுக்குத்தான் போவேன்'னு அம்மாகிட்ட சொல்லிட்டேன்..!" என்றான்.

அச்சுத் கேட்டான்.

"டாஸ் போட்டு பாத்தியாடா.? சினிமாக்கு போலாம்னு வந்துச்சா.?"

டேனி புன்னகைத்தபடி ஆம் என்று தலையசைத்தான்.

டேனி தலையாட்டியதும் அடுத்து அச்சுத் ஆச்சர்யத்துடன் கேட்டான்.

"ஒரு டாஸ் பாக்கறதுக்காடா இவ்வளவு நேரம்.?"

அச்சுத் கேட்டதும் அவன் முகத்தைப் பார்த்தபடி, டேனி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்.

"இல்லடா... பக்கத்துக் கோயில் சாமி சக்தியுள்ளது போல. சினிமாக்கு போகலாம்னு  டாஸ் விழுகறதுக்குள்ள ஐம்பது அறுபதுவாட்டி டாஸ் போட வேண்டியதாயிடுச்சு.!" என்றான்.
.
.
.