Friday, March 25, 2011

ஹீமேன் தில்லுதுர




காட்டில் ஆதிவாசிகளுக்கு வாழும் முறை கற்றுக் கொடுக்க தில்லுதுர சென்றிருந்த போது நடந்தது இது. வாராவாரம் க்ளாஸ் எடுத்து போரடித்ததால், இந்தவாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு மாறுதலுக்காகாக காட்டுக்குள் ஒரு தடவை போய் வரலாம் என முடிவெடுத்தார்கள் தில்லுதுரயின் நண்பர்கள்.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து கொண்டார்கள் எல்லோரும்.

காட்டுக்குள் வழி காட்டவும், வன விலங்குகளால் எதுவும் ஆபத்து வந்தால் சமாளிக்கவும் மாதையன் என்னும் ஒரு ஆதிவாசியையும் அழைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

காட்டுக்குள் செல்லும் வழியெல்லாம் மாதையன் காட்டின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தான்.

காட்டில் நிறைய காட்டெருமைகளையும், மான்களையும் காட்டிக் கொண்டே வந்தவன், காட்டுக்குள் நிறைய புலிகள் இருப்பதாகவும் அதிர்ஷ்டம் இருந்தால் அவைகளையும் பார்க்கலாம் என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

அதுவரை சந்தோசமாக சிரித்தபடி கும்மாளமிட்டபடி வந்து கொண்டிருந்த 'தில்லுதுர அன் கோ'விற்கு புலி என்றதும் வயிற்றில் புளி கரைத்தது போலாகிவிட்டது.

அதன் பிறகு, அவர்கள் எதுவும் பேசாமல் மாதையனின் பின்னால் நடக்கத் தொடங்கினார்கள்.

பயத்தில் யாருக்கும் வார்த்தையே வரவில்லை.

தில்லுதுர திரும்பிடலாம் என்று எண்ணினாலும், அதைச் சொல்ல கௌரவம் தடுத்தது.

மாதையனோ இன்னும் 'இதோ கரடி போயிருக்கு, யானை லத்தி போட்டிருக்கு'னு இன்னும் அதிகமாய் கலவரப் படுத்திக் கொண்டே வந்தான்.

ஒரு அரை மணி இருக்கும்.

நல்ல நடுக்காடு.

கீழே பார்த்துக் கொண்டே வந்த மாதையன் திடீரென வாயில் விரலை வைத்து,"உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!" என்றான்.

எல்லோரும் திரும்பி அவனைப் பார்க்க, எச்சரிக்கையுடன் சப்தமில்லாமல் காலடி எடுத்து வைத்த அவன் கிசுகிசுவென சப்தமில்லாமல் ரகசியமாய் சொன்னான்.

"இதோ பாருங்க... இதுதான் புலியோட காலடித்தடம். இன்னும் காலடித்தடம் அச்சுக் குழையாம இருக்கு. இது இப்பத்தான் இந்தப்பக்கமா போயிருக்கு. இங்க எங்கயாவதுதான் இருக்கும். சத்தம் போடாம என் பின்னயே வாங்க. புலி எங்க போயிருக்குனு பாக்கலாம்..!".

சொல்லிவிட்டு முன்னோக்கி நகர ஆரம்பித்த மாதையனை தொடர்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் நண்பர்கள் தில்லுதுரயைப் பார்க்க... தில்லுதுர அவர்களிடம் தைரியமாய்ச் சொன்னார்.

"என்னடா பாக்கறீங்க. நீங்க எல்லாரும் மாதையன் கூடவே டீமாப் போயி புலி எங்க போயிட்டிருக்குனு பாருங்க. நான் ஒத்தை ஆளாப் போயி புலி எங்க இருந்து வந்துச்சுனு பாக்கறேன்..!" என்றார்.
.
.
.

Thursday, March 24, 2011

குழந்தையின் கருணை



மிக போரடிக்கிறதே என்று டேனியை கோவை வ.உ.சி. பூங்கா அழைத்துச் சென்ற ஒரு ஞாயிறு அன்று நடந்தது இது.

பூங்காவில் நான் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க, டேனி அவன் வயதை ஒத்த ஐந்து ஆறு வயதுச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரம் இருக்கும்.

வேக வேகமாய் என்னிடம் ஓடிவந்தவன், பூங்காவில் கொஞ்ச தூரம் தள்ளி அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கேக்கறாங்க, அவங்களுக்கு கொடுக்கணும் என்று அவருக்கு தருவதற்காய் பத்து ரூபாய் கேட்டான்.

இந்த வயதிலேயே என் பையனுக்கு இவ்வளவு கருணை இருக்கிறதே, அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் இருக்கிறதே என்ற பெருமையுடன் பர்ஸைத் திறந்தவள், பத்து ரூபாயை எடுத்து கையில் கொடுத்தபடி கேட்டேன்.

"எதுக்காக டேனி அவங்களுக்கு பணம் கொடுக்கணும்னு தோணுச்சு..? அவங்கனால வேலை எதுவும் செய்ய முடியாதா..?".

கேட்ட என்னைக் குழப்பத்துடன் பார்த்த டேனி சொன்னான்.

"ஏன் முடியாது... நல்லா முடியுமே..! அவங்கதான் அங்கே மிட்டாய் வித்துகிட்டு இருக்காங்க...!" என்றான்.
.
.
.

Tuesday, March 22, 2011

தில்லுதுரயும் ஆதிவாசியும்


தில்லுதுர இளைஞராய் இருந்தபோது நடந்தது இது.

தில்லுதுரயின் அலுவலகம் வனவிலங்கு வாரம் முடித்த பிறகு, அதன் தொடர்ச்சியாக காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு நாகரிகம் கற்றுக் கொடுக்க முடிவு செய்தது.

மலையின் மீது வசிக்கும் அந்த மக்கள் முழுவதும் சுகாதாரம் இல்லாது வசிப்பது கண்டு மனம் நொந்து போனார் தில்லுதுர.

நல்ல சுகாதாரமான உணவு இல்லை. உடைகள் இல்லை. வசிப்பிடம் இல்லை.

வாழும் முறையில் ஒரு ஒழுங்கு இல்லை.

தில்லுதுர தனது நான்கைந்து நண்பர்களோடு சேர்ந்து அவர்களை சுகாதாரமாய் வாழக் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார்.

அதற்காக அலுவலகத்தில் பேசி அனுமதியும் வாங்கிவிட்டார்.

ஒரு வருடம், வார இறுதியில் அந்த மலைவாழ் ஆதிவாசிகளோடே வாழ்ந்தார் தில்லுதுர.

அவர்களுக்கு நல்ல சுத்தமாக உடை உடுத்தக் கற்றுக் கொடுத்தார்.

உணவை நன்றாக சமைத்துச் சாப்பிடக் கற்றுக் கொடுத்தார்.

குடிசை கட்ட கற்றுக் கொடுத்தார்.

அவர்கள் கும்பிடும் காட்டுக் கருப்பன் தெய்வத்துக்கு கோயில் கட்டிக் கொடுத்தார்.

கும்பிடக் கற்றுக் கொடுத்தார்.

வரைமுறையாய் வாழ்வதற்கு திருமணம் என்பதைக் கற்றுக் கொடுத்து, குடும்ப வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுத்தார்.

ஒரு முழு வருடம்.

அந்த ஆதிவாசிகள் முற்றிலும் மாறிப் போனார்கள்.

கிட்டத்தட்ட, ஒரு வருடத்தில் நகரத்தில் வாழ்பவர்களைப் போல அவர்களை மாற்றிய சந்தோஷத்தில் அவர்களைப் பிரியும் தினத்தில், அந்த ஆதிவாசி மக்கள் எல்லாம் குழுமியிருக்கும் கூட்டத்தில் தில்லுதுர அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

"இந்த ஒரு வருஷத்துல நீங்க கத்துகிட்டதுலயே, நீங்க அதிகம் சந்தோசப்பட்டது எந்த விஷயத்துக்காகன்னு சொல்ல முடியுமா..?".

தில்லுதுர கேட்டதும் அந்த ஆதிவாசி ஆண்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் சந்தோஷமாய் சொன்னார்கள்.

"நாங்கள் உங்களிடம் கற்றுக் கொண்டதிலேயே மிக மகிழ்ச்சியான விஷயம் எதுன்னா, இந்த திருமண வாழ்க்கைதான்...!".

குடும்ப ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த சந்தோஷத்தில் தில்லுதுர முகம் மலர்ந்து அவர்களிடம் கேட்டார்.

"அது ஏன்னு சொல்ல முடியுமா..?".

தில்லுதுர கேட்டதும் அந்தக் கூட்டத்தில் தலைவன் மாதிரி இருந்தவன் சிரித்தபடியே மிக சந்தோஷமாய்ச் சொன்னான்.

"அதுக்கப்புறம்தான் எங்களோட பழைய மனைவிகளுக்கு பதிலா, புதுசு புதுசா மனைவிகள் கிடைச்சாங்க..!".
.
.
.

Friday, March 11, 2011

தில்லுதுர என்னும் அறிவாளி

தில்லுதுரயின் கம்பெனி அன்று கோவையின் வனவிலங்கு பாதுகாப்பு வார விழாவில் பங்கெடுத்துக் கொண்டிருந்தது.

பல்வேறு கம்பெனிகளும் பலவிதமாய் பங்கெடுத்துக் கொண்டிருக்க,
தில்லுதுரயின் கம்பெனி வனப்பாதைகளில் வாகனங்கள் செல்லும் வழிகளில், மிருகங்கள் நடமாட்டம் குறித்து சைன் போர்டுகள் வைப்பதாக உறுதி கொடுத்திருந்தது.

அதேபோல், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் வழியெங்கும் ஆங்காங்கே போர்டுகளை நட்டுக் கொண்டிருந்தனர்.

தில்லுதுரயும் அவர் நண்பரும் மலைப்பாதையில் மான் நடமாட்டம் குறித்து ஒரு போர்டை நட்டுக் கொண்டிருந்தனர்.

'காட்டில் வேலை செய்கிறோம், ஆனால் காட்டு விலங்குகள் ஒன்றைக்கூட கண்ணில் பார்க்கவில்லையே..' என்று பேசிக்கொண்டே போர்டை நடத் துவங்கினார்கள்.

போர்டை நட்டு முடித்ததும், தில்லுதுர சற்று பின்னால் சென்று போர்டை கவனித்தார்.
 
"மான் நடமாட்டம் நிறைந்த பகுதி. வேகம் குறைத்துச் செல்லவும்..." என எழுதி ஒரு அழகான மான் தாவுவதுபோல படம் போட்டு அம்சமாய் இருந்தது போர்டு.

திருப்தியுடன் அடுத்த போர்டை நடுவதற்காக சற்று தூரம் தள்ளிப் போய் குழியை தோண்ட ஆரம்பித்தார்கள்.

கொஞ்ச நேரம் இருக்கும்.

ஏதோ ஒரு சப்தம் கேட்டுத் பின்னால் திரும்பிய தில்லுதுர, ஒரு அழகான மான் துள்ளி சாலையின் குறுக்கே ஓடுவதை கவனித்தார்.

அதையே பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுர, நண்பரிடம் திரும்பி ஆச்சர்யத்துடன் சொன்னார்.

"எவ்வளவு அறிவான மான் பார்த்தியா.? எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கு அது.? நாம போர்டு நட்டு வைக்கற வரைக்கும் காத்திருந்து, இப்ப நட்ட உடனே ரோட்டை க்ராஸ் பண்ணுது..!".
.
.
.

Wednesday, March 9, 2011

தில்லுதுர என்றொரு நல்லவர்


சிறுவன் ரமேஷ் வேலை பார்ப்பது ஒரு முட்டைக் கடையில்.

கொள்முதலாய் வாங்கும் முட்டைகளை கடைத்தெருவில் இருக்கும் சில்லறைக் கடைகளில் கொண்டு போய்க் கொடுப்பதுதான் அவன் வேலை.

ஒருநாள், கூட்டம் அதிகமாய் இருந்த கடைத்தெருவின் வழியாக வரும்போது, ஒரு தடுமாற்றத்தில் வண்டி கவிழ்ந்துவிட, முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து சிதறிவிட்டது.

"ஐயோ... என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்..? இவ்வளவு முட்டையின் காசுக்கு நான் எங்கே போவேன்..?" என்று நினைக்கும்போதே பயம் வந்து, ரமேஷ் அழ ஆரம்பித்துவிட்டான்.

கடைத்தெருவில் போவோர் வருவோரெல்லாம் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்போது, அங்கே வந்த தில்லுதுர ஆதரவாய் ரமேஷின் தோள்களைத் தட்டி, "ஏன் தம்பி அழறே..? இந்த முட்டைகளுக்கு உன்னால் காசு கொடுக்க முடியாது என்றுதானே..?" என்று கேட்க, ரமேஷ் கண்களில் நீருடன் 'ஆம்.." என்று தலையை ஆட்டினான்.

உடனே தில்லுதுர, "கவலைப்படாதே.. இங்கே நான் இருக்கேன். இவ்வளவு பேர் இருக்காங்க. நாங்க உனக்கு உதவி செய்யாமப் போயிடுவோமா..?" என்றபடி பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரின் தோளில் இருந்த தோளில் இருந்த துண்டை எடுத்தார்.

தன் பையில் இருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து அதில் போட்டுவிட்டு, கூட்டத்தாரிடமும் வந்தார்.

கூட்டத்தில் இருந்தவர்கள் சிறுவனின் நிலைக்கு வருத்தப்பட்டு பத்தும் இருபதுமாய் ரூபாய்களைப் போட, கணிசமாய் பணமும் சேர்ந்தது.

வசூலை முடித்து, கூட்டத்தினர் முன்பே பணத்தை எண்ணி அந்தச் சிறுவனிடம் கொடுத்த தில்லுதுர, "அழாதப்பா... இந்தா இந்தப் பணத்தைக் கொண்டுபோய் உன் கடையில் கட்டிவிடு..!" என்று போய்விட்டார்.

கூட்டத்தினர் எல்லோரும் தில்லுதுரயின் உதவும் குணத்தை எண்ணி வியந்து கொண்டிருக்க, அந்தப் பையனிடம் ஒருவர் கேட்டார்.

"அவர் மட்டும் வரலைனா உன் கதி என்ன ஆகியிருக்கும். எவ்வளவு நல்லவர் அந்த மனுஷர். எவ்வளவு உதவும் குணம் அவருக்கு. அவரை உனக்கு முன்னமே தெரியுமா..?".

அழுது கொண்டிருந்த ரமேஷ் கண்களைத் துடைத்தபடியே சொன்னான்.

"அண்ணே.. அவர் பேரு தில்லுதுர. அவர்தான் என் முதலாளி... இந்த முட்டையெல்லாம் அவரு ஏத்தி அனுப்பினது தான்..?".
.
.

Monday, March 7, 2011

டேனியும் யானையும்


அன்று காலையில் சென்னை வந்திருந்தோம்.

கணவருடன் காஞ்சிபுரம் போவதாய் ஏற்பாடு.

சென்னையில் இருந்து கிடத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம்.

டேனி சந்தோஷத்தில் அவன் அப்பாவுடன் என்னென்னவோ பேசிக் கொண்டு வந்தான்.

நான்கு வயதுக் குழந்தைக்கு எதைப் பார்த்தாலும் ஆச்சர்யம்தானே..?.

கோவிலுக்கு வந்து, சுற்றும் முற்றும் என்ன பொம்மைகள் வாங்க வேண்டுமென்று முதலிலேயே லிஸ்ட் போட்டு விட்டான்.

உள்ளே நுழையும்போது, அழகான இரண்டு கோயில் யானைகள் அருமையான அலங்காரத்துடன் நின்று கொண்டிருந்தன.

வருகிறவர்கள் அதற்கு தின்னவோ, பைசாவோ கொடுக்க வாங்கிக் கொண்டு அது சந்தோசமாய் அவர்களை ஆசிர்வாதம் பண்ணிக் கொண்டிருந்தது.

பொதுவாய் யானை, குதிரை என்றால் சந்தோசமாய்ப் பார்க்கும் டேனியை, ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்து யானையிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்துப் போனேன் நான்.

அவனோ வர மறுத்து அழ ஆரம்பிக்க, அவன் அப்பா, "விடு.. அவன் பயப்படறான்னா எதுக்கு கூட்டிட்டு போற..?" என்று தடுத்து விட்டார்.

இருந்தாலும், அவன் பயந்தவனோ என லேசாய் அவர் யோசிப்பது தெரிந்தது.

எனக்கோ, அவன் ரெண்டு மாதம் முன்பு பேரூர் கோவிலில் யானையிடம் சந்தோஷமாய் ஆசிர்வாதம் வாங்கியது நினைவுக்கு வர, அதை என் கணவரிடம் சொன்னேன்.

என் கணவர், மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

"டேனி யானைன்னா உனக்கு பயமா..?".

அவன் சிரித்தபடி சொன்னான்.

"இல்லியே..!".

அவர் தொடர்ந்தார், "அப்ப... முன்னால யானைகிட்ட போவியாமே, இப்ப ஏன் யானைகிட்ட போக மாட்டேனுட்டே..?".

கொஞ்சம் யோசித்த டேனி சொன்னான்.

"அதுவா.. கோயில்ல இருக்கற யானை எல்லாம் காசு வாங்கிட்டு தலைல குட்டி வச்சிடுதுப்பா..!".
.
.
.

Saturday, March 5, 2011

தில்லுதுர செய்த ஆக்ஸிடென்ட்


தில்லுதுர அப்போதுதான் அந்தப் பெரிய ஃபோர்ட் என்டேவர் காரை வாங்கியிருந்தார்.

மாருதியை ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு, இவ்வளவு பெரிய வண்டியை ஓட்டுவதற்கு என்னவோ போலிருந்தது.

எட்டி எட்டி முன்னால் பார்த்தபடியே ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு, அன்று மாலையே அந்த வினை வந்து சேர்ந்தது.

ஒரு காஃபி சாப்பிடலாம் என்று புது வண்டியை எடுத்துக் கொண்டு பெருமையாய் ஹோட்டலுக்கு வந்தவர், வண்டியைப் பார்க் செய்யும் போது அங்கே நின்று கொண்டிருந்த வண்டியை இடித்து விட்டார்.

புது வண்டியில் லேசாய் ஒடுக்கு விழுந்துவிட்டாலும், செலவை இன்ஸ்யூரன்ஸில் வாங்கிவிடலாம் என்று, இன்ஸ்யூரன்ஸ் அலுவலகத்திற்கு வந்து கிளெய்ம் ரிப்போர்ட் வாங்கி அதை நிரப்பிக் கொண்டிருந்தார்.

க்ளெய்ம் ரிப்போர்ட்டில், 'இந்த ஆக்ஸிடென்ட்டைத் தவிர்க்க எதிராளி என்ன செய்திருக்கலாம் என்று கூற விரும்புகிறீர்கள்..?' என்றொரு கேள்வி இருந்தது.

ஒரு கணம் யோசித்த தில்லுதுர எழுதினார்.

"அவன், அவனோட வண்டியை வேற எங்கயாவது நிறுத்தியிருக்கலாம்..!".
.
.
.

Wednesday, March 2, 2011

சிவராத்திரி என்றாலும் சினிமாதான்

ராமசாமி ஒரு தீவிர கடவுள் பக்தன்.

அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி என ஒன்று விடாமல் விரதம் இருந்து சாமி கும்பிடுவதே அவன் வேலை.

சூரியன் உதிப்பதிலிருந்து, மறையும் வரை ராமசாமி கும்பிடும் அளவுக்கு யாராலும் சாமி கும்பிட முடியாது.

ஆனால், பக்கத்து வீட்டு பரமானந்தமோ ஒரு தீவிர நாத்திகன்.

கோவில் பக்கம் தலை வைத்ததுகூட இல்லை.

சிவராத்திரி என்றாலும் சினிமாதான் போவான்.

ஆனாலும் அவன் வாழ்க்கை என்னவோ சிறப்பாகவே இருந்தது.

நல்ல வேலை.அருமையான அழகிய மனைவி. கார், பங்களா, குழந்தைகள் என எல்லா விதத்திலும் பரமானந்தம் கொடுத்து வைத்தவன் தான்.

ஆனால், ராமசாமி நிலையோ தலைகீழ்.

மட்டமான சம்பளம். கீழ்படியாத மனைவி.அடங்காத குழந்தைகள்.

வாழ்க்கையில் அவனுடைய நாள் வரவேயில்லை.

வாழ்க்கை வெறுத்துப்போன ராமசாமி, ஒருநாள் எப்போதும்போல் மனமுருக பிரார்த்தித்து, கடவுளைப் பார்த்துக் கேட்டான்.

"ஏ கடவுளே... நான் டெய்லி உன்னை கும்பிடறேன். என்னோட ஒவ்வொரு விஷயத்தையும் உன்னை கேட்டுட்டுதான் செய்யறேன். என்னோட ஒவ்வொரு சின்னச்சின்ன பாவத்தையும் உன்கிட்ட சொல்லி மன்னிப்பு கேக்கறேன். ஆனா, அந்தப் பக்கத்துவீட்டு பரமானந்தம் உன்னைக் கும்பிடறது கூடக் கிடையாது... அவன் சந்தோஷமா நல்லா இருக்கான். நான் மட்டும் எப்பவும் கஷ்டப்பட்டுகிட்டு பணம் இல்லாம... எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை..?".

ராமசாமி கேட்டு முடித்ததும் வானத்திலிருந்து அந்த அசரீரி கேட்டது.

"ஏன்னா... அவன் இப்படி எல்லாத்துக்கும் உன்னைய மாதிரி ச்சும்மா நொய்யி நொய்யின்னு  என்னை தொந்தரவு பண்ணறது இல்ல, அதனாலதான்..! போடா... போயி வேலையப் பாரு...!".
.
.
.